கிரகங்களின் பார்வைக்கு தரப்பட வேண்டிய முக்கியத்துவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கிரகங்களின் பார்வைக்கு தரப்பட வேண்டிய முக்கியத்துவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 8 மார்ச், 2023

பலன் கணிப்பதில் கிரகங்களின் பார்வைக்கு ஏன் முக்கியத்துவம் தரப்பட வேண்டும்?

ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் பார்வை அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். குறிப்பிட்ட ஒரு கிரகத்தின் பார்வை மற்றொரு கிரகத்தின் காரக விஷயங்களிலும், சுய ஜாதக ரீதியாக லக்னத்திற்கு  அந்த கிரகம் என்ன ஆதிபத்யம் வகிக்கின்றதோ அது சார்ந்த ஆதிபத்ய விஷயங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்த வல்லது. #Iniyavan

இயற்கை சுப கிரகங்களான குரு, சுக்கிரன், புதன், சந்திரன் (ஒளியளவிற்கு ஏற்ப)
போன்ற கிரகங்களின் பார்வை நன்மைகளை செய்ய வல்லது.
இயற்கை சுப கிரகங்கள் தனிப்பட்ட ஜாதக ரீதியாக பெற்றுள்ள வலிமையைப் பொறுத்து நன்மைகளின் அளவு கூடுதல் குறைவாக இருக்கும்.
அசுப கிரகங்களான சனி மற்றும் செவ்வாயின் பார்வை மற்றொரு கிரகத்தின் காரக மற்றும் ஆதிபத்ய விஷயங்களில் எதிர்மறைத் தாக்கங்களை ஏற்படுத்தவல்லது.
மற்றொரு அரைப் பாபரான சூரியனின் ஏழாம் பார்வை சனியுடன் சேர்ந்து இருக்கும் பொழுது பாதிப்புகளை தர வல்லது.

அசுபர்களான சனி மற்றும் செவ்வாயின் பார்வையை பொருத்தவரை சனியின் பார்வையே அதிக பாதிப்புகளை தரவல்லது.
சனி மற்றொரு பாபரான ராகுவுடன் இணைந்திருக்கும் பொழுதும் அல்லது செவ்வாயுடன் இணைந்திருக்கும் பொழுதும் சனியின் பார்வை தரக்கூடிய பாதிப்புகள் மிக அதிகம். அதேபோல் செவ்வாயும் சனியுடன் இணைந்திருக்கும்போதும் அடுத்ததாக ராகுவுடன் இணைந்திருக்கும் பொழுதும் தன்னுடைய பார்வை  படக்கூடிய இடங்களில் பாதிப்புகளை தரவல்லது.

இயற்கை சுப கிரகங்கள் தரக்கூடிய பலனை மிகவும் காலம் தாழ்த்தி தரச்செய்வதில் அல்லது தராமல் செய்வதில் சனியின் பார்வைக்கு அதிக பங்குண்டு.

உதாரணத்திற்கு சந்திரன் வலுப்பெற்ற ஒருவருக்கு அவருடைய தாயார் மீது மற்ற உறவுகளை விட அதிக பாசம் இருக்கும். தாயார் மூலம்  கிடைக்கக்கூடிய ஆதரவு, அரவணைப்பு மற்ற உறவுகளை விட அவருக்கு அதிகமாக கிடைக்க கூடும்.
இதே சந்திரன் வலுப்பெற்ற உச்ச சனியின் பார்வையில் இருப்பதாக எடுத்துக் கொண்டால் சந்திரனுடைய காரகத்துவ விஷயங்களான தாய்மீது பாசம், தாயார் ஆதரவு குறையக்கூடும். சுய ஜாதக ரீதியாக சந்திரன் ஆட்சி வீடான கடகம் லக்னத்திற்கு என்ன ஆதிபத்தியம் வகிக்கின்றதோ, அந்த ஆதிபத்திய விஷயங்களைப் பெறுவதில் ஜாதகருக்கு தடை, தாமதங்கள் ஏமாற்றங்கள் இருக்கக்கூடும்.

உதாரணத்திற்கு மகர லக்னத்தில் பிறந்த ஒருவருக்கு சந்திரன், உச்ச சனியின் பார்வையில் இருப்பதாக எடுத்துக் கொண்டால் மகர லக்னத்திற்கு சந்திரன் நண்பர்கள், வாழ்க்கைத்துனை, பங்குதாரர்கள் போன்றவற்றை சுட்டிக்காட்டும் ஏழாம் பாவக அதிபதியாக இருப்பதால் மேற்கண்ட விஷயங்களில் ஜாதகர் பல்வேறு வகையில் ஏமாற்றங்கள்,  தடை, தாமதங்கள், உறவுகள் ஒத்துழைப்பின்மை  போன்றவற்றை எதிர் கொள்வார்.

இதே சந்திரன் உச்ச சனியின் பார்வையின்றி, முழு சுபரான குருவின் பார்வையில் இருப்பதாக எடுத்துக் கொண்டால் சந்திரனின் காரக விஷயங்களான நல்ல தாயார், தாய்வழி  ஆதரவு, தாய்மொழி வல்லமை, நல்ல மனநிலை, எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் மனோபலத்துடன் திகழ்தல் இவற்றுடன் ஏழாம் பாவக ஆதிபத்திய விஷயங்களான நல்ல வாழ்க்கைத் துனை, நல்ல நண்பர்கள், நல்ல பங்குதாரர்கள் போன்றவற்றை ஜாதகர் பெறுவார்.#Iniyavan

ஒரு கிரகத்தின் வலிமையை நிர்ணயிக்கும் பொழுது மற்ற கிரகங்களின் பார்வை அந்த கிரகத்திற்கு உள்ளதா? என்பதை அவசியம் பார்க்க வேண்டும். ஏனெனில் அசுப கிரகமான சனி மற்றும் செவ்வாயின் பார்வை சுபகிரகமான குரு, சுக்கிரன், சந்திரன்(ஒளி அளவிற்கு ஏற்ப) தனித்துள்ள புதன் போன்றவற்றிற்கு கிட்டும் போது மேற்கண்ட கிரகங்களின் காரக விஷயங்களும் சுய ஜாதக ரீதியாக அந்த கிரகம் வகிக்கக்கூடிய ஆதிபத்திய விஷயங்களிலும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். இதை சம்பந்தப்பட்ட கிரகத்தின் தசா புக்தி நடக்கும்போது ஜாதகரால் நிச்சயம் உணர இயலும்.

புதன் வலுப்பெற்ற ஒருவருக்கு நல்ல பேச்சாற்றல், எழுத்து திறமை, கணிதத்தில் நல்ல திறமை போன்றவை இருக்கும்.  இதே புதன் வலுப்பெற்ற சனியின் பார்வையிலோ அல்லது செவ்வாயின் பார்வையிலோ இருக்கும் பொழுது  புதன் தரக்கூடிய காரகத்துவ பலன்களில் குறைபாடுகள் இருக்கும்.
எந்த அளவிற்கு பாதிப்பு அல்லது குறைபாடு என்பது அசுபகிரகம் எந்த அளவிற்கு வலுப்பெற்றுள்ளது என்பதைப் பொருத்ததாகும்.

மிதுன லக்னத்தில் பிறந்த ஒருவருக்கு சுக்கிரன் உச்சம் பெற்ற நிலையில் இருப்பதாக எடுத்துக் கொள்ளுங்கள். சுக்கிரன் உச்சம் பெற்றிருக்கும் போது சுக்கிரனின் காரகத்துவ விஷயங்களான நல்ல அழகான வாழ்க்கைத்துணை, நல்ல வீடு மற்றும் வாகனம், ஆடம்பர வாழ்க்கை இவற்றுடன்  மிதுன லக்னத்திற்கு சுக்கிரன் ஐந்தாம் பாவக ஆதிபத்ய பொறுப்பினை ஏற்பதால்  நல்ல குழந்தைகள் போன்றவற்றை தனது தசா புக்திகளில் ஜாதகருக்கு ஏற்படுத்தித் தருவார் என்பது ஜோதிட விதியாகும்.

சுக்கிரனின் காரக விஷயமான எதிர்பாலின ஆதரவு மற்றும் நல்ல வீடு, வாகனம் அவருக்கு எப்போதும் இருக்கக்கூடும் என்பது ஜோதிட விதியாகும்.  இதே சுக்கிரன், ராகுவுடன் இணைந்த ஆட்சி பெற்ற சனியின் மூன்றாம் பார்வையில் இருக்கும் போது மேற்கண்ட சுக்கிரனால் ஜாதகருக்கு மிகச் சிறப்பான பலன்களை  தர இயலாது போகும். மிதுன லக்னத்திற்கு யோகத்தை தரக்கூடிய சுக்கிரனுடைய தசா வந்தாலுமே ஜாதகரால் பெரிய நற்பலன்களை உணர இயலாது போகும். இங்கே சுக்கிரன் தரக்க்கூடிய பலன்களில் பாதிப்பினை ஏற்படுத்தக் கூடிய வல்லமை  சனியின் பார்வைக்கு உண்டு. வலுப்பெற்ற சனி மற்றும் செவ்வாயின் பார்வையில் சுப கிரகங்கள் இல்லாத இருப்பது மிக நல்ல நிலையாகும். அதேபோல் முக்கியமான ஆதிபத்திய விஷயங்களை சுட்டிக்காட்டக் கூடிய குழந்தைகள் குறிக்கும் ஐந்தாம் பாவகம், மணவாழ்க்கை சுட்டிக் காட்டக்கூடிய ஏழாம் பாவகம் போன்றவற்றிற்கு சனி மற்றும் செவ்வாயின் பார்வை இல்லாதிருப்பது நல்லது.

சனி மற்றும் செவ்வாயின் பார்வை எப்போது பாதிப்பதில்லை?

இயற்கை சுபரான குரு மற்றும் சுக்கிரனின் பார்வையில் சனி மற்றும் செவ்வாய் இருக்கும் பொழுது அவர்களின் பார்வை பெரிய பாதிப்புகளைத் தராது.#Iniyavan

சுபர்களான குரு மற்றும் சுக்கிரன் சமசப்தமாக இயற்கை பாப கிரகங்களை பார்க்கும் பொழுது டிகிரி அடிப்படையில் எந்த அளவிற்கு பார்வை நெருக்கம் சுபர்களுக்கு இருக்கின்றதோ, அதற்கேற்ப இயற்கை சுப கிரகங்கள் பாதிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சனியின் பார்வையில் குரு பாதிக்கப்படுவதை போல, தனித்த நிலையில் இருக்கக்கூடிய செவ்வாயின் பார்வையில் குரு பாதிக்கப்படுவதில்லை.
ஆனால் செவ்வாய்  சனியுடன் இணைந்திருக்கும்போது செவ்வாயின் பார்வையால் குரு பலவீனப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்திர அதியோகத்தில் இயற்கை பாபர்களான சனி, செவ்வாய் இருக்கும் பொழுது அவர்களின் பார்வை பெரிய பாதிப்புகளை தருவதில்லை.#Iniyavan

இயற்கை சுப கிரகங்களுடன் அசுப கிரகங்கள் இணைந்திருக்கும் போது அசுபர்களின் பார்வை பாதிப்பது இல்லை. அதே நேரத்தில் எந்த அளவிற்கு இருவரும் நெருக்கமாக இணைந்துள்ளாரோ அதற்கு ஏற்ப சுபர் பாதிக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயற்கைச் சுபர்களின் வீடுகளான தனுசு, மீனம், துலாம், ரிஷபம், பெளர்ணமி சந்திரனாக இருக்கும் போது (கடகம்) இவற்றில் சனி, செவ்வாய் தனித்த நிலையில் இருக்கும் போது அவர்களின் பார்வை பெரிய கெடுதல்களைச் செய்வதில்லை. மேற்கண்ட இயற்கைச் சுபர்களின் வீடுகளில் அசுப கிரகங்கள் தனித்து நிற்கும் பொழுது மட்டுமே பார்வை பாதிப்பைத் தராது.

சனி மற்றும் செவ்வாய் இருவரும் இணைந்து இருக்கும் பொழுதும், அல்லது இருவரும் ராகுவுடன் இணைந்து இருக்கும் பொழுதும் அல்லது ஒருவரின் பார்வை மற்றொரு இருக்கும் பொழுதும் சுபர்களின் வீடுகளில் நின்றாலும் அவர்களின் பார்வைகள் பாதிப்புகளை தரவே செய்யும்.

நவாம்சத்தில் சனி மற்றும் செவ்வாய் இயற்கைச் சுபர்களின் வீடுகளான தனுசு, மீனம், துலாம், ரிஷபத்தில் தனித்த நிலையில் இருக்கும் பொழுது அவர்களின் பார்வை பாதிப்புகளைத் தராது.#Iniyavan

ஜாதகத்திற்கு பலன்களை கணிக்கும் பொழுது  பார்வைக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும். ஏனெனில் ஒரு குறிப்பிட்ட  கிரகத்தின் பார்வை, மற்றொரு கிரகத்தின் வலிமையில் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்த வல்லது.
கிரகங்கள் தரக்கூடிய நல்ல பலன்களை
எதிர்மறை பலன்களாக மாற்றக்கூடிய தன்மை அல்லது அதிகப்படியான தாமதத்தை தரக்கூடிய வல்லமை
அசுபர்களின் பார்வைக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.#Iniyavan
அதேபோல் இயற்கைச் சுபர்களின் பார்வை பாபர்களுக்கு இருக்கும் பொழுது பாதிப்புகளை குறைக்கவும், 
சுபர்களுக்கு இருக்கும் பொழுது காரக ஆதிபத்ய விஷயங்களில் மேலான நல்ல பலன்களையும் தரவல்லது.
நன்றி..
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA B.Ed,
MA Astrology.
Cell 9659653138

ஜோதிடம் மற்றும் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட தகவல்களை பெறுவதற்கு இணைந்திருங்கள்..

https://t.me/Astrologytamiltricks

https://chat.whatsapp.com/C2NvgMxacNlFBpcyQq3Gmg

https://www.facebook.com/groups/3741