அட்டமாதிபதி தசாவில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்...
ஜோதிட சாஸ்திரத்தில் அட்டமாதிபதி என்று அழைக்கப்படும், எட்டாம் அதிபதி மனித வாழ்விற்கு தீமை தரக்கூடிய விஷயங்கள் பலவற்றிற்கும் காரகத்துவம் வகிக்கின்றார். முதலில் எட்டாம் பாவகம் குறிக்கும் நல்ல விஷயங்கள் என்னென்ன என்று பார்ப்போம். ஒருவரின் ஆயுள், திடீர் அதிர்ஷ்டம், ,நீடித்த சொத்து, தனபாக்கியம் இன்சூரன்ஸ், பங்குச்சந்தை, லாட்டரி இவற்றின் மூலம் பணம் பெறுதல்,அன்னிய தேசங்களில் புகழ்பெற்ற வாழ்க்கையை வாழ்தல் போன்றவற்றிற்கு எட்டாம் இடம் காரகத்துவம் பெறுகின்றது.
தீமை தரக்கூடிய விஷயங்களை பொறுத்தளவில் எதிர்பாராத வீழ்ச்சி மற்றும் தோல்வி, நெருங்கிய சொந்தத்தில் மரணம், மரணத்தினால் ஏற்படும் துக்கம், முகம் வாடிய நிலையில் காட்சி (எட்டில் நின்ற கிரகம் இரண்டாம் வீட்டைப் பார்ப்பதால்) சவால் மற்றும் போட்டியிலிருந்து விலகிக் கொள்ளுதல், சகோதரர்கள் வழியினில் மன வேதனையை அனுபவித்தல், (3ஆம் இடத்திற்கு 8ஆம் வீடு எதிரியைக் குறிப்படும் ஆறாம் வீடாக வரும்)
அதிக சோம்பலால் பாதிக்கப்படுதல், அரசிற்கு எதிரான முறைகேடான விஷயங்களைச் செய்து தண்டனை பெறுதல், தண்டனைக்காக மறைந்து பயந்து வாழ்தல், அடுத்து அறியாமையைப் பயன்படுத்தி பணம் சேர்த்து பெயர் கெட்டுப் போதல் அந்த வகையில் அவமானங்களை சந்தித்தல் மன அமைதியை குலைக்கும் செயல்களில் தானாகவே ஈடுபட்டு மனம் வாடுதல், தொடர்ச்சியான தொந்தரவு, விபத்துக்கள், கொடிய செயலை செய்வதற்கான முயற்சியின் ஆரம்பம்,
ஆயுதங்களால் உடல் பாதிப்பு, தீராத நாள்பட்ட புண்,
இரத்தத்தை சூடேற்றும் அவமானங்களுக்கு உள்ளாகுதல்,
உணர்ச்சி வசப்பட்டு தவறிழைத்து தீராத பழிச்சொல்லிற்கு உள்ளாகுதல், வட்டியால் வாழ்வே வெறுத்து போகும் நிலை, வாழ்க்கை துணை வழியில் அவமானங்கள், உயரமான இடத்திலிருந்து கீழே விழுதல், பூர்விகத்திலிருந்து வெளியேற்றப்படுதல் ஆகியவற்றையும் எட்டாம் இடம் சுட்டிக்காட்டும்.
அடுத்ததாக எட்டாம் அதிபதி தசாவினில் நன்மை மற்றும் தீமை தரக்கூடிய நிலைகள் என்னென்ன என்பதை தனித்தனியாக பார்ப்போம்.
எட்டாம் அதிபதி நின்ற வீட்டின் அதிபதி எந்த வகையிலும் பலம் இழக்க கூடாது. எட்டாம் அதிபதி நின்ற வீட்டின் அதிபதி கேந்திர திரிகோணங்களில் வலுப்பெற்று சுபர்களின் தொடர்பை பெற்று, எட்டாம் அதிபதியும், சுபக் கிரகங்களால் பார்க்கப்படும் பொழுது எட்டாம் அதிபதி நின்ற வீட்டின் ஆதிபத்திய வழியில் சுப விஷயங்கள் நடக்கும்.
உதாரணத்திற்கு எட்டாம் அதிபதி 3ல் நின்று,அந்த வீட்டின் அதிபதி கேந்திர திரிகோணங்களில் வலுப்பெற்று சுபர்களின் தொடர்பு பெற்று அமரும் பொழுது மூன்றாம் பாவக விஷயங்களான புகழ் பெறுதல், ஆளடிமை இவற்றின் மூலம் நல்ல பலன், தகவல் தொடர்புகளில் நல்ல பலன், எழுத்து, இசை, சங்கீதம் இவற்றில் புகழ் பெறுதல், இளைய சகோதர வகையில் நல்ல உறவு, தீர்க்கமான ஆயுள்,நல்ல உடல்நலம் (மூன்றாம் இடம் எட்டாம் இடத்திற்கு எட்டாம் இடமாக வரும்)
வீடு,மனை,வாகன வழியில் சுப விரயங்கள், நான்காம் பாவகத்திற்கு மூன்றாம் பாவகம் விரைய ஸ்தானமாக வரும் என்பது குறிப்பிடத்தக்கது)
சாதகமான இடம் மாற்றம் ஏற்படுதல், எடுத்த காரியங்களை முழு முயற்சியுடன் முடித்தல், (மூன்றாமிடமே முயற்சி ஸ்தானம்)
போக விஷயங்களில் மிகுந்த நாட்டம் உண்டாகுதல்.
(ஏன் போக விஷயங்களில் அதீத நாட்டம்? மூன்றாமிடம் வீரிய ஸ்தானம் என்பது குறிப்பிடத்தக்கது. எட்டாமிடம் பிறப்புறுப்புகளை குறிக்கக்கூடியது)
அதோடு அன்னிய தேசங்களில் புகழ் பெறக்கூடிய அமைப்பு உண்டாகும்.எட்டாம் அதிபதி மறைவு ஸ்தானங்களில் சுபர் தொடர்பு பெற்று நல்ல நிலையில் இருந்து தசா நடத்தும் பொழுது ஜாதகருக்கு மறைபொருள் அறியும் ஆற்றல் உண்டாகும். புரியாத விஷயங்கள் அனைத்தும் புரியவரும்.
இதே நிலையில் எட்டாம் அதிபதி நின்ற வீட்டின் அதிபதி பலம் குறைந்து பாபர்களால் பார்க்கப்படும் பொழுது காரகத்துவ, ஆதிபத்ய விஷயங்களால் பாதிப்புகள் உண்டாகும்.
உதாரணத்திற்கு இலக்னத்தில் அட்டமாதிபதி நின்று இலக்னாதிபதி பலம் குன்றிய நிலையில் இருந்து அஷ்டமாதிபதி தசா புத்தி நடக்கும் பொழுது ஜாதகர் எல்லா முயற்சிகளும் முரண்பாடுகளாக இருக்கும். ஜாதகரின் எண்ணங்கள் சீர்குலையும். கீழ்த்தரமான விஷயங்களில் இன்பத்தை தேட வைக்கும் நிலைக்கு கொண்டு செல்லும்.
ஒரு கட்டத்தில் அனைத்து சூழ்நிலைகளும் ஜாதகருக்கு எதிராக மாறத் துவங்கும்.
எட்டாம் அதிபதி பாபர்களால் பார்க்கப்பட்டு, நின்ற வீட்டின் அதிபதியும் பாபத்துவ நிலையில் இருக்கும் பொழுது எட்டாம் அதிபதி நின்ற வீட்டின் காரகத்துவ உறவு வழியாகவும், சேர்ந்த பார்த்த கிரகங்களின் காரகத்துவ உறவுகள் வழியாகவும் ஜாதகருக்கு அவமானங்கள், நஷ்டங்கள் உண்டாகும்.
நிறைவாக இலக்னாதிபதி பலம் குறைந்த நிலையில் இருக்கும்பொழுது மட்டுமே எட்டாம் அதிபதி தசா நடைபெறும் காலகட்டத்தில் ஜாதகர் அதீத இன்னல்களுக்கு உள்ளாகுகின்றார். இலக்னாதிபதி பலம் பெற்றிருக்கும் நிலையில் ஜாதகர் எதையும் சமாளிக்கும் துணிவு பெற்றிருப்பார்.
எட்டாம் அதிபதி பாபத்துவ நிலையிலிருந்து தசா புக்தி நடத்தும் போது
தொடர்புடைய விஷயங்களில் ஜாதகர் தன் புத்திக்கு எட்டியவரை நிதானத்தையும் நேர்மையும் கடைபிடிப்பது மட்டுமே நல்லதாகும்.
எந்தெந்த விஷயத்தில் பாதிப்பு உண்டாகும் என்பது தெரியவருகின்றதோ அது சார்ந்த விஷயங்களில் அதிக எச்சரிக்கையுடன் இருப்பது அவமானத்தை வெகுவாய் குறைக்க உதவும்.
சுய ஜாதகத்தில் எட்டாம் அதிபதி குறிக்கும் அதிதேவதையிடம் சரணடைவது, அதற்குரிய மந்திரங்களை சங்கல்பங்கள் மேற்கொண்டு உச்சரித்து வருவது ,
தசாவை எதிர் கொள்வதற்கான சிறந்த மனோ பலத்தை அளிக்கும்.
பாதிப்புகளையும் குறைக்கும்.
நிறைவாக எட்டாம் அதிபதி தசாவினில் முடிந்தவரை மனசாட்சிக்கு விரோதமான செயல்களில் ஈடுபடாமல் இருப்பது, எல்லா விஷயங்களிலும நேர்மை மற்றும் நிதானத்தை கடைப்பிடிப்பதே மட்டுமே சிறந்த வாழ்வியல் பரிகாரம் என்பதை மறுப்பதற்கில்லை...
நன்றி...
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA B.ED
Cell 9659653138