ஜோதிட ரீதியாக சுய ஜாதகத்தில் ராகு அல்லது கேதுவுடன் ஒரு கிரகம் நெருக்கமாக இணைந்திருந்தால் அந்த கிரகம் "கிரகணநிலை" அடைகிறது. இது அந்த கிரகத்தின் இயல்புகளை மங்க வைக்கும் அல்லது தரக்கூடிய பலன்களில் வித்யாசமான எதிர்மறையான விளைவுகளை தரும். அதாவது ராகு அல்லது கேதுவுடன் ஒரு கிரகம் மிக நெருங்க நிலையில் இருக்கும் பொழுது தன்னுடைய காரக மற்றும் ஆதிபத்திய விஷயங்களை ஜாதகருக்கு வழங்குவதில் பிரச்சனைகள் இருக்கும்.
★ இணைவின் வலிமை மற்றும் அதன் தாக்கம்
➝ இதில் எந்த அளவுக்கு பிரச்சனை என்பது எந்த அளவிற்கு மேற்கண்ட கிரகங்கள் ராகு அல்லது கேதுடன் மிக நெருங்கிய நிலையில் இருக்கின்றன என்பதை பொறுத்ததாகும்.
➝ இணைவின் அளவு டிகிரி அடிப்படையில் மிக நெருங்கி காணப்படும் பொழுது பாதிப்பின் வீரியம் அதிகம் இருக்கும்.
➝ இருவருக்குமான இடைவெளி அதிகரிக்கும் பொழுது பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை.
➝ இருவருக்குமான இடைவெளி எட்டு டிகிரிக்குள் உள்ளாக இருக்கும் பொழுது ராகு மற்றும் கேது மேற்கண்ட கிரகத்தின் காரக ஆதிபத்திய விஷயங்களை வழங்குவதில் ஜாதகருக்கு தடைகளை ஏற்படுத்துவார்கள்.
➝ இருவருக்குமான இடைவெளி 13 டிகிரிக்கு மேலாக அதிகரிக்கும் பொழுது பெரிய அளவில் குறைபாடுகள் இருக்காது. ஜாதகருக்கு கிடைக்க வேண்டிய பலன்கள் தாமதமாக கிடைத்தாலும் கிடைக்க கூடிய அளவிலேயே இருக்கும்.
★ இணைவாக எப்போது கருதப்படும்?
➝ இதில் இணைவு என்பது ஒரே ராசியில்தான் இருந்தாக வேண்டும் என்று இல்லை
அதாவது ஒரு கிரகம் ராசியின் 29-வது டிகிரியில் இருந்து மற்றொரு கிரகம் அடுத்த ராசியில் முதல் ஐந்து டிகிரிக்குள் ஒரு கிரகம் இருந்தாலும் மேற்கண்ட நிலையையும் இணைவாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.
➝ அதேபோல ஒரே ராசியில் இரு கிரகங்கள் இருந்தாலும் இருவருக்குமான இடைவெளி அதிகரித்து காணப்பட்டால் அதை இணைவாக கருத வேண்டியதில்லை.#Iniyavan
★ ராகுவின் பாதிப்பு கேதுவை விட அதிகம்
➝ இதில் கேதுடன் இணைந்த கிரகத்தை காட்டிலும் ராகுவுடன் இணைந்த கிரகத்தின் காரக, ஆதிபத்திய விஷயங்களிலே ஜாதகருக்கு பெரிய அளவிற்கான குறைபாடுகள் இருக்கும்.
★ ஸ்தான வலிமை முக்கியம்
➝ அதேபோல் ராகு கேதுடன் இணைந்த கிரகம் எந்த அளவிற்கு ஸ்தான வலிமையை பெற்று இருக்கிறது என்பதும் கவனிக்கத்தக்கதாகும்.
➝ அதாவது உச்சம், ஆட்சி, மூலத்திரிகோண வீடுகளில் நின்று ராகு மற்றும் கேதுடன் மிக நெருங்கிய நிலையில் இணைந்திருப்பதற்கும் ஸ்தான பலத்தின் அடிப்படையில் பகை, நீசம் பெறக்கூடிய வீடுகளில் இருந்து ராகு மற்றும் கேதுடன் மிக நெருங்க நிலையில் இணைந்து இருப்பதற்கும் பலன்களில் பெரிய அளவிற்கான வித்தியாசங்கள் இருக்கும்.
★ வலிமையான கிரகம் - தாமதத்தோடு பலன்
➝ ஸ்தான பலத்தின் அடிப்படையில் நல்ல நிலையில் இருந்து ராகு, கேதுடன் ஒரு கிரகம் இணைந்திருக்கும் பொழுது முடிந்தவரை தன்னுடைய காரக ஆதிபத்திய விஷயங்களை ஜாதகருக்கு தரவே முற்படும். அதாவது மேற்கண்ட கிரகத்தின் காரகம் மற்றும் ஆதிபத்திய ரீதியிலான பலன்கள் ஜாதகருக்கு தாமதத்திற்கு பின்பு நடந்தேறும்.#Iniyavan
★ பலவீனமான நிலையில் பாதிப்பு அதிகம்
➝ அதேபோல ஸ்தான பலத்தின் அடிப்படையில் மிக பலவீனமான நிலையில் இருந்து ஒரு கிரகம் ராகு மற்றும் கேதுடன் மிக நெருங்கிய நிலையில் இருக்கும்பொழுது மேற்கண்ட கிரகத்தின் காரக ஆதிபத்திய விஷயங்களில் பிரச்சனைகள் இருப்பதை தெள்ளத் தெளிவாக ஜாதகர்களால் உணர இயலும்.
➝ உதாரணத்திற்கு நான்காம் அதிபதி நீசம் பெற்ற நிலையில் இருந்து ராகு அல்லது கேதுடன் மிக நெருங்கி நிலையில் இருக்கும் பொழுது நான்காம் இடம் குறிக்கக்கூடிய ஆதிபத்திய விஷயங்களான கல்வி, தாயார் ஆதரவு வீடு, வாகனம் சார்ந்த விஷயங்கள், மன நிம்மதி போன்றவற்றில் ஜாதகருக்கு குறைபாடுகள் இருப்பதை உணர முடியும். இதோடு மேற்கண்ட கிரகம் எதுவோ அந்த கிரகத்தின் காரகரீதியான குறைபாடுகளும் ஜாதகத்தில் மேலோங்கி இருக்கும்.
★ சுப கிரக பார்வை இருந்தால்?
➝ அடுத்ததாக ராகு மற்றும் கேதுவுடன் ஒரு கிரகம் மிக நெருங்கி நிலையில் இருந்தாலும் வலுப்பெற்ற சுப கிரகத்தின் பார்வை மேற்கண்ட இணைவிற்கு இருக்கும் பொழுது குறிப்பிட்ட கிரகத்தின் காரகம் மற்றும் ஆதிபத்திய ரீதியான குறைபாடுகள் பெரிய அளவுக்கு ஜாதகருக்கு இருக்காது. பார்க்கக்கூடிய சுப கிரகத்தின் பார்வை வலுவைப் பொறுத்து பலன்களில் மாறுபாடு இருக்கும். அதாவது சுப கிரகம் எந்த அளவிற்கு ஸ்தான பலத்தை பெற்று மேற்கண்ட இணைவை பார்க்கிறதோ அதற்கு ஏற்ப பாதிப்பின் வீரியம் குறைவாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
★ வீட்டு அதிபதியின் வலிமை
➝ அடுத்ததாக எல்லாவற்றிற்கும் மேலாக வீடு கொடுத்த கிரகத்தின் நிலையும் கவனித்தாக வேண்டும். ஏனெனில் வீடு கொடுத்த கிரகம் வலுப்பெற்று இருக்கும் பொழுது மேற்கண்ட வீட்டில் நின்ற கிரகம் போதுமானவரை தன்னுடைய காரக, ஆதிபத்திய விஷயங்களை தரக்கூடிய அளவிலேயே இருக்கும் என்பதால் ராகு மற்றும் கேதுடன் ஒரு கிரகம் மிக நெருங்கிய நிலையில் இருந்தாலும் வீடு கொடுத்த கிரகம் உச்சம், ஆட்சி, மூலத்திரிகோணம் என வலுவுடன் இருக்கும்பொழுது மேற்கண்ட கிரகத்தின் வீட்டில் நின்ற ராகு மற்றும் கேதுடன் இணைந்துள்ள கிரகத்தின் காரகம் மற்றும் ஆதிபத்திய ரீதியான விஷயங்களில் ஜாதகருக்கு பெரிய அளவிற்கான குறைபாடுகள் இருக்காது.#Iniyavan
★ கிரகணம் அடைந்த கிரகத்தின் தசா காலம் வருகிறதா அல்லது இல்லையா?
➝ அடுத்ததாக கிரகணம் பெற்ற கிரகத்தின் தசா காலங்கள் வராமல் இருப்பதும் நல்லதாகும். ஏனெனில் எந்த கிரகம் பாதிப்பை அடைந்திருந்தாலும் அந்த கிரகத்தின் தசா வரும்பொழுது தான் ஜாதகர் அதிக பாதிப்பை உணர்வார் என்பதன் அடிப்படையில் கிரகணம் பெற்ற கிரகத்தின் தசா காலங்கள் ஜாதகருடைய வாழ்நாளில் வராமல் இருப்பதும் சிறப்பாகும்.
★ பலன்களில் தாமதம் மற்றும் மனநிலை
➝ பொதுவாக கிரகணம் பெற்ற கிரகத்தின் காரக, ஆதிபத்திய விஷயங்கள் வாயிலாக நடைபெற வேண்டிய பலன்கள் ஜாதகருக்கு கிடைப்பதில் அதீத தாமதங்கள் இருக்கும்.
➝ மேற்கண்ட கிரகத்தின் காரக ஆதிபத்திய விஷயங்களில் நல்ல பலன்களை பெறுவதற்கு ஜாதகர் அதிகமான முயற்சிகளை செய்தாக வேண்டும். ஏற்படக்கூடிய தாமதங்களை அவர் பொறுப்பெடுத்தாமல் கடக்க கூடிய மனநிலையை பெற்றாக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
➝ எதிர்மறை பலன்கள் நடக்கும் பொழுது அதை ஏற்றுக் கொண்டு கடந்து செல்லக்கூடிய சகிப்புத்தன்மையை ஜாதகர் அவசியம் தன்னிடத்தில் ஏற்படுத்திக் கொள்வது நல்லது.#Iniyavan
★ உதாரணம் - திருமணம் / தொழில் தாமதம்
➝ உதாரணத்திற்கு ஏழாம் அதிபதி ராகு அல்லது கேதுடன் மிக நெருங்கிய நிலையில் இணைந்திருக்கும் போது திருமணம் அதீத தாமதம் ஆகுதல், திருமண வாழ்வில் பெரிய அளவிற்கான திருப்தியின்மை போன்ற பலன்கள் இருக்கும். திருமண வாழ்வில் சகிப்புத்தன்மையை அதிகமாக கடைப்பிடிப்பதன் வாயிலாக இந்த பிரச்சனையை ஜாதகரால் எதிர்கொள்ள முடியும்.
➝ அதே போல உதாரணத்திற்கு பத்தாம் அதிபதி ராகு அல்லது கேது உடன் மிக நெருங்கிய நிலையில் இருக்கும்பொழுது ஜாதகருக்கு அமைய வேண்டிய வேலை மற்றும் தொழில் சார்ந்த விஷயங்களில் அதீத தாமதம் இருக்கும். மற்ற கிரகங்களைப் பொறுத்து இவர்கள் இயல்பாகவே திறமையானவர்களாக இருந்தாலும் ஜீவனக்காரகனான பத்தாம் அதிபதி ராகு அல்லது கேதுடன் மிக நெருங்கிய நிலையில் இணைந்து கிரகணம் பெற்று இருப்பதால் தொழில் மற்றும் வேலை சார்ந்த விஷயங்களில் பிரச்சனைகள், முயற்சி செய்தும் பெரிய அளவிற்கான முன்னேற்றம் இன்மை, உழைப்பினை தந்தும் அதற்கான அங்கீகாரம் கிடைக்காத நிலை, தடை, தாமதங்கள் இருப்பதை இவர்களால் பெரிய அளவில் நினைத்த மாத்திரத்தில் உடனடியாக சரி செய்து விட முடியாது. மாற்று முயற்சிகளையும், மாற்று வழிகளையும் செய்வதோடு காரக ஆதிபத்திய ரீதியான விஷயங்களில் மிகுந்த விழிப்புணர்வுடனும், பொறுமையாகவும் திடமான மனதுடன் தொடர் முயற்சிகளை கைவிடாது செய்து கொண்டிருப்பது மட்டுமே ராகு மற்றும் கேதுடன் இணைந்து கிரகணம் பெற்ற கிரகத்தின் காரகம் மற்றும் ஆதிபத்திய ரீதியான குறைபாடுகளை எதிர்கொள்வதற்கான வழியாகும்.#Iniyavan
★ பரிகார வழிபாடுகள்
➝ சுய ஜாதகத்தில் ராகு அல்லது கேதுடன் ஒரு கிரகம் மிக நெருங்கி நிலையில் இணைந்து இருந்து நடைமுறை வாழ்வில் மேற்கண்ட கிரகத்தின் காரகம் மற்றும் ஆதிபத்திய ரீதியான விஷயங்கள் அதிக குறைபாடுகளை எதிர்கொள்பவர்கள் வருடத்திற்கு ஒருமுறை தங்களுடைய பிறந்த நட்சத்திர தினங்களில் ராகு, கேதுக்குரிய ஸ்தலங்களுக்குச் சென்று ஆத்மார்த்தமான நம்பிக்கையுடன் சரியான பூஜை முறைகளுடன் வழிபாடுகளில் கலந்து கொள்வது நல்லதாகும்.
➝ ராகுவால் அதிகமான தடை, தாமதங்கள் சந்திப்பவர்கள் போதுமான முயற்சிகளைச் செய்தும் நடைமுறை வாழ்வில் பெரிய அளவிற்கான முன்னேற்றங்கள் இன்றி தவிப்பவர்கள், பிரச்சனைகளை சந்திப்பவர்கள் அனுதினமும் துர்க்கை அன்னை அல்லது கால பைரவர் வழிபாட்டை வழக்கப்படுத்திக் கொள்வது நல்லது.
➝ எந்த கிரகம் ராகுவால் மிக நெருங்கி நிலையில் பாதிக்கப்பட்டுள்ளதோ அந்த கிரகத்தின் கிழமைகளில் வரக்கூடிய ராகு காலத்தில் வழிபாடுகளை கடைப்பிடிப்பது பொதுவாக நல்லதாகும்.
➝ கேதுவால் தடை, தாமதங்களை சந்திப்பவர்கள் அனுதினமும் முழுமுதற் கடவுளான விநாயகர் வழிபாட்டை கடைபிடிப்பது நலம் தரும்.
➝ ராகு மற்றும் கேது நம்முடைய முன்னோர்கள் அதாவது பித்துருக்களை குறிப்பிடக்கூடிய கிரகம் என்பதால் ஆண்டுதோறும் நம்முடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் போன்றவற்றை சரியாக கடைபிடிப்பதும் அவசியமாகும்.#Iniyavan
➝ அமாவாசை தினத்தில் முன்னோர்களின் படத்திற்கு விளக்கேற்றி வழிபடுவது போல கோயிலுக்கு சென்று அவர்களின் ஆத்ம சாந்திக்காக நெய் தீபம் ஏற்றி வழிபடலாம். ஆதரவற்றோர்களுக்கு அன்னதா
னம் செய்யலாம்.
➝ பசுவிற்கு அகத்திக்கீரை வழங்குதல், பறவைகளுக்கு தானியங்களை உணவாக தருதல், தெரு நாய்களுக்கு உணவளித்தல், அனுதினமும் காகத்திற்கு தவறாது உணவு வழங்குதல் போன்றவை நல்லதாகும்.
🙏 நன்றிகள்
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA Astrology
📞 Cell: 9659653138
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக