இன்றைய கால சூழ்நிலையில் இடமாற்றம் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. வேலை, திருமணம்,பதவி உயர்வு , ஊதிய குறைபாடுகள் இவைகளின் பொருட்டு ஒவ்வொருவரும் இடமாற்றத்தினை சந்திக்கிறார்கள்.
ஜோதிட ரீதியாக சந்திரன் இடமாற்றத்திற்கு காரகத்துவம் வகிக்கிறார். தினந்தோறும் மாற்றமடையக் கூடிய கிரகம் சந்திரனே.
அந்த வகையில் சந்திரன் தொடர்புடைய தசாபுக்திகள் இடமாற்றத்திற்கு வழிகோலும்.
பூர்வீக இடத்தை விட்டு தேசாந்திரம் சென்று பிழைப்பதுடன் இராகுவும், எதிர்பாராத திருப்பங்கள், இடமாற்றங்களுடன் கேதுவும் தொடர்பு பெறுகிறார்கள்.
நீண்ட தூர இடங்களைக் குறிப்பிடும் சர ராசிகளில் மேற்கண்ட கிரகங்கள் அமர்ந்து தசா புக்தி நடத்தும் போது ஒருவர் இட மாற்றத்தினை எதிர்கொள்வார்.
ஆதிபத்திய ரீதியாக மூன்றாமிடம் குறைவான தூரத்திற்கு பயணம் செய்தலையும், ஒன்பதாமிடம் நீண்ட தூர பிரயாணங்கள், குறிப்பாக கல்வி சார்ந்த விஷயங்களுக்கு பயணம் மேற்கொள்வதை குறிக்கின்றன. 8 மற்றும் 12ஆம் இடங்கள் அந்நிய இடங்களில் சென்று பிழைப்பதை வெளிப் படுத்துகின்றன.
3 மற்றும் 12 ஆம் அதிபதிகளே இடமாற்றத்திற்கு வழிகோலுவதில் முக்கியத்துவம் பெறுகின்றனர்.
அடுத்ததாக இவற்றுடன் இடமாற்றம் எதற்காக என்பதை ஆராய்தோமேயானால்
மேற்கண்ட அமைப்புகளுடன் நான்காம் அதிபதி தொடர்பு பெரும் பொழுது அவர் கல்வியின் பொருட்டோ அல்லது இருப்பிட மாற்றத்தின் பொருட்டோ இடமாற்றத்தை சந்திப்பார். ஏனெனில் நான்காம் இடம் வீட்டைப்பற்றி குறிப்பிடக்கூடியது. பத்தாம் அதிபதி அல்லது ஆறாம் அதிபதி தொடர்பு ஏற்படும் பொழுது சுயதொழில், உத்யோகம், பதவி உயர்வு இவற்றின் காரணமாக இட மாற்றத்தினை சந்திப்பார். ஏழாம் அதிபதி அல்லது சுக்கிரன் தொடர்பு பெறும் போது திருமணம்,ஆடம்பர வசதிகள் நிறைந்த சூழ்நிலை, வீடு இவற்றின் பொருட்டு இடமாற்றம் உண்டாகலாம்.
இரண்டு மற்றும் 11 ஆம் அதிபதி தொடர்பு ஏற்படும்போது வருமானம் உயர்வின் பொருட்டு இடமாற்றம் உண்டாகலாம். ஒன்பதாம் அதிபதி தொடர்பு கிடைக்கும் போது முதுநிலை கல்வியின் பொருட்டு இடமாற்றம் உண்டாகலாம்.
புகார் மற்றும் அவதூறுகளைக் குறிப்பிடும் இடம் 6 ஆம் இடம். அந்த வகையில் புகாரின் அடிப்படையில் ஒழுங்கு நடவடிக்கையின் பொருட்டு இடமாற்றம் உண்டாகும்.
இடமாற்றம் எந்த திசையை நோக்கி என்பது தொடர்புடைய கிரகம் மற்றும் ராசியின் திசையை பொறுத்தது ஆகும்.
இடமாற்றம் நல்லதா (அ) கெட்டதா என்பது தொடர்புடைய தசா புத்திகளின் நல்ல மற்றும் தீய ஆதிபத்யத்தினை பொறுத்ததே.
பொதுவாக எந்த ஒரு நீண்ட இடமாற்றத்திற்கு முன்பு குலதெய்வ வழிபாட்டினை மேற்கொண்ட பின்பு
இட மாற்ற முயற்சிகளை மேற்கொள்வது நல்லதாகும்
நன்றி
ப.இனியவன் கார்த்திகேயன் MA B.ED
Cell 9659653138
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக