விருச்சிகம் காலபுருஷ லக்கினத்திற்கு எட்டாம் வீடு.
அந்த வகையில் மறைபொருள் விஷயங்களில் திறன் பெற்றவர்கள். இலைமறை, காரியங்களில் கெட்டிக்காரர்கள்.
மற்றவர்களின் ரகசியங்களை வெளிக் கொணர்வதில் வல்லவர்கள்.
ஒருவரைப் பார்த்த மாத்திரத்தில் அவரின் பலம் மற்றும் பலவீனங்களை எடை போடுவதில் சிறந்தவர்.
செவ்வாய் வலுவாக இருக்கும் பட்சத்தில் செவ்வாய்க்குரிய இயல்பான குணங்களாக முன்கோபம்,அவசர புத்தி,நல்ல தைரியம் துணிச்சல் போன்ற சுபாவங்களை தன்னகத்தே கொண்டவர்கள். இயல்பிலேயே வேகமாக செயல்படுபவர்களாக, எதிர்ப்புகளை சந்திப்பதில் துளியளவும் பயவுணர்வு இல்லாதவர்களாக இருப்பார்கள்.
லக்னாதிபதியான செவ்வாய்,கடன்- நோய் எதிரி போன்ற விஷயங்களை குறிப்பிடும் ஆறாம் அதிபதியாகவும் இருப்பதால் பிரச்சினைகளை சந்திப்பது, எதிரிகளை வெற்றி பெறுவது இவர்களுக்கு இயல்பான விஷயம்.
இயல்பிலேயே பழி வாங்கும் குணமும், எதையும் போராடி பெறும் திறன் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். வைராக்கிய மனப்பான்மையோடு செயல்படுபவர்கள் இவர்களே.
புத்தர் குறிப்பிடுவதைப் போல கடந்த காலத்திலும் எதிர்காலத்திலும் வாழாமல் நிகழ்காலத்தில் வாழ்பவர்கள். நடந்து முடிந்த விஷயத்தைப் பற்றி வருந்தாதவர்கள். நடக்க போகும் விஷயங்களை பற்றியும் பெரிதளவில் அலட்டிக் கொள்ளாதவர்கள்.
லக்னாதிபதி மூன்றாம் இடமான முயற்சி ஸ்தானத்தில் உச்சம் பெற்ற நிலையில் இருக்கும் பொழுது எந்த ஒரு விஷயத்திலும் முடிவெடுப்பதில், முயற்சி செய்வதில், செயல்படுவதில் அதீத வேகம் இருக்கும்.
நல்ல உடல் பலம், எவரையும் எதிர்க்கும் திறன் கொண்டவராக உடல் ரீதியாக தன்னை பலப்படுத்துவதில் அதிக கவனம் கொண்டவராக இருப்பார். லக்னாதிபதி 6ல் இருக்கும் போது ஜாதகரின் முறையற்ற செயல்களால் நோய்கள் ஏற்பட்டு அதனால் பிரச்சனைகளை சந்திக்கும் வாய்ப்பு உண்டு.
லக்னாதிபதியான செவ்வாய் பத்தாம் வீட்டில் இருப்பது சிறந்ததாகும்.தொழில் ரீதியாக மேன்மை பெறும் அமைப்பு.
இவர்களின் இரண்டாம் வீடாக வருவது குருவை அதிபதியாக கொண்ட தனுசு. அந்த வகையில் குடும்ப உறுப்பினர்கள் நன்கு படித்தவர்களாக இருக்க வாய்ப்பு. ஜாதகர் சம்பாத்தியத்தில் நேர்மையை கடைப்பிடிப்பவராக இருப்பார். குருவின் வலுக்கேற்ற வகையில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஜாதகர், கல்வி, கேள்விகளில் சிறந்தவராக இருக்க வாய்ப்புண்டு.
இவர்களுக்கு மூன்றாம் வீடாக வருவது சனியை அதிபதியாக கொண்ட மகரம். மூன்றாமிடத்தில் லக்னாதிபதி உச்சம் அடையும் பட்சத்தில் ஜாதகர் தன்னுடைய இளைய சகோதரர்களிடத்தில் இடத்தில் ஆதிக்கம் செலுத்துபவராக இருப்பார்.
எந்த ஒரு செயலை தொடங்கும் போது முன்பின் யோசிக்காமல் தொடங்கி அவசரகதியில் செயல்பட்டு பின்பு அதன்பால்பால் வருந்தக் கூடிய அமைப்பு உண்டாகும்.
மூன்றாமிடத்தில் சனி தொடர்பு கொள்ளும் போது முயற்சிகளில் நிதான உணர்வு உண்டு.
நான்காம் அதிபதியாகவும் சனி பகவானே வருவதால் வீட்டில் ஜாதகரின் தந்தையைவிட தாய் திறமையானவராக இருக்க வாய்ப்பு.
மூன்று மற்றும் நான்காம் பாவகங்களுடன் சனி தொடர்பு கொள்ளும் பொழுது ஜாதகர் முயற்சி எடுப்பதில் தயக்கம் உடையவராக, ஜாதகருக்கு நடக்கக் கூடிய விஷயங்கள் குறிப்பாக நிலம், பூமி, வீடு, மனை ,வாகனம் தொடர்பான விஷயங்கள் தாமததித்தே நடக்கும்.
3 மற்றும் 4 க்கு உரிய சனி லக்னத்தில் அமரும் போது சுற்றத்தார்,உறவினர் மத்தியில் கெட்ட பெயரை உண்டாக்குவதற்கான வாய்ப்பினை உண்டாக்கும்.
இரண்டாம் அதிபதியான குரு 5ம் அதிபதியாகவும் வருவதால் பூர்வீக சொத்துக்கள் மூலம் ஆதாயம் காண்பவராக, நல்ல மன மகிழ்வான குழந்தைகளை பெற்றவராக இருக்க வாய்ப்புண்டு.
குழந்தைகள் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாகவும் ஆன்மீகம் சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள். லக்னாதிபதியே ஆறாம் அதிபதியாக வருவதால் தன்னுடைய நெருங்கிய இரத்த உறவுகள் பொருட்டு கடன் வாங்கும் சூழ்நிலை,
ஆறாம் இடத்தில் செவ்வாய் நின்ற நிலையில்
ஜாதகர் நோயால் பாதிக்கப்படக்கூடிய வாய்ப்புண்டு.
பாதிக்கப்பட்டாலும் மீண்டெழும் போராட்ட குணத்தை தன்னகத்தே கொண்டவர்கள்.
இவர்களின் ஏழாம் அதிபதியாக வருபவர் சுக்கிரன். அவரே 12ம் அதிபதியாகவும் வருவதால் மனைவி சற்று ஆடம்பர மனோபாவம் கொண்டவராக இருப்பார்.
தான் பயன்படுத்தும் விஷயங்களில் உயர்ந்த தரத்தினை பின்பற்றுபவராக இருக்கலாம். லக்னாதிபதி ஏழாம் இடத்தில் நின்றால் ஜாதகரும் அப்படிபட்டவரே.
இவரின் எட்டாம் வீடாக வருவது புதனை அதிபதியாகக் கொண்ட மிதுனம் தகவல் தொடர்பு, வசதிகள் போன்ற விஷயங்களால் பிரச்சனையை சந்திக்க வாய்ப்பு. மறைவான விஷயங்களில் ஜாதகருக்குஅதீத புத்திசாலித்தனம் இருக்கும். புதனே இலாபதிபதியாக வருவதால் தன்னுடைய தொழிலில் லாபம் குறித்த விஷயங்களை வெளியே சொல்லாதிருப்பதே நல்லது.
இவர்களின் ஒன்பதாம் அதிபதியாக சந்திரன் வருவதால் அன்பான கனிவான தந்தையை பெற்றவராக இருப்பார். ஜாதகருக்கு அவ்வப்போது ஆன்மீகம் தொடர்பான விஷயங்களில் அதீத ஜாதகருக்கு அதிக நாட்டமும், ஒரு சில தருணங்களில் அவற்றால் பயனில்லை என்பதாக நினைத்து அவற்றை வெறுத்து ஒதுக்குபவராகவும் இருப்பார்கள்.
லக்னாதிபதி 9-ஆம் இடத்திலும், 9ஆம் அதிபதி லக்னத்திலும் நீசமாகுவதே இதற்கான காரணம்.
தொழில் நிலையைப் பொறுத்தவரை சூரியன் பத்தாம் அதிபதியாக வருவதால் தொழிலில் நல்ல ஆளுமைத் திறன், சுய தொழில் செய்வதில் ஆர்வம், தொழிலில் புகழ் பெறும் வாய்ப்பு, அரசு பதவிகள், அரசாங்க வழியில் மேலான அனுகூலங்களை பெற்றவராக இருப்பார். இலக்னத்தில் சூரியன் இருப்பது சுய தொழிலில் பெரிய ஈடுபாடு உண்டு.
பெரிய மனிதர்கரளிடம் இருந்து தொழில் ரீதியான ஒத்துழைப்பினை மிக விரைவில் பெறுபவராகவும் இருப்பார்.
பதினொன்றாம் அதிபதியாக புதன் வருவதால் தன்னுடைய புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி மறைமுகமான வழிகளில் வருமானம் பெறுபவராக இருப்பார். புதன் 11ஆம் வீட்டுடன் தொடர்பு கொள்ளும் போது அதிக உழைப்பற்ற எளிய வழிகளில் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி வருமானத்தை தரக்கூடிய வாய்ப்புகளை உண்டாக்கும்.
12ஆம் வீட்டு அதிபதியாக சுக்கிரன் வருவதால் ஜாதகர் சுகபோக விஷயங்களின் பொருட்டு, சுக்கிரனின் காரகத்துவங்களுக்காக அதிகம் செலவளிப்பவராக இருப்பார்.
குறிப்பாக மனைவி, நண்பர்கள், கூட்டு தொழில், ஆடம்பர உபகரணங்கள் வகையில் அதிகப்பணம் செலவழிப்பர்.
லக்னத்தோடு குரு தொடர்பு கொள்ளும்பொழுது நேர்மையான வழியில் பொருளீட்டுபவராக நல்ல மனம் படைத்தவராக இருப்பார்கள்.லக்னத்தோடு புதன் தொடர்பு கொள்ளும் போது லாபத்தில் குறிக்கோள் கொண்டவராக, எந்த விஷயத்தை செயலைச் செய்தாலும் அதில் தனக்கு நன்மை உண்டா என்பதை சிந்தித்து செய்பவராக இருப்பார். சந்திரன் தொடர்பு கொள்ளும்போது அவ்வப்போது மனோரீதியான குழப்பங்களையும், முடிவெடுப்பதில் தயக்கங்களையும்கொண்டவராக இருப்பார். சுக்கிரன் தொடர்பு கொண்டால் ஆடம்பரம் சார்ந்த விஷயங்களில் அதிக நாட்டம் இருக்கும்.
லக்னத்தோடு சனி தொடர்புகொள்வது அதிக சோம்பல் தன்மையும், மந்த உணர்வினையும் உண்டாக்குவதோடு அவப்பெயரையும் பெற்றுத் தரும்.
ராகு தொடர்பு கொள்ளும்போது எல்லா விஷயத்திலும் அதிகப்படியான எதிர்பார்ப்பு கொண்டவராக , எதையும் பிரம்மாண்டமாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவராக இருப்பார். கேது தொடர்பு கொள்ளும் போது இயல்பிலேயே அதீத ஞானத்தைக் கொண்டவராக, பெரியளவினில் எதிலும் பற்றில்லதவராக இருப்பார்.
குரு,சூரியன் சாரம் பெற்றுள்ள தசா புத்திகள் முதன்மை நற்பலனையும் சந்திரன், செவ்வாய் சாரம் பெற்ற தசா புத்திகள் மத்திம பலன்களையும் தரும். ராகு கேதுக்களை பொருத்தவரை இலக்ன சுபர்களின் சாரம் பெற்ற நிலையில் நல்ல பலனைத் தருவார்கள்.
இவை அனைத்தும் பொதுபலன்களே. சுய ஜாதகத்தில் கிரகங்கள் நிலை மற்றும் பார்வையைக் கொண்டு பலன்கள் மாறுபடலாம்.
நன்றி
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA B.ED
Cell 9659653138