ஜாதக ரீதியாக பொருத்தமான வாழ்க்கை துணையைத் தேர்ந்தெடுப்பது எவ்வாறு? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜாதக ரீதியாக பொருத்தமான வாழ்க்கை துணையைத் தேர்ந்தெடுப்பது எவ்வாறு? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 26 பிப்ரவரி, 2023

ஜாதக ரீதியாக பொருத்தமான வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுத்தல் | பொருத்தத்தினில் முக்கியத்துவம் தரப்பட வேண்டிய விஷயங்கள் என்னென்ன?


இக்காலகட்டத்தில் பொதுவாக திருமண பந்தத்தை நிர்ணயிப்பதைப் பொறுத்தவரை தம்பதிகளாக இணைய போகின்ற இரு குடும்பங்களின் நிதிநிலைமை, சமூக பொருளாதார அந்தஸ்து, இரு குடும்பங்களின் சொத்து பத்துக்கள், பொருளாதார வசதிகள்,
தனிப்பட்ட கலாச்சார பழக்க வழக்கங்கள் ஜாதி,மதம், இனம், இருவரின் கல்வித் தகுதி, சம்பளம், பார்க்கும் வேலை, அதற்கான மதிப்பு, இருவரின் தோற்றம் இது போன்ற விஷயங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்படுகிறது.
மேற்கண்ட விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து திருமணம் செய்து வைத்தாலும் அவர்களின் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்? எப்படி செல்லும்? என்பது இருவருடைய தனிப்பட்ட ஜாதகம் மற்றும் அடுத்தடுத்து வரக்கூடிய தசாபுக்தியைப் 
பொறுத்ததே ஆகும்.#Iniyavan

திருமணமாகி தம்பதியினராக மாறப்போகின்ற  இவர்கள் ஒருவரை ஒருவர் எவ்வாறு புரிந்து கொள்வார்கள்? இருவரின் தனிப்பட்ட குணநலன்கள், ஆசைகள், அதோடு ஒருவரின் நடத்தை மற்றும் எண்ணங்கள், தனிப்பட்ட விருப்பங்கள், மற்றவருக்கு பிடிக்குமா? இருவருக்கும் இடையேயான புரிதல்கள், இந்த திருமண வாழ்க்கை நீண்ட காலத்திற்கு நல்லபடியாக செல்லுமா? 
இருவருக்குமிடையே கருத்து வேறுபாடுகள், சண்டை சச்சரவுகள், உரசல்கள் ஏற்பட்டாலும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து குடும்ப பந்தத்தை நீண்ட காலத்திற்கு எடுத்துச் செல்வார்களா? என்பன போன்ற விஷயங்களை இருவரின் ஜாதக ரீதியாக ஆராய்ந்து இணைப்பதே நல்லபடியாக இருக்கும். #Iniyavan 
தம்பதிகளாக இணையப் போகின்றவர்களின் மண வாழ்க்கை எப்படிச் செல்லும் என்பதை இருவரின் ஜாதக விவரங்கள், அடுத்தடுத்து வரக்கூடிய தசாபுக்திகளைக் கொண்டு ஒரு தேர்ந்த ஜோதிடர்கள் நிச்சயமாக சொல்லிவிட இயலும்.

எந்த வீடு உங்கள் வாழ்க்கை துணையை பற்றி சொல்லும்?

பிறப்பு ஜாதகத்தில் ஏழாம் வீட்டின் மூலம் உங்களுடைய நண்பர்கள், கூட்டாளிகள் மற்றும் வாழ்க்கைத்துணை பற்றிய விவரங்களைச் சொல்ல இயலும்.

ஏழில் நின்ற கிரகங்கள், ஏழாம் வீட்டைப் பார்த்த கிரகங்கள், அந்த கிரகங்களின் குணாதிசயங்கள், அந்த கிரகங்கள் லக்ன ரீதியாக என்ன ஆதிபத்தியத்தை பெற்றிருக்கிறது என்பதை பொறுத்து உங்களுடைய வாழ்க்கை துணையின் ஆளுமை மற்றும் குண நலன்களை நிர்ணயிக்க இயலும்.#Iniyavan

ஏழாம் அதிபதியின் நிலை, அவர் நின்ற வீடு, அவருடன் இணைந்த  மற்றும் பார்த்த கிரகங்களின் காரக, ஆதிபத்திய விஷயங்கள் நீங்கள் திருமணத்தால் அடைய போகின்ற சாதக பாதக விஷயங்களைச் சொல்லும்.
ஏழாம் அதிபதியைப் போலவே திருமண வாழ்க்கைக்கு முக்கிய காரக கிரகமான சுக்கிரனுடைய நிலையையும் பார்த்தாக வேண்டும்.
திருமணப் பொருத்தத்தில் மிக முக்கியமாக ஆண் பெண் இருவருக்கும் சுக்கிரன் பாப கிரகத்தின் பார்வை (அ) இணைவை பெற்று இருக்கும் பட்சத்தில் அது தொடர்புடைய தசா புத்திகள் வருகிறதா என்பது கவனமாக பார்க்கப்பட வேண்டும். ஏனெனில் திருமணமாகி சில வருடங்களுக்குள் பிரிவைச் சந்திப்பவர்களுக்கு தம்பதிகள் இருவரில் யாரேனும் ஒருவருக்கு சுக்கிரன் கடுமையாக பாதிக்கப்பட்டு தசாபுத்திகள் நடைமுறையில் இருக்கும்.

திருமணப் பொருத்தத்தை பொறுத்தவரை நட்சத்திர பொருத்தத்திற்கு  மட்டுமே முக்கியத்துவம் கொடுக்காமல் இருவரின் ஜாதக ரீதியான கட்ட அனுகூலப் பொருத்தத்திற்கு அதிகம் முக்கியத்துவம் தரப்பட வேண்டும்.இவற்றிற்கும் மேலாக இருவருக்கும் அடுத்தடுத்து வரும் தசாபுத்திகள் அதிக முக்கியத்துவம் தரப்பட வேண்டும். ஏனெனில் ஒரு குறிப்பிட்ட சம்பவம் எப்போது நடக்கும் என்பதை தசாபுத்திகள்தான் சொல்லும்.
உதாரணமாக ஒருவருடைய ஜாதகத்தில் 7ஆம் இடம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தாலும் ஏழாமிடத்துடன் தொடர்புடைய கிரகங்களின் தசாக்காலங்கள் வரவில்லை எனில் திருமண வாழ்க்கையில் பெரிய அளவில் பாதிப்புகள் வரப்போவதில்லை.#Iniyavan

மண வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து பார்க்கப்பட வேண்டிய பாவகங்களான 2, 7, 8 பாவங்கள் பாதிப்பைத் தரக் கூடிய நிலையில் இருந்தாலும் வலுப்பெற்ற சுபரின் பார்வைத் தொடர்பு மேற்கண்ட பாவங்களுக்கு இருந்து விட்டாலோ அல்லது  பாதிப்பை தரும் தொடர்புடைய தசாகாலங்கள் வரவில்லை எனில் அது குறித்து கவலைப்பட வேண்டியதில்லை.

அடுத்ததாக இருவரின் ஜாதகத்திலும் லக்னத்திற்கு ஆகாத அவயோக கிரகங்கள் வலுப்பெற்று நீண்டகால அளவில் தசாபுத்திகள் நடைபெறுகின்றதா  என்பதையும் பார்க்க வேண்டும். ஏனெனில் அவயோக கிரகங்களின் தசாபுக்திகளில்தான் ஜாதகத்தில் பாதிக்கப்பட்ட பாவங்களினால் ஏற்படக்கூடிய பிரச்சினையின் வீரியம் அதிகமிருக்கும்.

அவயோகங்கள் வலுப்பெற்ற நிலையில் இருக்கும் போது லக்னாதிபதியின் நிலை அவசியம் பார்க்கப்பட வேண்டும்.  ஏனெனில் அவயோக கிரகங்கள் வலுப்பெற்று இருந்தாலும் லக்னாதிபதி அதற்கு இணையாக வலுத்து விட்டால் அவயோக கிரகங்களின் தசா காலத்தையும் ஜாதகரால் வெற்றிகரமாக சமாளிக்க இயலும்.#Iniyavan

தம்பதிகளாக இணையப் போகின்றவர்களுக்கு மோசமான தசா புக்திகளால் பிரச்சினைகள் ஏற்பட்டாலும் இருவருக்கும் இடையேயான புரிந்துணர்வு நல்லபடியாக இருக்கும் பொழுதும் ஒருவருக்கொருவர் அக்கறையாக செயல்படும் போதும் எவ்வளவு இடர்பாடுகள், கஷ்டங்கள் ஏற்பட்டாலும் அவற்றை தம்பதிகளாகவே இருந்து வெற்றிகரமாக கடக்க இயலும்.
திருமணப் பொருத்தத்தில் இருவருக்கும் இடையேயான புரிந்துணர்வு கடைசிவரை இருக்குமா என்பதற்காக அதிக முக்கியத்துவம் தரப்பட வேண்டும்.

இருவருக்கும் இடையேயான புரிந்துணர்வு நல்லபடியாக இருப்பதற்கு ஏற்றவகையில் இருவரின் லக்னாதிபதிகள், ராசி அதிபதிகள் தங்களுக்குள் நண்பர்களாக இருக்குமாறு(திரிகோணாதிபதிகள்)
இணைப்பது  சிறப்பு.
அடுத்ததாக இருவரின் ஜாதகத்திலும் லக்னம், லக்னாதிபதி, ராசியுடன் தொடர்பு கொண்ட கிரகங்களின் நிலை அவசியம் பார்க்கப்பட வேண்டும். ஏனெனில் லக்னம், ராசி, லக்னாதிபதி இவர்களுடன் தொடர்பு கொண்ட கிரகங்களை பொறுத்தே ஒருவரின் குணநலன்கள், விட்டுக் கொடுத்து செல்லும் தன்மை, பெருந்தன்மையான குணங்கள், மன்னிக்கும் தன்மை போன்றவை இருக்கும்.
லக்னம், லக்னாதிபதியுடன் சுபர்கள் மட்டுமே தொடர்பு கொண்ட ஒருவரை, லக்னம், லக்னாதிபதியுடன் எவ்வித சுபர் தொடர்புமின்றி இயற்கைப் பாபர்கள் மட்டுமே தொடர்பு கொண்ட ஒருவரை இணைப்பது நல்லதல்ல.
ஒருவரின் குணச்சீர்கேட்டினால் மற்றவர் பாதிக்கப்பட வாய்ப்பு உண்டு .லக்னம் லக்னாதிபதியுடன் சுபர் பாபர் ஒருசேர தொடர்பு கொண்டவர்களை அதற்கேற்ற நிலையில்  உள்ளவர்களை இணைப்பது நல்லது.
தகுந்த ஜோதிடரின் துணைகொண்டு இதுபோன்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, இருவரின் ஜாதகங்களையும் ஆராய்ந்து சாதக விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து இணைப்பது நல்ல மணவாழ்க்கையை நிச்சயம் அமைத்துத் தரும்.
நன்றி..
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA B.Ed, MA Astrology.
Cell 9659653138

ஜோதிடம் மற்றும் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட தகவல்களை பெறுவதற்கு இணைந்திருங்கள்..

https://t.me/Astrologytamiltricks

https://chat.whatsapp.com/C2NvgMxacNlFBpcyQq3Gmg

https://www.facebook.com/groups/3741