தசா புத்தி பலன்களை கணிப்பது எவ்வாறு?
ஜாதகர் எது மாதிரியான பிரச்சினைகளில் உள்ளார்? அடுத்து என்ன நடக்கும் என்று தெரிந்து கொள்வது எவ்வாறு?
மனித வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் தசாபுத்தியுடன் தொடர்பு உடையதாகும்.
தசா புத்தியின் அடிப்படையில் இந்த சம்பவம் நடக்கும், நடக்காது என்பது ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட ஒன்றாகும் என்பதே ஜோதிடத்தின் சூட்சமமான விஷயம்.
ஜாதகர் எதுமாதிரியான பிரச்சினையில் உள்ளார் என்பதை தெரிந்து கொள்ள எந்த கிரகம் பாதிக்கப்பட்டால் ஜாதகருக்கு எந்த விஷயத்தில் பாதிப்பு வரும் என்பது தெரிந்திருக்க வேண்டும்.
இலக்னம் முதல் பன்னிரு பாவங்கள் மனித வாழ்க்கையில் உள்ள அனைத்து சம்பவங்களுடன் தொடர்புடையது ஆகும். அந்த வகையில் ஒரு பாவகம் பாதிக்கப்பட்டு அது தொடர்பான தசாபுத்தி நடக்கும் போது என்ன பிரச்சனை ஜாதகருக்கு வரக்கூடும் என்பதை அறியவும், ஒரு பாவகம் சுப கிரகங்கள் தொடர்புபெற்று தசாபுத்தி நடத்தும்போது என்னென்ன சுப விஷயங்கள் நடக்கும் என்பது தெரிந்திட ஆதிபத்யம் சார்ந்த அனைத்து விஷயங்களும் தெரிந்திடல் வேண்டும்.
சந்திரன் தொடர்புடைய தசாபுக்தி நடந்து சந்திரன் பாதிக்கப்பட்ட அமைப்பில் இருப்பதாக எடுத்துக்கொள்வோம். அப்போது ஜாதகருக்கு எது மாதிரியான பிரச்சனைகள் வரும்?
சந்திரன் என்பது மனோகாரகன். அந்த வகையில் ஜாதகரின் மனம் பாதிக்கப்பட்டிருப்பதை உணர முடியும். எது மாதிரியான பாதிப்பு என்பதை சந்திரனைப் பார்த்த கிரகங்களின் கிரகங்களின் ஆதிபத்தியம் காரகத்துவம் குறித்து அறிந்து கொள்ள முடியும்.
சந்திரன் பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கும் பொழுது ஜாதகரின் உயிர் காரகத்துவமான ஜாதகருடைய தாயார் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
மேலும் அந்த ஜாதகத்தில் சந்திரன் என்ன ஆதிபத்தியம் வகிக்கின்றார் என்பதைப் பொருத்தும் பாதிப்புகள் இருக்கக் கூடும்.
உதாரணத்திற்கு அவர் 10 கூடியவராக இருந்து சனி ராகு கேது போன்ற பாவிகளின் தொடர்பு பெற்று தசாபுக்தி நடக்கும் பொழுது கண்டிப்பாக ஜாதகருக்கு தொழில் ரீதியான பிரச்சனை இருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.
ஒருவேளை அவர் ஐந்து கூடியவராக இருந்தால் குழந்தைகளால் மன வேதனை என்ற வகையில் பிரச்சனை இருப்பதற்கான வாய்ப்பு உண்டு.
ஆகவே ஒவ்வொரு பாவகத்தின் ஆதிபத்தியம் மற்றும் கிரகங்களின் காரகத்துவம் சார்ந்த விஷயங்கள் அனைத்திலும் தெளிவு இருக்கும் பொழுது ஜாதகருக்கு என்ன பிரச்சினை என்பதை தெளிவாக தெரிந்து உணர இயலும்.
அடுத்ததாக சூரியனைக் எடுத்துக் கொள்வோம். சூரியன் சம்பாத்யத்திற்கு காரகத்துவம் பெற்ற கிரகம், ஜாதகருடைய தந்தையை குறிக்கக்கூடிய கிரகம்,
ஜாதகருடைய தன்னம்பிக்கை சுட்டிக்காட்டக் கூடிய கிரகம்,
அதனால்தான் சூரியன் ஆத்ம காரகன் என்று அழைக்கப்படுகிறார். அந்த வகையில் சூரியன் பாதிக்கப்படும்போது ஜாதகருக்கு தன்னம்பிக்கை குறைவு,செயல்பட இயலாத நிலை, ஜாதகருக்கு கண் சார்ந்த பாதிப்புகள் அல்லது தந்தை வழியில் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.
அதோடு சூரியன் அரசு மற்றும் உயரதிகாரிகள், வேலை பார்க்கும் இடத்தில் முதலாளியை குறிக்கக்கூடிய கிரகம் ஆகும்.
அந்த வகையில் சூரியன் பாதிக்கப்பட்டு தசா புக்தி நடக்கும்போது மேற்கண்டவர்களால் ஜாதகருக்கு இடையூறுகள் தொந்தரவு ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உண்டு.
குறிப்பிட்ட ஜாதகத்துக்கு சூரியன் என ஆதிபத்தியம் வைக்கின்றார் என்பதையும் கவனத்தில் கொண்டாக வேண்டும்.
உதாரணத்திற்கு சூரியன் 6 உடையவராகி வலுப்பெற்று தசா புக்தி நடக்கும்போது, ஆறுக்குடையவர் என்ற பட்சத்தில் கடன், நோய், எதிரி வம்பு, வழக்கு போன்ற பிரச்னைகளை தருவார் என்றாலும் ஆறாம் இடத்தின் மற்றொரு காரகத்துவமான வேலையையும் ஏற்படுத்திக் கொடுப்பார்.அது அரசு உத்யோகமாகவும் அமையக்கூடும்..ஏனெனில் சூரியன் அரசு உத்யோகத்திற்கு காரகத்துவம் வகிக்கின்றார்.
இந்த இடத்தில் சூரியன் அரசு உத்யோகத்தை அமைத்து தருவாரா? இல்லையா? என்பது சூரியன் அமர்ந்த வீட்டின் அதிபதியின் வலிமையைப் பொறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒருவேளை சூரியன் அமர்ந்த வீட்டின் அதிபதி உச்சம் பெற்றிருக்கக்கூடிய பட்சத்தில் கண்டிப்பாக வேலை கிடைத்துவிடும் என்று பதில் தரலாம். ஒருவேளை சூரியன் அமர்ந்த வீட்டின் அதிபதியின் நிலை பலவீனமாக இருக்கும் பட்சத்தில் ஜாதகருக்கு வேலையை பெறுவதில் தடைகள், ஏமாற்றங்கள் இருக்கும், அதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதை உணர்த்த வேண்டும்.
இதேபோன்று ஒவ்வொரு கிரகத்தின் தனிப்பட்ட காரகத்துவம் சார்ந்த விஷயங்களிலும், அந்த கிரகம் அந்த ஜாதகருக்கு என்ன ஆதிபத்தியம் வைக்கின்றது? அந்த ஆதிபத்யம் குறிக்கின்ற விஷயங்கள் என்னென்ன என்பதையும் தெரிந்து கொண்டு, மேற்கண்ட கிரகத்தின் தசா புக்தி நடக்கும் போது அவர் நன்மையை செய்யக் கடமைப்பட்டவரா அல்லது தீமை செய்யக் கடமைப்பட்டவரா என்பதையெல்லாம் அறிந்து, வீடு கொடுத்தவரின் நிலையை அறியும் போது ஜாதகருக்கு என்ன நடக்கும் என்பதை தெரிந்து உணர இயலும்.
பிரச்சனை எப்போது சரியாகும் என்ற காரணத்தை தெரிந்துகொள்ள பாதிக்கப்பட்ட கிரகத்தின் தசா புத்தி எது வரை தொடர்கிறதோ அதுவரை பிரச்சனை இருக்கும் என்பதையும்,
சமந்தபட்ட தசாபுத்தி முடியும் பொழுது, (அடுத்து வரக்கூடிய தசாபுத்தியின் நிலையை உணர்ந்து) பிரச்சனை சரியாகும் என்பதையும் உணர்த்த வேண்டும்.
தசா புக்தி நடக்கக் கூடிய கிரகங்கள் இயற்கைச் சுபர்களின் தொடர்பை இணைவை பெறும் பொழுது அந்த பாவகம் சார்ந்த விசயங்களில் நல்ல பலன்கள் இருக்கும். அதே நேரத்தில் பாபர்களுடைய தொடர்பை இணைவை பெறும் பொழுது பாவகம் குறிக்கும் விஷயங்களில் தீய பலன்கள் நடக்கும்.
இந்த விதியோடு சம்பந்தப்பட்ட ஜாதகரின் இலக்ன, இராசிக்கு அந்த கிரகம் யோகரா அல்லது பாபரா என்பதையும் அறிந்தே பதில்தர வேண்டும்.
இதோடு நடக்கக் கூடியதை, நடக்க இருப்பதை மாற்றும் வல்லமை, இந்த பிரபஞ்சத்தினை உருவாக்கிய, உயிர்கள் அனைத்தையும் படைத்த பகவானின் ஆதிக்கத்தில் உள்ளது என்பதும் தெரிய வேண்டிய விஷயம்.
அவன் நினைத்தால் எதையும் மாற்றுவான். அவன் அனுமதியின்றி எதுவுமே இங்கே இயங்க இயலாது. இயக்குபவனே இறைவன்.
நன்றி..
கட்டண ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ளவும்...
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA B.ED
Cell 9659653138
ஜோதிடம் குறித்த தகவல்களைப் பெற இணைந்திருங்கள்...
https://chat.whatsapp.com/H9HNdLNl7g6AUdjsNbDRuT
https://t.me/Astrologytamiltricks