நடப்பு தசா புத்தியை வைத்து ஜாதகர் எது மாதிரியான சூழலில் இருப்பார் என்பதை தெளிவாக கண்டறிவது எவ்வாறு?
ஜோதிட சாஸ்திரத்தைப் பொறுத்தவரை தனிநபர் ஜாதகத்தில் நடப்பிலுள்ள தசா புத்திகளே அவருடைய வாழ்வில் நடைபெறக்கூடிய சம்பவங்களை தீர்மானிப்பவையாக இருக்கின்றன.
நடந்து முடிந்த, நடந்து கொண்டிருக்கின்ற தசா புத்திகள்,வயது இவற்றை ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது ஜாதகர் எது மாதிரியான பிரச்சனைகளை கடந்து வந்திருப்பார் என்பதை ஓரளவு யூகிக்க இயலும்.
அதை ஒரு உதாரண ஜாதகத்தின் வாயிலாக கண்டறிவோம்.
ஜாதகம் பார்க்க வந்திருந்த நபர் தன்னுடைய சகோதரனுடைய ஜாதகம் என்று சொல்லி என்னிடம் கொடுத்தார்.
தனுசு லக்னம், விருச்சிக ராசியில் பிறந்த அந்த ஜாதகருக்கு தற்பொழுது நடப்பில் உள்ளது சூரிய தசையில் ராகு புத்தி...
இந்த ஜாதகத்தில் தசாநாதன் சூரியன் ஒன்பதாம் அதிபதியாகி ஆட்சி பெற்ற நிலையில், பத்தாம் அதிபதி புதனுடன் இணைந்து தர்மகர்மாதிபதி அமைப்பில் தசா நடத்துகின்றார். அந்த வகையில் சூரிய தசா ஆரம்பமானது ஜாதகருக்கு நன்றாகவே இருந்திருக்கும்.
தசாநாதன் சூரியன் தர்மகர்மாதிபதி யோக அமைப்பில் உள்ளதாலும் 11-க்குடைய சுக்கிரனுடன் இணைந்து உள்ளதாலும் பொருளாதார ரீதியாக நல்ல நிலையில் வைத்திருக்கும்.
ஆனால் ஜாதகரின் தற்போதைய நிலையைப் பற்றி அறிய நடந்து கொண்டிருக்கின்ற புத்தியை கவனித்தாக வேண்டும் புத்திநாதன் ராகு ஆறாமிடத்தில் இருக்கின்றார்..
இந்த ஜாதகத்தை பார்த்த பின்பு ஜாதகர் கடுமையான உடல்நல மற்றும் மனநல பாதிப்பில் இருக்கிறாரா? என்று கேட்டேன் வந்து இருப்பவரும் ஆம் என்றார்.
ஏனெனில் ஆறில் நின்ற ராகு பாதகாதிபதி, மாரகாதிபதி அஷ்டமாதிபதி தொடர்புகளை பெற்றதே இதற்கு காரணமாகும்.
ராகு தசாவிற்கான அல்லது புத்திக்கான பலன்களைக் கவனிக்கும்போது ராகுவுக்கு கேந்திரத்தில் உள்ள கிரகங்களின் நிலையை நாம் கவனத்தில் கொண்டாக வேண்டும்.
ஏனெனில் நிழல் கிரகங்களான ராகு,கேதுக்கள் தனக்கு கேந்திரத்தில் உள்ள கிரகங்களின் பலனையும் தன்னுடைய தசாபுக்தி காலங்களில் எடுத்துச் செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஜாதகத்தில் ராகுவுக்கு கேந்திரத்தில், (ராகுவிற்கு நான்கில்) சுக்கிரன் மற்றும் புதன், சூரியன் இணைந்துள்ளனர்.
இந்த ஜாதகத்தில் புதன் 7ம் அதிபதியான பாதாகதிபதியாகவும், சுக்கிரன் பதினொன்றாம் அதிபதியாகி மாராக அதிபதியாகவும் செயல்படுவார்.
அந்த வகையில் ஆறாம் வீட்டில் நின்ற ராகு தனக்கு கேந்திரத்தில் உள்ள கிரகங்களின் பலனை எடுத்துச் செய்யும் பொழுது ஜாதகருக்கு உடல் ரீதியான நோய் பாதிப்பை தீவிரமாக கொடுத்து இருப்பார்.
ஏனெனில் எப்போது தசாநாதன் அல்லது புத்திநாதனுக்கு எப்போது பாதகாதிபதி, மாரக அதிபதி, அஷ்டமாதிபதி தொடர்பு ஏற்படுகின்றதோ அந்த தசா அல்லது புத்தி, ஜாதகரின் லக்னம், லக்னாதிபதியின் பலம் மற்றும் பலவீனத்திற்கு ஏற்ப உடல் நல பாதிப்பு, ஆயுள் பயம், ஆயுள் பாதிப்பு போன்றவற்றை ஜாதகருக்கு தரும் என்பது விதியாகும்.
இந்த ஜாதகத்தில் ராகுவிற்கு மற்றொரு கேந்திரத்தில், (ராகுவிற்கு ஏழில்) எட்டாம் அதிபதியான (அட்டமாதிபதி)சந்திரன் நீசம் பெற்ற நிலையில் இருக்கின்றார்.
ராகு வாங்கிய சாரம் எட்டில் நின்ற நீசம் பெற்ற செவ்வாயின் சாரமாகும்.
அந்த வகையில் இந்த ராகு புத்தி, ஜாதகருக்கு உடல் ரீதியான மற்றும் மன ரீதியான பாதிப்புகளை தந்திருக்கும்.
இங்கே மனரீதியான பாதிப்பு என்று சுட்டிக் காட்டுவதற்கான காரணம் ராகுவிற்கு கேந்திரமான, ராகுவிற்கு ஏழாவது வீட்டில், லக்னத்திற்கு பன்னிரண்டில் மனோக்காரகனான சந்திரன் நீச நிலையில் கேதுவுடன் இணைந்து இருக்கின்றார்.
மனோகாரகனான சந்திரன் பாதிப்படைந்த நிலையில் ராகு கேதுவுடன் மிக நெருங்கிய நிலையில் இருக்கும்போது தொடர்புடைய தசா புக்தியில் ஜாதகருக்கு மன ரீதியான பாதிப்புகளை தருவார்.
இந்த ஜாதகத்தை பொருத்தமட்டில் மனரீதியான பாதிப்பு ஏற்படுவதற்கான காரணம் நோய் குணமாகவில்லை என்ற கவலைதான்.
லக்னம் வர்க்கோத்தமம் பெற்று இருப்பதாலும், 8-க்குடைய சந்திரன் பரிவர்த்தனை பெற்று, மறைமுகமாக ஆட்சிபெற்ற நிலையில் இருப்பதாலும் ஆயுள் ஸ்தானமான எட்டாம் வீட்டை ,குரு தனது 9ம் பார்வையால் பார்ப்பதால் ஜாதகருக்கு ஆயுள் பலம் உண்டு என்பதும் தெளிவாகிறது.
அந்த வகையில் ராகு புத்தி முடியும் வரை ஜாதகருக்கு உடல் ரீதியான மற்றும் மனரீதியான பாதிப்புகள் இருக்கும்.
மனோகாரகனான சந்திரன் நீசம் பெற்ற நிலையில் கேதுவுடன் இணைந்து உள்ளதால், ஜாதகர் மனதை தைரியமாக வைத்துக் கொள்ள வேண்டியது இந்த இடத்தில் அவசியமாகிறது.
மனதினை தைரியமாக வைத்துக் கொள்வதன் மூலமாகவும், தொடர்ந்து சிகிச்சை எடுத்துக் கொள்வதன் வாயிலாகவும் ஜாதகர் நோய் பாதிப்பிலிருந்து மீள இயலும்.
ஜாதகரின் மன பலத்தை பெருக்கக் கூடிய வகையில் திங்கட்கிழமைகளில் வரக்கூடிய பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொள்வது, சங்கடஹரசதுர்த்தி விரதம் இருப்பது, மூன்றாம் பிறை தரிசனம் காண்பது போன்றவை ராகு புத்தியை எதிர்கொள்வதற்கான மன ஆற்றலை ஜாதகருக்கு வழங்கும்.
இந்த பரிகாரத்தை ஜாதகரால் செய்ய இயலாத போது ஜாதகரின் இரத்த உறவுகள் நம்பிக்கையோடு செய்து வருவது நல்லதாகும்.
புத்தி நாதனான 6 நின்ற ராகு தரும் பாதிப்பானது, குறைவதற்கு
ஜாதகருடைய பிறந்த நட்சத்திர தினமன்று காளஹஸ்தி சென்று காளஹஸ்தி நாதரை வழிபட்டு வருவது நல்லதாகும்..
இந்த பரிகாரங்கள் மற்றும் சிகிச்சை முறைகளை நம்பிக்கையோடு கடைபிடித்து வருவதன் வாயிலாக நோய் நீங்கி நலம் பெறுவர் சொல்லி நம்பிக்கையூட்டி, ஜாதகம் பார்க்க வந்தவரை அனுப்பி வைத்தேன்.
காளஹஸ்திநாதர் ஜாதகருக்கு நல்ல உடல்நலத்தினை நல்குவார்..
நம்புவோம்...
நன்றி...
Astrologer
ப இனியவன் கார்த்திகேயன் MA B.ED
Cell 9659653138