எந்த ஒரு கேள்விக்கும் ஜாதகத்தில் பார்க்கப்பட வேண்டிய மூன்று விஷயங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எந்த ஒரு கேள்விக்கும் ஜாதகத்தில் பார்க்கப்பட வேண்டிய மூன்று விஷயங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 26 ஜூலை, 2022

பாவகம் சுபர்களால் தொடர்பு பெற்று பாவகாதிபதி வலுக்குறைந்தால் பலன்கள் எப்படி இருக்கும்?

ஒரு பாவகம் சுப கிரகங்களால் பார்க்கப்பட்ட நிலையிலிருந்து, அந்த பாவகத்தின் அதிபதி பலவீனமாக இருக்கும் பொழுது பலன்கள் எப்படி இருக்கும்?
அதேபோல் பாவகம் பாதிக்கப்பட்ட நிலையிலிருந்து, அந்த பாவக அதிபதி வலுப்பெற்ற நிலையில் இருக்கும் போது பலன்கள் எப்படி இருக்கும்?

பாவகம் சுபத்தன்மை பெற்றிருந்தாலும் அந்த பாவகாதிபதி பலவீனமாக இருக்கின்றார் என்பதன் அடிப்படையில் பலன்கள் நன்மையும் தீமையும் கலந்ததாக இருக்கும்.

அந்த பாவகம் சுபர்களால் சுபத்தன்மை பெற்றிருக்கிறது என்பது அடிப்படையில் அந்த பாவகம் சார்ந்த நல்ல பலன்களையும் ஜாதகர் பெறுவார். அதே நேரத்தில் அந்த பாவகாதிபதி பலவீனமாக இருக்கின்றார் என்பதன் அடிப்படையில் அந்த பாவகம் சார்ந்த பிரச்சனைகளும் இருக்கும். ஆனால் பிரச்சனைகள் சமாளிக்க கூடிய அளவிலே இருக்கும்.

ஜோதிட சாஸ்திரத்தைப் பொறுத்தவரை வாடிக்கையாளர் கேட்கக்கூடிய கேள்விகளுக்கு நாம் மூன்று விஷயங்களை சீர்தூக்கிப் பார்த்தாக வேண்டும்.
அந்த மூன்று விஷயங்கள் என்னவெனில் முதலாவதாக பாவகம், அடுத்ததாக அந்த பாவகத்தின் அதிபதி, அடுத்ததாக காரகர்.

அதாவது அவர் கேள்வி கேட்கக்கூடிய பாவகம் எந்த பாவகம்? அந்த பாவகம் சுபர்களால் தொடர்பு பெற்று இருக்கிறதா? அல்லது பாபர்களால் பலவீனப்பட்டு இருக்கிறதா? என்பதை பார்க்க வேண்டும்.
 
அடுத்ததாக அந்த பாவகத்தின் அதிபதி வலுப்பெற்று இருக்கிறாரா அல்லது பகை, நீசம், பாபர்களின் சேர்க்கை, பார்வை இவற்றின் மூலமாக பலவீனமான நிலையில் இருக்கின்றாரா?
என்பதை பார்க்க வேண்டும்.

அடுத்ததாக ஜாதகர் கேட்கக்கூடிய கேள்வி, எந்த கிரகத்தின் காரகத்துவத்தினைச் சார்ந்தது, அந்த கிரகம் அவருடைய ஜாதகத்தில் என்ன நிலையில் இருக்கிறது என்பதையும் பார்க்க வேண்டும்.
இந்த மூன்று விஷயங்களிலும் கிடைக்கக்கூடிய பலம் மற்றும் பலவீனத்திற்கு ஏற்ப ஜாதகர் நல்ல மற்றும் தீய பலன்களை கலந்த நிலையில் அனுபவிப்பார்.


இதனை ஒரு உதாரணம் ஜாதகத்தின் வாயிலாக தெரிந்து கொள்வோம்.

 மிதுன லக்னம் கன்னி ராசியில் பிறந்த இவருடைய ஜாதகத்தில் ஐந்தாம் பாவகத்தில் உச்ச சனி அமைந்து ஐந்தாம் பாவகத்தை பலவீனப்படுத்தி உள்ளார்.
பாபகிரகங்கள் திரிகோண ஸ்தானங்களில் வலுப்பெற கூடாது என்பதன் அடிப்படையில் ஐந்தாம் பாவகத்தில் உச்ச சனி அமைந்திருப்பது நல்லதல்ல. ஐந்தாம் பாவகத்தில் சனி அமர்ந்திருக்கும்போது சுபர் தொடர்பில்லாத நிலையில் சனி சம்பந்தப்பட்ட தசா புத்திகளில் குழந்தைகள் வகையில் தீய பலன்களை ஜாதகர் அனுபவிக்க நேரிடும்.

இருப்பினும் இவருடைய 5ம் பாவக அதிபதி சுக்கிரன் லக்னத்தில், நட்பு வீட்டில், நட்பு கிரகமான புதனுடன் இணைந்து  நல்ல நிலையில் இருக்கின்றார். அதோடு ஐந்தாம் அதிபதியான சுக்கிரன் இங்கே புனர்பூசம் 3-ஆம் பாதத்தில் வர்கோத்தம நிலையில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது  வர்கோத்தமம் பெற்ற கிரகங்கள் ஆட்சி பெற்ற பலத்தை அடையும் என்பதன் அடிப்படையில் 5ஆம் அதிபதி சுக்கிரன் நல்ல நிலையில் இருக்கிறார் என்பது தெளிவாகிறது.

அடுத்ததாக புத்திரகாரகன் என்று அழைக்கப்படக்கூடிய குரு இவருடைய ஜாதகத்தில் உச்சம் பெற்ற நிலையில்  சூரியன் மற்றும் நீச செவ்வாயுடன் இருக்கின்றார்.  புத்திரக்காரகன் குரு பகவான் சூரியன் மற்றும் செவ்வாய் என்ற இரு பாபருடன் இணைந்திருந்தாலும் குரு, சூரியன் மற்றும் செவ்வாயுடன் இணையும் பொழுது மிகப்பெரிய பலவீனத்தை அடைவது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புத்திரக்காரகன் குரு பகவான் இங்கே உச்ச சனியின் 10ம் பார்வை பெற்றிருப்பது சற்று பலவீனமே என்றாலும், சனியின் சம சப்தம பார்வை மட்டுமே குருவை அதிகளவில் பலவீனப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் இவருடைய ஜாதகத்தில் ஐந்தாம் பாவகம் உச்ச சனியால் பாதிக்கப்பட்டிருந்தாலும், ஐந்தாம் அதிபதி மற்றும் புத்திரகாரகன் குரு நல்ல நிலையில் இருக்கின்றார் என்பதன் அடிப்படையில் குழந்தைகள் வகையில் நல்ல பலன்களை ஜாதகர் அனுபவிப்பார். அதோடு  ஐந்தாம் பாவகத்தில் சனி இருக்கின்றார் என்பதன் அடிப்படையில் சனி சம்பந்தப்பட்ட தசா புத்திகளில் குழந்தைகள் வழியில் சற்று மாறுபடான எதிர்மறையான பலன்களை அனுபவிக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் எதிர்மறையான பலன்களும் இங்கே சமாளிக்கக்கூடிய வகையிலே இருக்கும். அதற்கு காரணம் 5-ஆம் பாவக அதிபதி வலுப்பெற்று இருப்பதேயாகும்.
அந்தவகையில் ஒருவருடைய ஜாதகத்தில் ஒரு பாவகம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தாலும் அந்த பாவக அதிபதி வலுப்பெற்ற நிலையில் இருக்கின்றார் என்றால் நற்பலன்களும் தீய பலன்களும் கலந்தே நடக்கும் என்பது தெளிவாகிறது.

நன்றி..
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA B.Ed.
Cell 9659653138

ஜோதிடம் மற்றும் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட தகவல்களை பெறுவதற்கு இணைந்திருங்கள்..

https://t.me/Astrologytamiltricks

https://chat.whatsapp.com/I9sRO6ovX733Dp1DFNxT74