சுக்கிரன் மறைவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுக்கிரன் மறைவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 26 ஜனவரி, 2023

சுக்கிரனின் மூன்று மற்றும் எட்டாமிட மறைவினில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்...



களத்திர காரகன் என்று அழைக்கப்படக்கூடிய சுக்கிரன் 3 மற்றும் எட்டாம் இடங்களில் இருப்பது முழு மறைவான நிலையாகும். 6 மற்றும் 12ஆம் இடங்களில் இருப்பதும் மறைவாக கருதப்பட்டாலும் தன்னுடைய மூலத்திரிகோண வீடான துலாத்திற்கு ஆறாம் வீட்டில் உச்சம் பெறுவதால் ஆறாம் வீட்டில் இருக்கக்கூடிய சுக்கிரனை மறைவாக எடுக்க வேண்டியதில்லை. அதேபோல்
காலபுருஷ லக்கினத்திற்கு 12ம் வீட்டில் சுக்கிரன் உச்சம் பெறுவதால் 12-ஆம் இடத்தில் சுக்கிரன் இருப்பதையும் மறைவாக எடுக்க வேண்டியதில்லை.

3 மற்றும் எட்டாம் இடத்தில் மறைந்திருக்கக் கூடிய சுக்கிரன் தன்னுடைய காரகத்துவ விஷயங்களில் ஜாதகருக்கு குறைபாடுகளைத் தருவார். திருமணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் தடை தாமதங்களைத் தருவார்.
திருமணத்திற்குப் பின்னர் 3 மற்றும் எட்டாம் இடங்களில் மறைந்திருக்கக் கூடிய சுக்கிரன் சம்பந்தப்பட்ட தசா புக்திகளில் வாழ்க்கைத் துணை வகையில் கருத்து வேறுபாடுகள், சண்டை சச்சரவுகளை தர வாய்ப்புண்டு.
எல்லா லக்னங்களுக்கும் 3 மற்றும் எட்டாம் இடங்களில் மறைந்திருக்கக் கூடிய சுக்கிரன் காரகத்துவ ரீதியாக குறைபாடுகளை தருவாரா என்று கேட்டால் கிடையாது.
மேஷ லக்கினத்தை பொறுத்தவரை மூன்றாம் இடமான மிதுனத்தில் சுக்கிரன் இருப்பது கெடுதல்கள் இருக்காத அமைப்பே. ஏனெனில் மூன்றாம் இடமான மிதுனம் சுக்கிரனுக்கு நட்பு வீடாகும்.
நட்பு வீட்டில் மறைந்த நிலையில் இருக்கக் கூடிய சுக்கிரன், சனி, செவ்வாய்,அமாவாசையை நெருங்கிய சந்திரன் தொடர்பு பெறாதவரை  பாதிப்புகளைச் செய்து விடுவதில்லை.

மேஷ லக்னத்திற்கு எட்டாம் இடமான விருச்சிகத்தில் செவ்வாய் இருப்பது நல்ல நிலை அல்ல.ஏனெனில் விருச்சம் அவருக்கு நல்ல வீடு அல்ல. இங்கே  இருக்கக் கூடிய சுக்கிரன் முழுமையான மறைவாக கருதப்படுவார்.
மேஷ லக்கினத்திற்கு ஏழாம் அதிபதியான சுக்கிரன் எட்டாம் வீட்டில் இருக்கும்பொழுது திருமண விஷயங்களில் தாமதத்தை தருவார். மேற்கொண்டு சனி மற்றும் செவ்வாய், அமாவாசையை நெருங்கிய சந்திரன் தொடர்பை பெறுவதும் நல்லதல்ல. 

ரிஷப லக்னத்திற்கு சுக்கிரன் மூன்றாம் வீட்டில் இருப்பது நல்லதல்ல. ஏனெனில் அது அவருக்கு பகை வீடு ஆகும். இங்கே இருக்கக்கூடிய சுக்கிரன் திருமண விஷயங்களில் தாமதத்தை தருவார்.

எட்டாம் இடமான தனுசில் இருப்பதை பொறுத்தவரை அது அவருக்கு பகை வீடு என்றாலும்,  தனுசு முழு சுபரான குருவின் மூலத்திரிகோண வீடாக இருப்பதால் காரகத்துவ விஷயங்களில் பெரியளவினில் பாதிப்புகள் இல்லாத நிலையே.

மிதுன லக்னத்திற்கு சுக்கிரன் மூன்றாம் வீட்டில் இருப்பதை பொறுத்தவரை மூன்றாம் இடமான சிம்மம் அவருக்கு பகை வீடு. அந்த வகையில் காரகத்துவங்களில் குறைபாடுகள் இருக்கவே செய்யும்.
மற்றொரு மறைவு ஸ்தானமான எட்டாம் இடமான மகரத்தில் இருப்பதை பொறுத்தவரை மகரம் நட்பு வீடாகவும், சர ராசியாகவும் இருப்பதால் தனது காரக பலன்களைக் கொடுக்கக் கூடிய நிலையில்தான் இருப்பார். ஆனால் இங்கே சனி, ராகுவுடன் இணைவதும் உச்ச செவ்வாயுடன் இணைவதும் நல்லதல்ல.எதிர் பாலின ரீதியாக கெட்ட பெயரை ஏற்படுத்துவார்.

கடக லக்கினத்திற்கு 3ஆம் இடமான கன்னியில் சுக்கிரன் மறைந்திருப்பதை பொறுத்தவரை நீசம் பெற்ற நிலையில் இருப்பார்.
சுக்கிரனுடைய  நண்பரான புதனுடைய வீடாக கன்னி இருப்பதால் இங்கு இருக்கக்கூடிய சுக்கிரன் காரகத்துவ ரீதியாக பெரிய குறைபாடுகளை தந்து விடமாட்டார். இருப்பினும் சனி, செவ்வாய்,அமாவாசையை நெருங்கிய சந்திரன் மற்றும் ராகுவினுடைய தொடர்பை இங்கே நீசம் பெற்றுள்ள சுக்கிரன் பெறக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.
கடக லக்கினத்திற்கு எட்டாம் இடமான கும்பத்தில்சுக்கிரன் மறைந்திருப்பதை பொறுத்தவரை அது அவருக்கு நட்பு வீடு என்றாலும் இங்கு இருக்கக்கூடிய சுக்கிரன் காரகத்துவ ரீதியாக சற்று லேசான குறைபாடுகளை ஏற்படுத்தவே செய்வார்.சிம்மத்தை பார்ப்பதால் தந்தை மற்றும் அரசு வழியில் சாதகமான பலன்களை தருவார். சனி, செவ்வாய் அமாவாசை நெருங்கிக் கொண்டிருக்க கூடிய சந்திரன் மற்றும் ராகுவினுடைய தொடர்பை பெறாமல் இருப்பது நல்லது.

சிம்ம லக்கினத்திற்கு 3 மற்றும் எட்டாமிடத்தில் மறைந்து இருக்கக்கூடிய சுக்கிரனைப்  பொருத்தவரை மூன்றாம் வீட்டில் அவர் ஆட்சி பெற்ற நிலையில் இருப்பதாலும், எட்டாம் இடத்தில் உச்சம் பெற்ற நிலையில் இருப்பதாலும் மறைவு பெரிய கெடுதல்களை தராது.

மறைவு ஸ்தானத்தில் ஸ்தான பலத்துடன் இருக்கக்கூடிய சுக்கிரன் காரகத்துவ ரீதியாக பெரியளவினில் குறைபாடுகளைத் தரமாட்டார்.

கன்னி லக்கினத்திற்கு 3 மற்றும் எட்டாம் இடங்கள் இரண்டுமே செவ்வாயின் வீடுகளாக வருவதால் இங்கு இருக்கக்கூடிய சுக்கிரன் காரகத்துவ ரீதியாக சில குறைபாடுகளை தரவே செய்வார்.திருமணம் தாமதமாக நடப்பதற்கு வாய்ப்பு உண்டு
சனி மற்றும் செவ்வாய், அமாவாசையை நெருங்கிய சந்திரன் மற்றும் ராகுவின்  தொடர்பை பெறாத வகையில் பெரிய கெடுதல்கள் இருக்காது.

துலாம் லக்னத்திற்கு 3ஆம் இடமான தனுசில் சுக்கிரன் மறைந்திருப்பதை பொறுத்தவரை தனுசு முழு சுபரான 
குருவின் மூலத்திரிகோண வீடாக இருப்பதால் பெரிய அளவில் காரகத்துவ குறைபாடுகள் இருக்காது. எட்டாம் இடத்தில் இருப்பதை பொறுத்தவரை ஆட்சி பெற்ற நிலையில் இருப்பதால் காரக குறைபாடுகள் இருக்காது.

விருச்சிக லக்கினத்திற்கு 3 ஆம் இடமான மகரத்தில் சுக்கிரன் மறைவதை பொருத்தவரை அது அவருடைய நட்பு வீடாகவும், சர ராசியாகவும் இருப்பதால் பெரிய கெடுதல்கள் இருக்காது.

எட்டாம் இடமான மிதுனத்தில் மறைவதை பொறுத்தவரை மிதுனம் அவருக்கு நட்பு வீடாக இருந்தாலும் ஏழாம் அதிபதியாகி எட்டாம் வீட்டில் மறைகிறார் என்ற அடிப்படையில் திருமண விஷயங்களில் தடை தாமதங்கள் இருக்கும்.இங்கே ராகுவுடன் இணைந்து இருப்பது நல்லதல்ல. திருமண விஷயங்களில் பெரிய போராட்டம் இருக்கும்.

தனுசு லக்கினத்திற்கு 3ஆம் இடமான கும்பத்தில் சுக்கிரன் மறைந்திருப்பதை பொருத்தவரை,சனி, செவ்வாய்,ராகு மற்றும் தேய்பிறையை நெருங்கிய சந்திரனின் தொடர்பை பெறாமல் இருப்பது நல்லதாகும்.
எட்டாம் இடமான கடகத்தில் மறைந்திருப்பதை பொறுத்தவரை கடகம் அவருக்கு பகைவீடாக கருதப்படுவதால் இங்கு இருக்கக்கூடிய சுக்கிரன்  காரகத்துவ ரீதியான பிரச்சனைகளை தரவே செய்வார். வலுப்பெற்ற சுபரின் தொடர்பில் இருப்பது நல்லது.

மகர லக்கினத்திற்கு 3ஆம் இடமான மறைவு ஸ்தானத்தில்(மீனத்தில்) சுக்கிரன் இருப்பதைப் பொருத்தவரை அவர் உச்சம் பெற்ற நிலையில் இருப்பதால் காரகத்துவ விஷயங்களில் குறைபாடுகள் இருக்காது.
எட்டாம் இடமான சிம்மத்தில் இருப்பதை பொறுத்தவரை சிம்மம் அவருக்கு பகை வீடு என்பதால் இங்கு இருக்கக்கூடிய சுக்கிரன் முழு மறைவாகவே கருதப்படுவார். காரகத்துவ விஷயங்களில் குறைபாடுகள் இருக்கும். தன்னுடைய சொந்த நட்சத்திரமான பூரத்தில் இருக்கும்போது பாதிப்பு இருக்காது. அட்டமாதிபதி சூரியனுடைய சாரம் பெறுவது நல்லதல்ல. பிரச்சினைகள் இருக்கவே செய்யும்.

கும்ப லக்கினத்திற்கு 3ஆம் இடமான மேஷத்தில் சுக்கிரன் மறைந்திருப்பதை பொறுத்தவரை மேஷம் அவருக்கு நட்பு இல்லை என்பதால் இங்கே இருக்கக்கூடிய சுக்கிரன் காரகத்துவ ரீதியான  குறைபாடுகளைத் தருவார்.

எட்டாம் இடமான கன்னியில் மறைந்திருப்பதை பொறுத்தவரை அங்கே நீசம் பெற்ற நிலையில் மறைந்திருப்பார். சனி, செவ்வாய்,அமாவாசையை நெருங்கிய  சந்திரன் மற்றும் ராகுவின் தொடர்பை பெறாத வரை இங்கு இருக்கக்கூடிய சுக்கிரன் பெரிய பிரச்சனைகளை தரமாட்டார்.
ஏனெனில் கன்னி சுக்கிரனுடைய நட்பு கிரகமான புதனுடைய வீடு என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கே உச்ச புதனுடன் இணைந்து இருப்பது நல்ல நிலையாகும்.

மீன லக்னத்திற்கு 3 மற்றும் 8ஆம் இடத்தில் சுக்கிரன் இருப்பதை பொருத்தவரை இரு இடங்களிலும் அவர் ஆட்சி பெற்ற நிலையில் இருப்பதால் காரகத்துவ ரீதியான குறைபாடுகள் இருக்காது.

பகை வீடுகள் மூன்று எட்டாமிடமிங்களாகி அங்கே இருக்கக்கூடிய சுக்கிரன், 
சனி, செவ்வாய், அமாவாசையை நெருங்கிக் கொண்டிருக்கிற சந்திரன் மற்றும் ராகுவினுடைய தொடர்பினை பெரும் பொழுது காரகத்துவ ரீதியாக பெரிய குறைபாடுகளைத் தருவார்.

மூன்று மட்டும் எட்டாம் இடத்தில் தனித்த நிலையில் நிற்கக் கூடிய சுக்கிரன், சனி செவ்வாய் அமாவாசையை நெருங்கிய சந்திரன் மற்றும் ராகுவினுடைய தொடர்பினைப் பெறாதவரை பெரிய கெடுதல்கள் இருப்பதில்லை.

சுக்கிரன் மறைவு ஸ்தானத்தில் இருக்கும் போது சந்திர அதியோகத்தில் இருப்பது நல்ல நிலையாகும். குருவின் ஐந்து மற்றும் ஒன்பதாம் பார்வையில் இருப்பதும் சிறப்பானதாகும்.
நன்றி..
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA B.Ed,
 MA Astrology.
Cell 9659653138

ஜோதிடம் மற்றும் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட தகவல்களை பெறுவதற்கு இணைந்திருங்கள்..

https://t.me/Astrologytamiltricks

https://chat.whatsapp.com/C2NvgMxacNlFBpcyQq3Gmg

https://www.facebook.com/groups/3741