உண்மையில் யார் இங்கே பாக்யசாலிகள்?
அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது என்பது மூதாட்டி ஓளவை அவர்களின் வாக்கு.
இந்து சமய மத நம்பிக்கைகளின்படி கிடைத்தற்கரிய இந்த மானிடப் பிறப்பை நாம் முக்தி அடைவதற்கு பயன்படுத்திக் கொள்வதே புத்திசாலித்தனம்.
முக்தி என்பது எல்லோருக்கும் எளிதில் கிட்டுவதில்லை.
கடவுள் நம்பிக்கையுடையவர்களுக்கு மட்டுமே கர்மாவின் மீது நம்பிக்கை இருக்கும்.
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தானே விளையும் என்பததே கர்மா என்பதற்கான தெய்வப் புலவரின் மிகச் சிறந்த விளக்கம்.
பொதுவாக தெய்வத்தின் மீது நம்பிக்கை உடையவர்கள் தவறு செய்ய அஞ்சுபவர்கள்.
அவ்வகையில் தெய்வத்தின் மீது நம்பிக்கை வருவதற்கும் ஜாதகக் கட்டங்களில் விதியானது (fate) கிரகங்களால் நிர்ணயிக்கப்பட்டிருக்கும்.
ஜோதிடத்தில் ஐந்தாம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானம் மற்றும் பிதுர்ஸ்தானம் என்று அழைக்கப்படக்கூடிய ஒன்பதாம் இடம் ஆகிய அமைப்புகள் வலிமை பெற்றவர்கள் இயல்பிலேயே இறைநம்பிக்கை கொண்டவர்களாக இருப்பர்.
இவ்வுலகில் உள்ள அனைவரையும் மீறிய ஒரு சக்தி இவ்வுலகை வழி நடத்துகின்றது என்பதில் அவர்களுக்கு அதீத நம்பிக்கை இருக்கும். பாவங்களை செய்தால் அந்த சக்தியால் அதற்கான தண்டனை உண்டு என்பதிலும் நம்பிக்கை இருக்கும்.
இந்த அதீத நம்பிக்கையை பெற்றவர்கள் பாக்கியசாலிகள். (ஒன்பதாம் இடத்திற்கு பாக்கிய ஸ்தானம் என்ற மற்றொரு பெயரும் உண்டு)
மேலும் தவறு செய்தால் அதற்கான பாவத்தை அனுபவித்தாக வேண்டும் என்ற எண்ணமும் இயல்பிலேயே அவர்களுக்கு இருக்கும். இந்த எண்ணமே அவர்களின் கர்ம மூட்டைகளை குறைக்கும்.
இந்த எண்ணம் அவர்களுக்கு இயல்பிலேயே இருக்க காரணம் அவர்களின் பூர்வபுண்ணியம்.
மேலும் அவர்கள் முந்தைய பிறவியில் செய்த தான தர்மங்கள்.
இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் பூர்வ புண்ணியம் என்ற வகையில் 5-ஆம் இடமும் தான தர்மங்கள் என்ற வகையில் 9ஆம் இடமும் தொடர்புபெறுகிறது.(ஒன்பதாம் இடத்திற்கு தர்ம ஸ்தானம் என்ற பெயரும் உண்டு)
ஆகவே ஒருவரின் ஜாதகத்தில் 5 மற்றும் 9 ஆகிய இடங்கள் சுபர்களின் பார்வை,அந்த ஸ்தான நிலை ஆகியவற்றால் பலம் பெறும் போது அவர்கள் இயல்பிலேயே இறை நம்பிக்கை உடையவராக இருப்பர்.
எது உன்னதமான வாழ்க்கை என்பது அவர்களுக்கு இயல்பிலேயே(Default) தெரியப்படுத்தப் பட்டிருக்கும்.
உன்னதம் தெரியவில்லை எனினும் எது தவறு? எது செய்தால் பாவம்? என்பது தெளிவாய் தெரியும்.
தான் செய்யக்கூடிய பாவங்களின் விளைவை அறிந்து கொண்டு பாவங்கள் செய்வதை அவனால் தடுத்துக்கொள்ள இயலுமாயின் முக்திக்கும் அவனுக்குமான தூரம் அதிகமில்லை.
முழு சுபரான குரு பகவான் பூர்வ புண்ய ஸ்தானமான 5ம் இடத்தில் வலிமை பெற்ற நிலையில் அமைந்து இருக்கும் பொழுது அவரின் ஐந்தாம் பார்வை பாக்ய ஸ்தானமான ஒன்பதாம் இடத்தில் விழும். அவரின் ஒன்பதாம் பார்வை இலக்னத்திற்கு கிட்டும். இப்படிப்பட்ட அமைப்பைப் பெற்றவர்கள் பெரும்பாலும் நேர்மை நிலையில் இருந்து பிறழ்வதில்லை.
பெரும்பாலும் லக்னத்தை பார்க்கும் குரு பகவான், மேலும் இலக்னத்திலே இருக்கும் குரு பகவான், லக்னம் மற்றும் ஐந்து , ஒன்பதாம் பாவகங்களுடன் குரு பகவான் வலுப்பெற்ற நிலையில் தொடர்பு கொள்வது போன்ற அமைப்புகள் ஒரு மனிதன் ஒரு செயலைச் செய்ய முற்படும் போது அது தவறான செயல் எனின் இதை செய்தால் பாவம் என்பதை உள்ளுணர்வின் (மனசாட்சி) வாயிலாக ஒவ்வொரு நொடியும் உணர்த்திக் கொண்டே இருப்பார். மேலும் மனசாட்சியின் வாயிலாக கடிவாளமிடுபவராகவும் இருப்பார்.
எவனொருவன் மனசாட்சிக்கு பயப்படுவானாயின் அவன் தவறு செய்வது நிச்சயம் தடுக்கப்படும்.
இதன் மூலம் அவனுடைய பாவ மூட்டைகளின் எண்ணிக்கை குறையும்.
அவ்வகையில் அவர்கள் பாக்கியசாலிகள் தானே?
நன்றி
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA B.ED
Cell 9659653138