ஒரு ஜாதகத்தில் தோஷம் அமைப்புகள் காணப்பட்டாலும் இலக்ன ராசிக்கு யோக கிரகங்களின் தசாக்காலங்கள் வரும் போது தோஷ அமைப்புகளால் ஜாதகருக்கு பாதிப்புகள் இருக்காது.
உதாரணத்திற்கு மீன லக்னம், கடக ராசியில் பிறந்த ஒருவருக்கு ஏழாமிடம் பாதிக்கப்பட்டதாக எடுத்துக்கொள்வோம். அவருக்கு லக்னத்திற்கும் ராசிக்கும் யோகரான செவ்வாய், குருவின் தொடர்பு பெற்று தசாபுத்தி நடத்துவதாக எடுத்துக்கொள்வோம். அவருடைய ஜாதகத்தில் 7ஆம் இடம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தாலும் ஏழாமிடம் பாதிப்பு சம்பந்தப்பட்ட எந்த ஒரு பிரச்சனையையும் செவ்வாய் தசா காலகட்டங்களில் ஜாதகர் உணரமாட்டார்.
இதே மீன லக்னம், கடக ராசியில் பிறந்த ஒருவருக்கு லக்ன அவயோகரான சுக்கிரன் எட்டில் நின்று சனியின் தொடர்பு பெற்று தசாபுத்தி நடத்துவதாக எடுத்துக் கொள்வோம். லக்ன அவயோகரான சுக்கிரனுடைய தசா நடைபெறும் பொழுது அவருடைய ஜாதகத்தில் இருக்கக்கூடிய தோஷ அமைப்புகளால் ஜாதகர் பாதிக்கப்படுவார்.
7-ஆம் இடம் (அ) 7-ஆம் வீட்டு அதிபதி பலவீனமாக இருக்கும் பொழுது, லக்ன அவயோகரான சுக்கிரனுடைய தசா காலங்கள் திருமண வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஜாதகருக்கு பாதிப்பினை ஏற்படுத்தும்.
ஒருவேளை லக்ன அவயோகர்களுடைய தசா காலங்கள் வராத பொழுது ஜாதகருக்கு தோஷ அமைப்புகளால் பெரிய அளவில் பாதிப்புகள் இருக்காது.
தசா நடத்தக்கூடிய ஒரு கிரகம், லக்னம் மற்றும் ராசிக்கு அவயோகராக இருக்கும் பொழுது ஜாதகத்தில் இருக்கக்கூடிய தோஷ அமைப்புகள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஜாதகர் மிகுந்த எச்சரிக்கையோடு இருப்பது நல்லது.
உதாரணத்திற்கு துலா லக்னத்தில் பிறந்த ஒருவருக்கு ஐந்தாமிடம் பாதிக்கப்பட்டதாக எடுத்துக்கொள்வோம்.
அவருடைய ஜாதகத்தில் லக்ன அவயோகரான குரு, ஆறாம் இடத்துடன் தொடர்பு கொண்டு தசாபுத்தி நடத்துவதாக எடுத்துக்கொண்டால் குருவின் தசா நடைபெறும்பொழுது குழந்தைகள் உடல்நலம், சொல்பேச்சு கேட்காத குழந்தைகள்,
குழந்தைகளின் முறையற்ற செயல்பாடுகளால் மன கவலைகளுக்கு உள்ளாகுதல், புத்திரபாக்கியம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஜாதகருக்கு பாதிப்புகள் இருக்கும்.
அவயோக கிரகங்களின் தசா புத்தி நடைபெறும்பொழுது ஜாதகருக்கு ஏதாவது ஒரு வகையில் ஜாதகரின் வயதினைப் பொருத்து பாதிப்புகள் இருக்கும். அது சம்பந்தப்பட்ட கிரகத்தின் காரக ஆதிபத்திய விஷயமாக இருப்பதுடன், அந்த ஜாதகத்தில் உள்ள பிற தோஷ அமைப்புகளால் ஏற்படக்கூடிய பாதிப்புகளாகவும் இருக்கும்.
இதே துலாம் லக்னத்திற்கு 5 ஆம் இடம் பாதிக்கப்படாமல், இரண்டாம் வீட்டு அதிபதி பாதிக்கப்பட்டதாக இருக்கும் பொழுது ஜாதகர் குடும்பம் மற்றும் பண விஷயங்களில் சாதகமற்ற பலன்களை சம்பந்தப்பட்ட அவயோக கிரகமான குருவின் தசாவில் சந்திப்பார்.
ஒரு ஜாதகத்தில் எந்த பாவகம் (அ) கிரகம் பாதிக்கப்பட்டு இருக்கிறதோ அது சம்பந்தப்பட்ட பாதிப்புகளை லக்ன அவயோகர்களின் தசாக்காலங்களில் ஜாதகர் உணர்வார்.
லக்ன அவயோக கிரகங்கள் வலுப்பெற்ற சுபகிரகங்களின் தொடர்பினை பெற்றிருக்கும் பொழுதும் அல்லது லக்னத்திற்கு சாதகமான இடங்களில் நின்று தசாபுக்தி நடத்தும் போதும் பாதிப்புகள் இருக்காது என்பதும் கவனிக்கப்பட வேண்டும்.
அதேபோல் பாதிக்கப்பட்ட கிரகத்தின் (அ) பாதிக்கப்பட்ட பாவகத்துடன் தொடர்புடைய கிரகங்களின் தசா காலகட்டம் வரும்பொழுதும் ஜாதகர் பாதிப்புகளை உணரக்கூடும்.
ஒரு கிரகம் அல்லது ஒரு பாவகம் பாதிக்கப்பட்டு இருந்தாலும் அந்த கிரகத்தின் தசா அல்லது அந்த பாவகத்துடன் தொடர்புடைய தசா வராத பொழுது ஜாதகர் அது குறித்து கவலைப்பட வேண்டியதில்லை.
இலக்னத்திற்கு அவயோகராக இருக்கக்கூடிய கிரகம், ராசிக்கு யோகராக இருக்கும் போது தீய பலன்கள் சற்று குறைவாக இருக்கும்.லக்னத்திற்கும் ராசிக்கும் யோகராக இருக்கக் கூடிய ஒரு கிரகம் தசா நடத்தும் போது ஜாதகருக்கு நல்லபலன்கள் அதிகமிருக்கும்.
லக்னத்திற்கும் சரி, இராசிக்கும் சரி அவயோகராக மட்டுமே இருக்கக்கூடிய கிரகத்தின் தசா நடைபெறும் பொழுது மட்டுமே ஜாதகர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
இலக்ன அவயோக கிரகங்கள் தசா புத்தி நடத்தும் பொழுது, லக்னாதிபதி வலுத்து இருக்கக்கூடிய பட்சத்தில் ஜாதகர் பிரச்சினைகளை வெற்றிகரமாக சமாளிப்பார். லக்னாதிபதி பலம் இழந்து இருக்கும்பொழுது லக்னாதிபதியை வலுப்படுத்தக்கூடிய வழிபாடுகளில் ஜாதகர் அனுதினமும் கவனம் செலுத்துவது நல்லதாகும்.
எந்த லக்னம் ஆயினும் லக்னாதிபதி பலவீனமாக இருக்கும் போது லக்னத்திற்கு காரகம் பெற்ற சூரிய பகவானை வழிபட்டு வருவது ஜாதகருக்கு தன்னம்பிக்கையையும், ஆத்ம பலத்தையும் கூட்டும்.
நன்றி..
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA B.Ed.
Cell 9659653138
ஜோதிடம் மற்றும் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட தகவல்களை பெறுவதற்கு இணைந்திருங்கள்..
https://t.me/Astrologytamiltricks
https://chat.whatsapp.com/LX7ulO2CxM1CSMtjP4qe2f