ஒருவரின் ஜாதகத்தில் அரசு வேலை என்பது எப்போது அமையும் என்பதை பார்ப்பதற்கு முன்னர் அரசு வேலைக்கான அமைப்பு உண்டா என்பதையும் முன்னரே தீர்மானிக்கவேண்டும். பொதுவாக சம்பாதித்தியத்திற்கு காரகத்துவம் வகிக்க கூடிய சம்பாத்ய காரகன் சூரியன் நல்ல நிலையில் இருக்க வேண்டும்.
ராசியில் மட்டுமின்றி அவர் நவாம்சத்திலும் நல்ல நிலையில் இருப்பது கூடுதல் பலம்.
முக்கியமாக சூரியன் பகை, நீசம் போன்ற நிலையில் இருக்கும்போது திக்பலம், வர்க்கோத்தமம், வீடு கொடுத்தவர் வலுப்பெற்ற நிலையில் இருப்பது, வலுவான சுப கிரகங்களின் பார்வையில், இணைவில் இருப்பது அவசியமாகும்.
அடுத்ததாக எந்த ஒரு வேலையில் நிலைப்பதற்கு கடின உழைப்பு தேவை என்பதை சுட்டிக்காட்டும் விதமாக காலபுருஷ லக்னத்திற்கு பத்தாம் வீட்டில் உச்சமடையும் செவ்வாயும் பலம் பெற்றிருப்பது சிறப்பு.
அடுத்ததாக கர்மகாரகன், தொழில் காரகன் என்று அழைக்கப்படும் சனி பகவான், கால புருஷ இலக்னத்திற்கு தொழில் மற்றும் லாப ஸ்தான அதிபதியான சனி பகவான் நல்ல நிலையில் (சுபர்களின் பார்வை) இருப்பது சிறப்பு.
நாடி ஜோதிட முறையில் ஒருவரின் ஜாதகத்தில் சனி பகவானின் நிலையைக் கொண்டே தொழில் நிர்ணயிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கண்ட கிரகங்கள் லக்னத்திற்கு 3,6,10 ,11 ஆதிபத்தியம் பெறுவதும் மேற்கண்ட இடங்களில் நல்ல நிலையில் இருப்பதும் சிறப்பு.
காலபுருஷ லக்கனத்திற்கு பாக்கியாதிபதியான குரு பகவானின் பார்வையைப் மேற்கண்ட கிரகங்கள் பெறுவதும் மேன்மையாகும்.
ஏன் 3, 6, 10, 11ம் பாவகங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன?
மூன்றாமிடம் முயற்சி ஸ்தானம், வெற்றி,
கீர்த்தி, புகழ் போன்றவற்றை குறிப்பிடும் இடம். அப்படிப்பட்ட முயற்சி ஸ்தானத்தில் தன்னம்பிக்கை கிரகம் சூரியன் இருப்பதும், சுறுசுறுப்புக்கு காரணமாக இருக்கும் செவ்வாய் இருப்பதும் வேலைக்கான முயற்சி எடுப்பதற்கான தன்னம்பிக்கையையும் துணிவைத் தரும்.
அடுத்ததாக ஆறாமிடம் ஒருவரின் அடிமை ஜீவனத்தை சுட்டிக் காட்டும் இடம். அவ்வகையில் அரசு வேலை என்பதும் அடிமை வேலை தானே..
அதே நேரத்தில் ஆறாம் பாவகம் போட்டித் தேர்வுகளை குறிக்கும் பாவகம், அரசுவேலைக்கு முக்கிய தகுதியாக இருப்பது போட்டி தேர்வு வெற்றியே.
அடுத்ததாக பத்தாம் பாவகம், ஜாதகரின் தொழில் மற்றும் கர்ம ஸ்தானம். ஜாதகரின் செயல்திறனை வெளிப்படுத்தக்கூடிய தொழில் திறன் போன்ற விஷயங்களைச் சுட்டிக் காட்டும் இடம். மேற்கண்ட பத்தாம் பாவகத்தில் சூரியன், செவ்வாய் திக்பல நிலையில் பலம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. கால புருஷ லக்னத்திற்கு பத்தாம் அதிபதியும், இலாபாதியுமான தொழில்காரகன் சனி ஒருவரின் ஜாதகத்தில் பத்தாம் வீட்டில் நல்ல நிலையில் இருக்கும்போது உழைப்பதில் அவருக்கு அதிக ஈடுபாடு இருக்கும்.
அடுத்ததாக பதினொன்றாம் பாவம் ஒருவரின் வருமானத்தை சுட்டிக்காட்டக் கூடிய இடம், குறிப்பாக தொழிலில் ஏற்படும் வருமானம், பத்தாம் வீட்டிற்கு தனஸ்தானம் பதினொன்றாம் பாவகம் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வகையில் பதினொன்றில் சூரியன் இருப்பது அரசு வகையில் வருமானத்தை ஏற்படுத்தித்தரும்.
நிறைவாக 3, 6, 10, 11ம் பாவங்கள் முக்கியத்துவம் பெறுவதற்கு மற்றொரு சூட்சுமமும் அடங்கியிருக்கிறது.
மேலே நான் கூறிய கிரகங்கள் அனைத்துமே பாப கிரகங்கள்.
3, 6 ,10 ,11 உபஜெய ஸ்தானங்கள். உபஜெய ஸ்தானங்களில் பாபகிரகங்கள் தானே இருக்கவேண்டும்?
இவற்றுடன் லக்னம், லக்னாதிபதி நல்ல நிலையில் இருக்க வேண்டும். லக்னம், லக்னாதிபதி வலுக் குறைந்த நிலையில் இருக்கும் பொழுது ராசி, ராசி நாதன் வலுவாக இருந்தால் ராசியில் இருந்து 3, 6, 10, 11 பாவகங்களை எடுத்துக்கொள்ளலாம்.
போட்டித் தேர்வுகள் மூலம் வேலையைப் பெறுவதற்கு அளப்பரிய விஷயமாக இருப்பது ஞாபகசக்தி. அந்த வகையில் ஒருவரின் ஞாபக சக்தியை குறிப்பிடும் 5ஆம் இடம், 5-ஆம் இடத்து அதிபதி நல்ல நிலையில் இருக்க வேண்டும். அல்லது ஞாபக சக்திக்கு காரகத்துவம் வகிக்கக்கூடிய குரு பகவான நல்ல நிலையில் இருக்க வேண்டும்.
அடுத்ததாக எந்த கிரகம் எந்த வேலையைத் தரும் என்று பார்த்தோமேயானால் போதிக்கும் தொழில், பணம், நகை தொடர்புடைய தொழில்கள், வங்கி தொடர்புடைய தொழில்களுக்கு குருவும், புதனும் காரகத்துவம் வகிக்கிறார்கள்.
கட்டுமானம், இயந்திரம், வருவாய் துறை சம்பந்தப்பட்ட பணிகளுக்கு செவ்வாயும்,
உள்ளாட்சி, மக்கள் தொடர்புடைய சேவை பணிகளுக்கு சனிபகவானும், அரசியல், அதிகாரத்தை வெளிப்படுத்தக்கூடிய பதவிகளுக்கு சூரியனும் பொறுப்பினை ஏற்கிறார்கள்.
மருத்துவம் தொடர்புடைய பணிகளுக்கு சூரியன், செவ்வாய் போன்ற கிரகங்களுக்கு குரு தொடர்பு இருக்க வேண்டும்.அறுவை சிகிச்சை மருத்துவத்திற்கு கேது பொறுப்பினை ஏற்கிறார்.
பயணம் தொடர்புடைய அரசுப் பணிகளுக்கு சந்திரன் பொறுப்பினை ஏற்கிறார்.
இரயில்வே தொடர்புடைய பணிகளுக்கு இரும்பு மற்றும் இயந்திரத்திற்கு காரகத்துவம் வகிக்கூடிய சனியும் செவ்வாயும் பொறுப்பு ஏற்கிறார்கள்.
ரயில்வே பணி என்பது பயணம் தொடர்புடையது என்பதால் சந்திரனும் ஒருவகையில் பொறுப்பினை ஏற்பார்.
அனைத்து தொழில் சார்ந்த விஷயங்களையும் ஒரே பதிவில் விளக்கிவிட இயலாது என்பதால்
அடுத்ததாக வேலை எப்போது கிடைக்கும் என்பதை பார்ப்போம்.
வேலை எப்போது கிடைக்கும் என்பதை கண்டறிய அவரின் வருமானம் எப்போது உயரும் என்பதை ஆராய்ந்தாலே போதும். மேற்கண்ட நிலைகளில் கிரகங்கள் தசாபுக்தி நடத்தும் நிலையில்
அடுத்து வரக்கூடிய தசாபுக்திகள் அவரின் வருமானத்தை உயர்த்துவதாக இருந்தால் அவர் கண்டிப்பாக பதவியில் அமர்வார்.
குறிப்பாக தன ஸ்தானாதிபதி, லாபாதிபதி, உயர்வை குறிப்பிடும் ஒன்பதாம் அதிபதி, அடிமை ஜீவனத்தை உற்பத்தி குறிப்பிடும் ஆறாம் அதிபதி, பதவியை குறிப்பிடும் பத்தாம் அதிபதி, பூர்வ புண்ணிய பலனை உணர்த்தும் ஐந்தாம் அதிபதி,
ஜாதகருக்கு நன்மை செய்யும் லக்னாதிபதி,
பத்தில் திக்பலம் பெற்ற சூரிய, செவ்வாய்
தசா புக்திகள் நல்ல நிலையில் நடக்குமேயானால்,
இவற்றுடன் கோச்சாரமும் ஓரளவு ஒத்துழைக்கும் போது ஜாதகர்
அவர் வேலையினை பெற தயாராகிவிட்டார் என்பது தெரியவரும்.
மேற்கண்ட ஜாதக அமைப்புகள் உங்களது ஜாதகத்தில் தென்படுமேயானால் நீங்கள் தாராளமாக அரசு வேலைக்கு முயற்சி செய்யலாம்.
வாழ்த்துக்கள் மற்றும்
நன்றிகளுடன்...
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA B.ED
Cell 9659653138
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக