ஜாதகத்தில் பலன் சொல்லும் வழிமுறைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜாதகத்தில் பலன் சொல்லும் வழிமுறைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 28 நவம்பர், 2021

ஜாதகத்தில் பலன் சொல்வது எப்படி? - பாகம் 05

தசா புத்தி பலன் கணிப்பதில்  நிபுணத்துவம் பெறுவது எப்போது?



ஜோதிட ரீதியாக ஒரு மனிதனுக்கு நடப்பிலுள்ள தசா புத்திகளே அவனது வாழ்வின் தற்போதைய சம்பவங்களை நிர்ணயிக்க கூடியதாக இருக்கின்றன. இத்துடன் முக்கியத்துவம் பெறும் மற்றொரு விஷயம் ஜாதகரின் வயது.
ஏனெனில் வயதைப் பொறுத்து தான் ஒரு அவயோகம் கிரகத்தின் தசா நடைபெறும்போது ஜாதகருக்கு என்ன பிரச்சனை தரும் என்பதை யூகிக்க இயலும்.
உதாரணத்திற்கு அவயோக கிரகமாக புதன் இருந்து ஒருவருக்கு தசா நடத்துவதாக எடுத்துக்கொள்வோம். மேஷ இலக்ன அன்பர்களுக்கு புதன் 3,6 என்ற இரு மறைவிவிட ஆதிபத்தியங்கள் பொறுப்பினை ஏற்ற அவயோகி ஆவார்.

17 வருடங்களாக நடைபெறும் புதன் தசா ஜாதகருடைய வாழ்க்கையின் பல விஷயங்களை தீர்மானிக்கக் கூடிய ஒன்றாக இருக்கும்.

இதே புதன் தசா,  பாதிப்படைந்த நிலையில் படிக்கும் மாணவனுக்கும் வருகிறது என்றால் அவனுடைய கல்வியினில் பாதிப்பை தருவார்.
இதே புதன் தசா பாதிப்படைந்த நிலையில் ஒரு வியாபாரிக்கு வருகிறது என்றால் வியாபாரத்தில் தவறான முடிவுகளை எடுக்கச் செய்து, தவறான புத்தியை தந்து பாதிப்பினை தருவார்.
50 வயதினை கடந்த ஒரு பெரியவருக்கு (மேஷ லக்கினம்) ஆறாம் இடத்தோடு தொடர்பு பெற்று  தசா நடத்தும் போது கடன் நோய்,வறுமை, எதிரிகளால் பிரச்சனை போன்றவற்றை தருவார்.

இதிலிருந்து தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் ஜாதகரின் வயதுக்கு ஏற்றவாறு ஒரு அவயோகம் கிரகத்தின் தசா காலங்கள் பாதிப்பைத் தரக் கூடியதாக இருக்கும்.
இதோடு ஜாதகரின் ராசிக்கு புதன் என்ன ஆதிபத்தியம் பெற்று இருக்கிறார் என்பதையும் பார்க்க வேண்டும்.
ஏனெனில் அந்த ஆதிபத்யம் தொடர்பான பிரச்சினைகளும் இருக்கலாம். உதாரணத்திற்கு விருச்சிக லக்னம்,  கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு புதன் இலக்னப்படி 8, 11 என்ற ஆதிபத்தியத்தினையும், இராசிப்படி(கும்பம்)  5, 8 என்ற ஆதிபத்ய பொறுப்பினையும் ஏற்பார்.
(ஒரு அவயோகம் கிரகத்தின் தசா நடைபெறும்பொழுது அந்த அவயோக  கிரகத்தின் இரு  ஆதிபத்தியங்களில்  எந்த ஆதிபத்தியம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறதோ  அந்த ஆதிபத்தியம் சார்ந்த பிரச்சனைகள் ஜாதகருக்கு இருக்கக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.)

மேற்கண்ட கும்பராசி அமைப்பில் முப்பது வயதினைக் கடந்து ஜாதகருக்கு ஐந்தாம் பாவகம் பாதிக்கபட்டு, பாதிப்பைத் தரக் கூடிய வகையில் புதன் தசை நடைபெறுவதாக கொண்டால்
என்ன பாதிப்பு என்பதை நீங்களே யூகிக்க இயலும்.
5-ஆம் இடம் என்பது குழந்தைகள்,  பூர்வபுண்ணிய சார்ந்த விஷயங்களை குறிக்கும்.
அந்த வகையில் குழந்தையின்மை குறித்த பிரச்சினையாக இருக்கலாம் (புத்திரக்காரகன் குருவின் நிலையையும் கவனத்தில் கொள்க)
அல்லது  குழந்தைகளால் மன வேதனை போன்ற பிரச்சனையாக இருக்கக் கூடும் அந்த வகையில் ஜாதகரின் தற்போதைய நிலை என்ன என்பதை அறிய ஜோதிடத்தின் அடிப்படை விஷயங்கள் அனைத்தும் அத்துப்படியாக தெரிந்திருக்க வேண்டும்.

ஒரு அவயோக கிரகத்தின் தசா நடைபெறும்பொழுது ஜாதகர் பிரச்சனையை எந்த அளவுக்கு சமாளிப்பார் என்பதை தெரிந்து கொள்ள அவருடைய லக்னம் மற்றும் லக்னாதிபதியின் வலு தெரிந்திருக்க வேண்டும்.
உதாரணத்திற்கு அவருடைய தனவரவு பொருளாதார பலம் பற்றி அறிய 2,9,11ஆம் பாவகங்களின்  பலம், பலவீனம் தெரிந்திருக்க வேண்டும்.

ஜாதகரின் தற்போதைய நிலை என்ன என்பதை தெரிந்து கொள்ள இலக்னம் முதல் 12 பாவங்களின் ஆதிபத்தியம் சார்ந்த விஷயங்கள் மனித வாழ்வின் எவற்றுடன் தொடர்புடையது என்பதையும் நவகிரங்களின் காரகத்துவ விவரங்களும் தெளிவாகத் தெரிந்திருக்க வேண்டும்

உதராணத்திற்கு  சந்திரன் மனதுக்கு காரகம் வைக்கக் கூடிய கிரகம்.
ஆகையால்தான்  அவர் மனோக்காரகன் என்று அழைக்கப்படுகிறார்.
அந்த வகையில் சந்திரன் பாதிக்கப்பட்ட நிலையில் ஒருவருக்கு தசா புக்தி நடக்கும் போது இவருடைய மனநிலை பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்பதை அறிய இயலும்.
இப்பொழுது, ஏன் கிரகங்களின் காரகத்துவம் முக்கியம் என்பது உங்களுக்கு புரிந்திருக்கும்.
ஒரு அவயோகம் கிரகத்தின் தசா நடைபெறும் போது லக்ன ராசிக்கு, எந்த ஆதிபத்யத்துடன் அதிக தொடர்பு கொண்டுள்ளது மற்றும் அவருடைய ஜாதகத்தில் எந்த ஆதிபத்தியம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது,
எந்த கிரகம் பலவீனமாக இருக்கிறது என்பதையெல்லாம்  அறிய முற்பட்டால் பிரச்சனை என்னவென்பதை அறிந்திட இயலும்.

இத்தோடு பிரச்சனையின் தீவிரம் என்னவென்பதை கோச்சாரம் உணர்த்தும்.
அவயோக கிரகத்தின் தசா நடைபெறும்பொழுது கோட்சார ரீதியாகவும் அஷ்டம, ஏழரைச் சனி நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் ஜாதகரால் தாங்க முடியாத மன வருத்தத்தில் இருப்பதை அறிந்திட இயலும்.
இப்படிப்பட்ட நிலைகளில் ஜாதகரின் மனதிற்கு ஆறுதலாக,மனதிற்கு பலமளிக்கும் வகையில் தசாபுத்தி நிலையறிந்து நம்பிக்கை தரக்கூடிய வகையில் பதிலளிக்க வேண்டும்.

நிறைவாக ஒருவர் ஜோதிடத்தில் நிபுணத்துவம் பெற வேண்டுமென்றால் அடிப்படையான ஆதிபத்திய ,காரகத்துவ விஷயங்களில் தெளிவானது அவசியம்.
இத்தோடு சித்திரமும் கைப்பழக்கம் என்பதற்கு ஏற்ப ஜோதிடர் பலன் சொல்வதில் அனுபவங்கள் மற்றும் படிப்பினைகளைப்  பெறப் பெற,
பரம்பொருளின் கருணையாலும், பலன் எடுப்பதிலும்,கணிப்பதிலும்,
துல்லியத் தன்மையை நோக்கி செல்வார் என்பதில் ஐயமில்லை...
இணைந்திருங்கள்
நன்றி...
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA.B.Ed
Cell 9659653138..

ஜாதகத்தில் பலன் சொல்வது எப்படி? பாகம் - 04


ஜோதிட சாஸ்திரத்தைப் பொறுத்தவரை தனிமனித வாழ்வில் நடக்கும் சம்பவங்களுக்கு தசா புத்திகளே காரணமாக அமைகின்றன. மனிதனின் சொல், செயல், எண்ணம், விருப்பம் வெறுப்பு என அனைத்தும் கிரகங்களின் ஆளுகைக்கு உட்பட்டதே.

கிரகங்களின் காரகத்துவம் பலன்கள் ஆயுள் முழுவதற்கும், ஆதிபத்திய பலன்கள் தசாவின் போதும் வெளிப்படும்.
 இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் ஜாதகரின் வயது,
ஏன் இங்கே வயது கவனிக்கப்பட வேண்டும் என்றால் வயதினைப் பொறுத்தே  ஒவ்வொருவருக்கும் பலன்கள் இங்கே மாறுபடுகின்றன.

ஐந்து வயதுள்ள ஒரு குழந்தைக்கு வருகின்ற சுக்கிர புத்திக்கும்
 21 வயது வாலிபருக்கு வருகின்ற சுக்கிரபுத்திக்கும் என்ன மாறுபாடு என்பதை வைத்தே இதை தெரிந்து கொள்ள இயலும்.

அந்த வகையில் ஜாதகம் பார்க்க வந்தவரின் வயதுடன், நடந்த, நடந்து முடிந்த தசா புத்திகளை ஒப்பிட்டு பார்க்கும்பொழுது ஜாதகருக்கு என்ன நடந்திருக்கிறது?
என்ன காரணத்திற்காக வந்திருக்கிறார் என்பது புரியவரும்.
எடுத்துக்காட்டாக 20 முதல் 25 வயது வாலிபர் ஜாதகம் பார்க்க வருகிறார். அவருக்கு  அல்லது ஏழாம் அதிபதி புத்தி நடைபெறுவதாக கொண்டால் 
காதல் திருமணம் சார்ந்த விஷயங்கள் கேள்வியாக இருக்க கூடும்.

இந்நிலையில் 30 to  45 வயதுடைய ஒட்டிய மனிதன் என்ற நிலையில் சுக்கிரனின் மற்றொரு காரகத்துவமான வீடு, வாகனம்  தொடர்புடைய கேள்வியாக இருக்கும்.இங்கே நாலாம் அதிபதி நிலையையும் கவனித்தாக வேண்டும்.

வாலிப வயதில் சுக்கிர புத்தியில் கடந்தவர்களுக்கு  சுக்கிரன் பாதிக்கப்பட்டிருந்தாலும் (அ) தசா நாதனுக்கு 6, 8 ஆக இருந்தாலும் கோட்சாரத்தில் ஏழரை,அட்டமச் சனி நடைபெற்றுக் கொண்டிருந்தால் காதல் தோல்வியால் ஏற்பட்ட மன வருத்தத்தில் ஜாதகர் இருப்பதை அறிந்து கொள்ள இயலும்.
இதே நிலையில் 50 வயதைக் கொண்ட ஆணுக்கு அவயோக கிரகமாக சுக்கிரன் அமைந்து ஆறு, எட்டாமிட தொடர்பினை பெற்று தசா புக்தி நடத்தும்போது கடன், நோய், எதிரிகள், வம்பு வழக்கு நஷ்டங்கள் தொடர்பான பிரச்சினைகளை ஏற்படுத்துவார்.
இதே நிலையில் சுக்கிரன் இலக்னத்திற்கு நல்ல ஆதிபத்தியம் பெறும் போதும், அவயோக கிரகமாக இருக்கும் பொழுது, 
தீய ஆதிபத்திய இடங்களுக்கு மறைந்து நட்பு நிலையில் இருக்கும் பொழுத நல்ல பலன்களை காரகத்துவ, ஆதிபத்திய வாயிலாக நடத்தி செல்வச் செழிப்போடு வாழ வழி செய்வார்.
இதன் மூலம் நல்ல பலன் நடைபெற்றாலும், கெட்ட பலன் நடைபெற்றாலும் வயதைப் பொறுத்து நடைபெறும் என்பதை அறிய இயலும்.

அடுத்ததாக 2,7, எட்டாம் பாவகங்கள் பாதிக்கப்பட்ட நிலையில் 30 வயதினைக் கடந்த வாலிபர் வருகிறார் என்றால் அவருக்கு இன்னும் திருமணம் ஆகாத நிலையை குறிக்கும்.
ஒரு வேளை இடையில் சுக்கிர புக்தி நடந்து திருமணமாகி, கோட்சாரம்  சரியில்லாது அமைந்து ஜாதகத்தில் 11ம் இடம் வலுத்த நிலையில் இருந்து, நடக்கும் தசா புத்திகள் ஆறு,எட்டு  அமைப்பாக இருக்கும்  நிலையில் மண வாழ்க்கை  பிரிவினையை நோக்கி சென்று கொண்டிருப்பதை உணர இயலும்.

35 வயது ஆகியும் திருமணம் ஆகாத நிலையைப் பொறுத்தவரை இராசி இலக்னத்துக்கு 2 7 8ஆம் பாவகங்களுடன் சனி செவ்வாய், பாபத்துவ இராகு, கேது தொடர்பு இருக்கும்.
இதுபோன்ற நிலையில் 35 வயதை கடந்த பின்பு வரும் ஏழாம் அதிபதி புத்தி தாம்பத்திய அமைப்பினை  சுட்டிக்காட்டும் 12ம் அதிபதி, வீரிய ஸ்தானத்தை சுட்டிக்காட்டும் மூன்றாம் அதிபதி மற்றும் குடும்பாதிபதி,  பொதுவான களத்திரகாரகன் சுக்கிரன் தசா புத்திகளில் திருமணம் நடைபெற வாய்ப்புண்டு.
ஒருவேளை 7ம் அதிபதியோ அல்லது சுக்கிரனையோ இராகு கேதுக்கள் பலவீனப்படுத்தி இருந்தால் ஏழாம் அதிபதி, சுக்கிரன் புத்தி, அந்தரத்திற்கு  மாற்றாக ராகு கேதுக்கள் தொடர்புடைய புத்தி அந்தரங்களில் தான் திருமணம் நடக்கும்.

திருமணமாகி பல வருடங்களாக குழந்தை பாக்கியம் இல்லாத நிலையில் தம்பதியினரின் ஜாதகத்தில் இராசி இலக்கினத்திற்கு ஐந்தாம் இடம், 5-ஆம் அதிபதி, பொதுவான புத்திரகாரகன் குரு பாதிக்கப்பட்டிருப்பதை காண இயலும்.

அடுத்ததாக தொழில் நிலைகளைப் பொறுத்தவரை பத்தாம் வீடு அல்லது பத்தாம் அதிபதியுடன் தொடர்பு பெற்ற ஆறு, எட்டு தசா புத்திகளில் ஜாதகர் அவசரப்பட்டு தொழிலை ஆரம்பித்து,- பின்பு பெரும் பொருளாதார இழப்பை சந்தித்து இருப்பதை உணர இயலும்.

இலக்னத்தைப் பொறுத்து அவ யோக கிரகங்களின் தசா புத்திகளும் ஜாதகருக்கு தங்களது ஆதிபத்திய ரீதியாக காரகத்துவ வழிகளில் வயதிற்கு ஏற்ப பிரச்சனைகளை தருகின்றனர்.

சிறு குழந்தைகளை பொருத்தவரை அவர்களுக்கு ஏழரை, அட்டமச் சனி நடைபெறும் பொழுது பெற்றோர் பாதிக்கப்படுவதையும்,
 தம்பதிகள் இருவரில் ஒருவருக்கு நடைபெறும்பொழுது மற்றொருவரின் முறையற்ற நடத்தை நடத்தினால் மனவேதனை கொள்வதையும் காண இயலும்.

பொதுவாகவே ஒருவருக்கு சனி மற்றும் செவ்வாய் சுப தொடர்பின்றி பாப கிரகங்களுடன் இணைந்து அல்லது  பார்வையைப் பெற்று, ஆறாம் அதிபதி தசா நடந்தால்
கடன், ஆரோக்கிய குறைபாடுகள் அல்லது வேலை பார்க்கும் இடத்தில் தொடர்புடைய ஏற்படுத்துகின்றார்.

2 11 ஆம் பாவகங்களின்  வலுவினைப் பொறுத்து பணப்பிரச்சனை இருக்கின்றதா? இல்லையா என்பதையும்,லக்னாதிபதி மற்றும் சுக ஸ்தான அதிபதியின் நிலையைப் பொறுத்து ஆரோக்கிய குறைபாடு இருக்கின்றதா இல்லையா என்பதையும் தீர்மானிக்க இயலும்.
இலக்னாதிபதி வலுக்குறைந்து,
ஆறாம் அதிபதி வலுப்பெற்று தசா நடக்கும் போது, வேலை பார்க்கும் இடத்தில் ஜாதகர், அதிக வேலைப்பளு, குறைவான ஊதியம், மேலாதிகரிகளால் தொல்லை போன்ற பிரச்சினைகளை  சந்தப்பார்

கடன்,நோய், வம்பு வழக்கு அவமானங்கள் போன்ற பிரச்சினைகளைப் பொறுத்தவரை
அவயோக கிரகங்கள் வலுவாக துர்ஸ்தானங்களுடன் தொடர்புகொண்டு தசா புத்திகள் ஆரம்பமாகும் போது பாதிப்புகளும் ஜாதகருக்கு முளைவிடத் துவங்குகின்றன.
 இதுபோன்ற நிலைகளில் ஜோதிடர் முன்கூட்டியே அதை  தெரிவித்து ஜாதகரை எச்சரிக்கையுடன் இருக்க துணைபுரிதல் வேண்டும்.

இலக்ன அவயோக கிரகங்களின் மோசமான தசா புத்திகள் எப்போது சரியாகும் என்ற தீர்விற்கான கால கட்டத்தினை அறிய   நடந்து கொண்டிருக்கின்ற தசா புத்திகளின் நேர் எதிர் நிலையை கவனிக்க வேண்டும்.

அதாவது ஒரு பாவகத்திற்கு 6, 8, 12 ஆக வரும் தசா புத்திகள் நேரெதிரான பலன்களை தரும்.
 இந்த நிலையில் ஆறாம் அதிபதி தொடர்புடைய தசா புத்தி நடைபெறும்பொழுது, ஆறுக்கு, 6-ஆம் இடமான 11-ஆம் இடம் அதற்கான தீர்வினை தரும்.

அதேபோல் எட்டாம் அதிபதி தொடர்புடைய பாதிப்பான பலன்கள் நடைபெறும் போது, எட்டுக்கு எட்டாம் இடமான மூன்றாமிட தசா புத்திகள் அதற்கான தீர்வினை தரும் என்பது குறிப்பிடத்தக்கது.  #Iniyavan

நன்றி 
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA B.ED
CELL - 9659653138

ஜாதகத்தில் பலன் சொல்வது எப்படி? பாகம் - 03



ஜோதிட சாஸ்திரத்தைப் பொறுத்தவரை தசா புக்திகளே சம்பவிக்கும் அனைத்து நிகழ்வுகளுக்கும் காரணமாகின்றன. அந்த வகையில் நடந்து முடிந்த புத்தியினையும், தற்போது நடந்து கொண்டிருக்கின்ற தசா புத்தியினை ஆராய்வதுடன், பார்க்க வந்தவரின் வயதினை  ஒப்பிட்டுப் பார்ப்பதன் மூலம் ஜாதகம் பார்க்க வந்தவர் எந்த மாதிரியான பிரச்சனையில் இருப்பார் என்பதை ஓரளவு யூகிக்க இயலும்.

ஏற்கனவே 1 முதல் 10 வயது வரை உடையவர்களுக்கான பொதுவான கேள்விகள் என்னென்ன என்பதையும் அவற்றிற்கு பதிலளிக்கும் முறைகளையும், பத்து முதல் இருபது வயதுவரை உடையவர்களுக்கான பொதுவான கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய முறைகள் பற்றி விளக்கி உள்ளேன்.
அதற்கான Link முறையே...
ஒன்று முதல் பத்து வரை உடைய ஜாதகங்களுக்கான பொதுவான கேள்விகள்... விளக்கங்கள்..
https://iniyavanastrology.blogspot.com/2021/01/blog-post_31.html?m=1

பத்து முதல் இருபது வயதுவரை உடையஜாதகங்களில் உள்ள பொதுவான கேள்விகள் பதிலளிக்க வேண்டிய முறைகள்
https://iniyavanastrology.blogspot.com/2021/04/blog-post.html?m=1

மேற்கண்ட இரு பதிவுகளையும் படிக்காதவர்கள் அதைப் படித்துவிட்டு இந்த பதிவை படிக்கும் பொழுது  தெளிவான விஷயங்கள் உங்களுக்கு தெரிய வரும்..

இன்றைய பதிவினில் 20 முதல் 35 வயது வரை உடையவர்களின் ஜாதகமாக இருப்பின் எது தொடர்புடைய கேள்விகளாக இருக்க கூடும் என்பதை ஆராய்வோம். முதன்மையான கேள்வி உயர்கல்வி பற்றியதாகவே இருக்கும். ஒன்பதாம் பாவகம் தொடர்புடைய தசா புக்தி நடை முறையில் இருந்தால் உயர்கல்வி தொடர்புடைய கேள்வியாகவே பெரும்பாலும்  இருக்கிறது.

ஏனெனில் ஒன்பதாம் பாவகம் பட்ட மேற் கல்வியை குறிக்கின்றது. ஒன்பதாம் அதிபதி ஆட்சி உச்சம் பெற்று இருப்பது,
(இயற்கைப் பாபக் கிரகங்கள் ஒன்பதாம் வீட்டில் ஆட்சி உச்சம் பெறும்பொழுது சுபர் தொடர்பு இருப்பது அவசியம்)
 சுப கிரகங்கள்  ஒன்பதாம் வீட்டில் இருப்பது, கண்டிப்பாக உயர்கல்வியில் உயரிய இடத்தைப் பெற்றுத் தரும்.

மேற்கண்ட வழியில் ஜாதகர் உயரிய கெளரவத்தையும் புகழையும் நிலை நாட்டுவார்.
முனைவர் பட்டங்களைப் பெற்றவர்களின் ஜாதகத்தில் கண்டிப்பாக ஒன்பதாம் அதிபதி நல்ல நிலையில் இருப்பார்.
மேற்கண்ட ஒன்பதாம் அதிபதி, தன ஸ்தான அதிபதியான 2 ஆம் அதிபதியுடன் அல்லது இரண்டாம் இடத்துடன் தொடர்பு கொள்ளும் பட்சத்தில் கற்ற கல்வியால் மேன்மையானதாக தன வரவை பெறுவார். அந்த வகையில் உயர்கல்வி குறித்த கேள்விகளாக இருப்பின் 9ஆம் இடத்தை ஆராய்ந்து பதிலளிக்க வேண்டும்.
கிரகங்கள் தொடர்புடைய கல்வியும் அறிந்து வைத்திருப்பது அவசியம்.

அடுத்ததாக வேலை பற்றிய கேள்வியாக இருக்கலாம்.
எப்போது வேலை கிடைக்கும்? குறிப்பாக அரசு வேலைக்கு வாய்ப்பு உண்டா என்பது கேள்வியாக இருக்க கூடும்.

(ஒருவருக்கு அரசு வேலை எப்போது கிடைக்கும் விரிவான விளக்கங்கள்)
https://iniyavanastrology.blogspot.com/2020/12/blog-post_30.html?m=1

6-க்குடையவர், 10-க்குடையவர் தசா புத்தி நடப்பில் இருக்கும் பட்சத்தில் பெரும்பாலும் கேள்வி உத்தியோகம் குறித்த ஒன்றாகவே இருக்கும்.
 ஏன் ஆறாம் அதிபதி நோயை தராதா? என நீங்கள் கேட்கலாம். இளம் வயதினருக்கு பெரும்பாலும் நோய் தொந்தரவு இருக்காது தானே. அதில் சந்தேகம் வரும் பட்சத்தில் நான்காம் அதிபதியான சுகாதிபதியின் நிலையையும் கவனித்துக் கொள்ளுங்கள்.

வேலை எப்போது கிடைக்கும் என்பதைப் பொறுத்தவரை பாக்கியாதிபதி நிலையை கவனித்து பதில் கூற வேண்டும்.
நான் அறிந்தவரை பெரும்பாலான ஜாதகங்களில் அரசு வேலை அமைந்த காலகட்டங்களில் நடைபெறும் திசா புத்தியில் பாதிக்கப்படாத பாக்கியாதிபதி தொடர்பு இருக்கவே செய்கின்றது.

அடுத்ததாக திருமணம் தொடர்புடைய கேள்வியாக இருக்கும் 2, 7 எட்டாம் பாவங்கள் பாதிக்கப்படாத வகையில் பெரும்பாலும் 21 to 27 வயதிற்குள் திருமணம் நடந்திருக்கும். 2,7,8 ஆம் பாவகங்கள் பாதிக்கப்பட்டு இருந்தால் திருமணக் கனவு முப்பதினை தாண்டிய பிறகே நனவாகக் கூடும். பாதிப்பின் தீவிரத்தைப் பொருத்து மேற்கொண்டும் திருமணம் தாமதமாகலாம். பொதுவாகவே 2,7,8  ஆம் பாவகங்களில் பாபக் கிரகங்களின் தொடர்பு இருக்கும் பொழுது முப்பதை கடந்த பின்னரே திருமணம் செய்தாக வேண்டும்.

அடுத்ததாக குழந்தை பாக்கியம் குறித்த கேள்வியாக இருக்கலாம். குழந்தை பாக்கியம் குறித்த கேள்விகளுக்கு முதன்மை கிரகமான புத்திரகாரகன் குருவின் நிலை, 5 ஆம் அதிபதியின் நிலை, பெண்கள் எனும் பட்சத்தில் ஒன்பதாம் அதிபதியின் நிலை. ஆண்களுக்கு ஆண்மையை சுட்டிக்காட்டும்  வீரிய ஸ்தான அதிபதியான மூன்றாம் அதிபதியின் நிலை இவற்றை கவனத்தில் கொண்டே பலன் நிர்ணயிக்கப்பட வேண்டும்.

பெரும்பாலும் குருபகவான் வக்கிரம் பெற்று சுபர் தொடர்பு இல்லாத நிலையில் உள்ளவர்கள்,
மூன்றாம் அதிபதி  வக்கிரம், நீசமடைந்து சுபர்தொடர்பின்றி பலவீனமடைந்து இருப்பவர்கள். ஐந்தாம் அதிபதி பலவீனமடைதல் இது போன்ற அமைப்புகளில்  காலம் கடந்து  தாமதாகமாகவே புத்திர பாக்கியம் கிடைக்கின்றது.
சுபர் தொடர்பு இருப்பின் பலன்களில் மாறுபாடு உண்டு.

அடுத்ததாக சுய தொழில் குறித்த கேள்வியாக இருக்கலாம். ஆறாம் அதிபதியை விட பத்தாம் அதிபதி வலுத்தால் சுய தொழிலில் மேன்மை உண்டு.ஆறாம் அதிபதி வலுத்து பத்தாம் அதிபதி பலம் குறைந்தால் அடிமை உத்யோகமே சிறந்ததாகும். பத்தாம் அதிபதி நல்ல நிலையில் இருந்தாலும் அட்டம, விரய ஸ்தான அதிபதிகளுடன் தொடர்பில் இருப்பின் அது தொடர்புடைய தசா புத்திகளில் ஜாதகர் பெரும் பொருளாதார இழப்பை சந்திக்கின்றார். பத்தாம் அதிபதி தசா நடைபெறும்பொழுது அதுகுறித்த கேள்விகளில் இதைக் கவனத்தில் கொண்டாக வேண்டும்.

அடுத்ததாக கணவன் மனைவியிடையே பிரச்சனை, கருத்து வேறுபாடுகள், ஒழுக்கக் குறைபாடு, தன்னுடைய துறையின் தவறான முறையற்ற செயல் பாடுகளால் மற்றொருவர் மனவேதனை அடைதல் தொடர்புடைய கேள்விகள்.

பொதுவாகவே வாக்கு ஸ்தானத்தில் பாப கிரகங்கள் நின்று தசா புக்தி நடத்தும் போது பேச்சால் குடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பெரும் பிரிவினை ஏற்பட வாய்ப்புண்டு.
அதேபோல் ஏழு மற்றும் எட்டாம் பாவகங்களில் பாப கிரகங்களின் தசா புக்தி நடக்கும்போது  தன்னுடைய துணையால் ஜாதகர் மனவேதனை அடைவதற்கான வாய்ப்பு உண்டு.

இங்கே எட்டாம் வீட்டை குறிப்பிட காரணம்
ஏழாம் வீட்டை உங்களுடைய துணையின் இலக்னமாக பாவிக்கும் பொழுது எட்டாமிடம்  துணையின் குடும்ப  ஸ்தானமாக வரும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
சுக்கிரனின் வீடுகளில் பாப கிரகங்கள் நின்று தசாபுத்தி நடத்தி, கோட்சார ரீதியாக அட்டமச் சனி மற்றும் ஏழரைச் சனி நடைபெறும் காலகட்டங்கள். நீச சனியுடன் சுக்கிரன் தொடர்பு கொள்ளுதல். நீச சுக்கிரனுடன்  சனி தொடர்பு, எட்டாம் வீட்டில் பாபத்துவ நிலையில் இருக்கும் சுபர் தொடர்பற்ற சுக்கிரனின் தசா புத்திகளில்  ஒருவர் மனம் பிறழ்ந்து நெறி தவறி அவமானம், குடும்ப பிரிவினை சந்திக்க வாய்ப்புண்டு.
இதுபோன்ற நிலைகளில் தமக்குத்தாமே சுய கட்டுப்பாட்டை  பின்பற்றியாக வேண்டும்.
 மேலும் குடும்பாதிபதி நீசமாகி பாப கிரக தொடர்பு இருத்தால்  அது தொடர்புடைய திசாபுத்திகளில்  குடும்பமே அவமானத்தைச் சந்திக்க வாய்ப்பு உண்டு.
ஆனால் இவற்றினை முன்கூட்டியே தகுந்த ஜோதிடரின் துணைகொண்டு அறியும் பொழுது தன்னுடைய சுய புத்தி, விழிப்புணர்வின்  துணை கொண்டும் தொடர்புடைய தெய்வ வழிபாட்டை மேற்கொள்வதன் வாயிலாகவும்,
ஜோதிடத்தின் வழிகாட்டுதல் வாயிலாகவும் கண்டிப்பாக பாதிப்பின் வீரியத்தை பெருமளவு குறைத்துக்கொள்ள  இயலும்.

ஜோதிடம் என்பதே வழிகாட்டும் சாஸ்திரம் தானே...

அடுத்த பதிவில் 35 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்களின் ஜாதகங்களுக்கான  பொதுவான கேள்விகள் என்னென்ன என்பதைப் பார்ப்போம்.
இணைந்திருங்கள்..
நன்றி
ப.இனியவன் கார்த்திகேயன் MA B.ED
Cell 9659653138

சனி, 17 ஏப்ரல், 2021

ஜாதகத்தில் பலன் சொல்வது எப்படி? பாகம்- 2


அனுபவம் வாய்ந்த பல ஜோதிடர்கள் ஜாதகத்தை கொடுத்தவுடன் சில மணித்துளிகள் ஜாதகத்தை ஆராய்ந்து விட்டு இந்தந்த விஷயங்கள் நடந்திருக்கின்றன. தற்பொழுது நீங்கள் இந்த விஷயத்திற்காக ஜாதகம் பார்க்க வந்திருக்கிறீர்கள் என்பதை மிகத் தெளிவாகச் சொல்லி பிரம்மிக்க வைப்பார்கள்.

இது எவ்வாறு சாத்தியம்?  அவர்களால் மிகச்சரியாக துல்லியமான காரணத்தை எவ்வாறு சொல்ல முடிகின்றது.
ஒவ்வொன்றாய் பார்ப்போம்.
இதற்கு முதலில் துணை நிற்கும் விஷயம் தசா புத்திகள். 
ஏனெனில் ஜோதிட சாஸ்திரத்தைப் பொறுத்தவரை தசா புத்திகளே நடக்கக்கூடிய சம்பவங்களை நிர்ணயிக்க கூடிய வல்லமை பெற்றதாக இருக்கின்றது.

இவற்றுடன் ஜோதிடர் ஜாதகர் என்ன நோக்கத்திற்காக வந்திருக்கிறார் என்பதை துல்லியமாக அறியத் துணை நிற்கும் மற்றொரு விஷயம் ஜாதகரின் வயது என்றால் மிகையில்லை.

ஜாதகரின் தற்போதைய வயதினை கொண்டு கேள்வியை யூகிக்க இயலும்.
ஏற்கனவே 1 முதல் 10 வயதிற்கும் குறைவான குழந்தைகளின் ஜாதகத்தை கொண்டு வந்தவர்களின் கேள்விகள் என்னவாக இருக்கும் கூடும். அதற்கான தீர்வுகள் என்னென்ன என்பதை விளக்கி இருந்தேன்.
(முந்தைய பதிவை படிக்க ...https://iniyavanastrology.blogspot.com/2021/01/blog-post_31.html?m=1)

இந்தப் பதிவினில் 10 முதல் 20 வயது வரை உள்ளவர்கள் ஜாதகங்களாக இருப்பின் என்ன கேள்வியாக இருக்கலாம். அதற்கான தீர்வுகள் என்னென்ன என்பதை ஆராய்வோம்.

முதன்மையான கேள்வி குழந்தையின் கல்வி தொடர்புடையதாக இருக்கும். பையன் சரியாகப் படிப்பதில்லை. சரியாகி விடுவானா? இனிவரும் காலங்களில் எப்படி படிப்பான் என்ற கேள்விகள் வாடிக்கையானது.

அடுத்ததாக ஆரோக்கியம், உடல் நிலை குறித்த கேள்விகளாக அமையலாம். குழந்தைகளின் ஒழுங்கீனமான பழக்க வழக்கங்கள், குழந்தைகளின் பிடிவாதம்,
பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்குமான  முரண்பாடுகள், சண்டை சச்சரவுகள்.
 பெண் குழந்தைகள் எனும் பட்சத்தில் திருமணம் தொடர்பான கேள்விகள், 15 வயதினை தாண்டிய நபர்கள் எனும் பட்சத்தில் காதல் விவகாரங்கள் அது தொடர்புடைய பிரச்சினைகள் அவமானங்கள், பாதிப்பு தொடர்புடைய கேள்விகளாக இருக்கக்கூடும்.

பொதுவாக 2,4,9 ஆம் பாவங்கள் கல்விக்குரிய இடங்கள். அவை பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கும் போது சனி,செவ்வாய் ராகு கேதுக்கள், அட்டம, விரையாதிபதி தொடர்பினை பெறும்போது கல்வி தொடர்புடைய கேள்விகள், இடர்பாடுகள், பாடங்களில் தோல்வி குறித்த கேள்வியாக கேட்கலாம்.

பெரும்பாலும் பருவ வயதில் வரக்கூடிய ராகு, சுக்கிரன் புத்திகள், ஏழாம் அதிபதி புத்தி, சுக்கிரன் வீடுகளான ரிஷபம் துலாம் இவற்றில் நின்ற ராகு,கேது,சனி, செவ்வாய் புத்தியில் எதிர்பாலினம் தொடர்பான விஷயங்களில் தவறான ஈடுபாட்டை தந்து அதன் மூலம் பெயர் கெட வைக்கும்.

இவை மட்டுமின்றி 16, 17 வயது நிரம்பிய ஜாதகம் எனில் அடுத்து என்ன படிக்க வைக்கலாம்? எந்த துறை சரியாக இருக்கும் என்பன போன்ற கேள்வியாக இருக்க கூடும். இது போன்ற நிலைகளில்  ஜாதகத்தில் எந்த கிரகம் வலுப் பெற்றுள்ளது? வரக்கூடிய தசா புத்தி காலங்கள் எந்த நிலையில் உள்ளது. கிரகங்கள் தரக்கூடிய கல்வி,
இவற்றினை ஆராய்ந்து என்ன படிக்க வைக்கலாம் என்பதை பதிலளிக்க வேண்டும்.

கொண்டுவரப்பட்ட ஜாதகத்தில் 4, 9 ஆம் அதிபதிகள் ஆறாம் அதிபதி தொடர்பை பெற்று தசாபுத்தி நடத்தும்பொழுது (அ)
4,9 இல் நின்ற ஆறாம் அதிபதி தசா புத்தி
குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்குமான முரண்பாடுகள், சண்டை சச்சரவுகள்,சொல் பேச்சு கேட்காமை போன்ற கேள்விகளாக இருக்கலாம். விரையாதிபதி தசாபுத்தி நடைபெறும் நிலையில் அவர் எந்த பாவத்துடன் தொடர்பு கொண்டுள்ளார் என்பதை பொருத்து பிரச்சனை இருக்க வாய்ப்புண்டு. உதாரணத்திற்கு விரையாதிபதி நான்காமிட தொடர்பினை பெரும் பொழுது கல்வியில் மேன்மையின்மை,
தாய்வழி சண்டை சச்சரவுகள்,எட்டாம் இட தொடர்பை பெறும் போது விபத்துகள் குறித்த பிரச்சினையாக இருக்கலாம்.
சில பெற்றோர்கள் பையனை விடுதியினில் சேர்ந்து படிக்க வைக்கலாமா? அல்லது வீட்டிலேயே வைத்து படிக்க வைக்கலாமா என்று கேட்பார்கள். உதாரணத்திற்கு ராகு தசா அல்லது நான்காம் ஒன்பதாம் பாவகங்களுடன் தொடர்பு கொண்ட ஆறாம் அதிபதி, அட்டமாதிபதி விரையாதிபதி தசா புக்திகள்,
அல்லது இவற்றுடன் தொடர்பு கொண்ட நான்காம் ஒன்பதாம் அதிபதி தசா புத்திகள், கோச்சார ரீதியாக அஷ்டமச்சனி, ஏழரைச்சனி நடக்கும் கால கட்டங்களில் குழந்தை வீட்டில் இருப்பதை விட பெற்றோரை பிரிந்து இருப்பதே சிறந்ததாகும்.

குழந்தையின் ஜாதகத்தில் அட்டமாதிபதி, ஏழாமிட தொடர்பு பெற்று தசா புக்தி நடக்கும்போது நண்பர்களின் பிரச்சனை குறித்த கேள்வியாக இருக்கலாம்.

இதுபோன்று  எண்ணற்ற விஷயங்கள் இருக்கின்றன. வயதிற்கு ஏற்ற பொதுவான கேள்விகளை முன்கூட்டியே யூகித்து வைத்து,
நடந்து முடிந்த, நடக்க கூடிய தசா புத்திகளை தொடர்புபடுத்திப் பார்க்கும் பொழுது குறித்த பிரச்சினை என்ன என்பது தெரியவரும். அதற்கான தீர்வும் தெரியவரும்.

நிறைவாக இலக்னம் முதல் 12 பாவகங்கள், மற்றும் நவகிரகங்கள்  பல்வேறு  ஆதிபத்ய,காரகத்துவம் சார்ந்த விஷயங்களைக் குறிக்கும். அந்த வகையில் ஜோதிடர், தொடர்புடைய கேள்வி எந்த விஷயம் என்பதைச்  சரியாக தேர்ந்தெடுக்க இறையருள் அவசியமாகும்.

அடுத்த பதிவில் 21 முதல் 35 வயது வரை உள்ளவர்கள் ஜாதகம் பார்க்க வரும் நிலையில் அவர்களின் பொதுவான கேள்விகள் எதுவாக இருக்கும் என்பதைப் பார்ப்போம்...
இணைந்திருங்கள்...
நன்றிகளுடன்..
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA B.ED
Cell 9659653138

ஞாயிறு, 31 ஜனவரி, 2021

ஜாதகத்தில் பலன் சொல்வது எப்படி? பாகம்- 01

ஜாதகம் பார்க்க வந்திருப்பவர் என்ன நோக்கத்திற்காக வந்திருக்கிறார் என்பதை சொல்வது எவ்வாறு?

ஜோதிட சாஸ்திரத்தைப் பொறுத்தவரை தசா புக்திகளே சம்பவிக்கும் அனைத்து நிகழ்வுகளுக்கும் காரணமாகின்றன. அந்த வகையில் நடந்து முடிந்த புத்தியினையும், தற்போது நடந்து கொண்டிருக்கின்ற தசா புத்தியினை ஆராய்வதுடன், பார்க்க வந்தவரின் வயதினை  ஒப்பிட்டுப் பார்ப்பதன் மூலம் ஜாதகம் பார்க்க வந்தவர் எந்த மாதிரியான பிரச்சனையில் இருப்பார் என்பதை ஓரளவு யூகிக்க இயலும்.

உதாரணத்திற்கு ஒன்று முதல் பத்து வயது வரை உள்ள குழந்தையின் ஜாதகத்தை ஒருவர் கொண்டு வந்திருக்கிறார் என்றால் பெரும்பாலும் கேள்வி குழந்தையின் ஆயுள் பலம், ஆரோக்கியம் தொடர்புடைய கேள்வியாகவோ அல்லது குழந்தை பிறந்த பின்பு பெற்றோரின் பொருளாதார மேம்பாடு குறித்த கேள்வியாக இருக்க கூடும். இதோடு மட்டுமின்றி அடுத்த குழந்தையை பற்றி கேள்வியாகவோ அல்லது குழந்தை பிறந்த பின்பு பெற்றோர்களுக்கு இடையேயான  சண்டை, கருத்து வேறுபாடு அல்லது பிரிவினை குறித்த கேள்வியாகவும் இருக்கக் கூடும்.

மேற்கண்ட விஷயங்களுடன் குழந்தைக்கு தற்போது நடந்து கொண்டிருக்கின்ற தசா புத்தி மற்றும் கோட்சார நிலைகளையும் தொடர்புபடுத்திப் பார்க்கும்போது பிரச்சனையை கண்டறிய இயலும். உதாரணத்திற்கு குழந்தையின் ஜாதகத்தில் சுகஸ்தானமான நான்காம் அதிபதி பாதிக்கப்பட்ட நிலையில் 6ம் அதிபதியோடு தொடர்புடைய தசாபுக்திகள் நடக்கும் போது கண்டிப்பாக கேள்வியானது குழந்தையின் ஆரோக்கியம், உடல்நலம் குறித்த பிரச்சினைகளாக  இருக்கக்கூடும். குழந்தை இலக்னப்படி பன்னிரு பாவகங்கள் குறிக்கும் உடல் பாகங்களையும், இவற்றோடு காலபுருஷ இலக்னப்படி  உடல் பாகங்களை ஆராயும் போது எந்த உறுப்பு சம்பந்தமான பிரச்சினை உள்ளது என்று தீர்மானிக்க இயலும்.

கோட்சார ரீதியாக குழந்தைக்கு ஏழரை மற்றும் அட்டமச் சனி நடைபெற்று,
தசாபுக்தி ரீதியாக 4 மற்றும் 9 ஆம் அதிபதிகள் பாதிப்படைந்த நிலையில், வலுப்பெற்ற 6, 8 ஆம் அதிபதிகளுடன் தொடர்பு கொண்டு நிலையில் தசா புத்திகள் நடக்குமானால் தாய், தந்தை  இடையே கருத்துவேறுபாடு, பிரிவினை, உடல்நலப் பிரச்சனைகள் குறித்த கேள்வியாக இருக்க வாய்ப்பு உண்டு.
குழந்தையின் ஜாதகத்தில் வலுப் பெற்ற நிலையில் மூன்றாம் அதிபதியுடன் தொடர்புடைய தசா புக்திகள் நடைபெறுமானால் அடுத்த குழந்தை என்னவாக இருக்கும் என்பது குறித்த கேள்வியாக இருக்கலாம்.

குழந்தையின் ஜாதகத்தில் 2,11ம் பாவகங்கள் வலு குறைந்து, பன்னிரண்டாம் பாவகம் வலுப்பெற்று தசாபுக்தி நடக்குமேயானால் குழந்தை பிறந்த பின்பு பொருளாதாரப் பிரச்சினைகள், விரயச் செலவுகள் ஏற்பட்டிருப்பதைக் உணர்த்தக் கூடும். 2,11ம் பாவகங்கள் வலுப்பெற்று நான்கு, ஒன்பதாம் பாவகங்கள் தொடர்புபெற்று தசாபுக்தி நடக்கும் போது குழந்தை பிறந்த பின்னர் தாய், தந்தையின் பொருளாதாரம் மேம்பட்டு இருப்பதை உணர்த்தும்.
அதோடு தாய், தந்தையரின் தொழில் நடவடிக்கைகள் குறித்த கேள்வியாகவும் இருக்கலாம்.
அந்த வகையில் நடந்து முடிந்த, நடப்பில் உள்ள தசா மற்றும் புத்தி நாதன் குறித்து ஆதிபத்திய விஷயங்களையும் கோட்சாரத்தையும் ஆராயும் பொழுது என்னை கேள்வி என்பதை ஓரளவு கண்டறிய இயலும்.

நிறைவாக இலக்னம் முதல் 12 பாவகங்கள், மற்றும் நவகிரகங்கள்  பல்வேறு காரகத்துவம் சார்ந்த விஷயங்கள் குறிக்கும். அந்த வகையில் ஜோதிடர், தொடர்புடைய கேள்வி எந்த விஷயம் என்பதைச்  சரியாக தேர்ந்தெடுக்க இறையருள் அவசியமாகும்.

அடுத்த பதிவில் 10 முதல் 20 வயது வரை உள்ளவர்கள் ஜாதகம் பார்க்க வரும் நிலையில் அவர்களின் பொதுவான கேள்விகள் எதுவாக இருக்கும் என்பதைப் பார்ப்போம்...
இணைந்திருங்கள்...
நன்றிகளுடன்..
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA B.ED
Cell 9659653138