அனுபவம் வாய்ந்த பல ஜோதிடர்கள் ஜாதகத்தை கொடுத்தவுடன் சில மணித்துளிகள் ஜாதகத்தை ஆராய்ந்து விட்டு இந்தந்த விஷயங்கள் நடந்திருக்கின்றன. தற்பொழுது நீங்கள் இந்த விஷயத்திற்காக ஜாதகம் பார்க்க வந்திருக்கிறீர்கள் என்பதை மிகத் தெளிவாகச் சொல்லி பிரம்மிக்க வைப்பார்கள்.
இது எவ்வாறு சாத்தியம்? அவர்களால் மிகச்சரியாக துல்லியமான காரணத்தை எவ்வாறு சொல்ல முடிகின்றது.
ஒவ்வொன்றாய் பார்ப்போம்.
இதற்கு முதலில் துணை நிற்கும் விஷயம் தசா புத்திகள்.
ஏனெனில் ஜோதிட சாஸ்திரத்தைப் பொறுத்தவரை தசா புத்திகளே நடக்கக்கூடிய சம்பவங்களை நிர்ணயிக்க கூடிய வல்லமை பெற்றதாக இருக்கின்றது.
இவற்றுடன் ஜோதிடர் ஜாதகர் என்ன நோக்கத்திற்காக வந்திருக்கிறார் என்பதை துல்லியமாக அறியத் துணை நிற்கும் மற்றொரு விஷயம் ஜாதகரின் வயது என்றால் மிகையில்லை.
ஜாதகரின் தற்போதைய வயதினை கொண்டு கேள்வியை யூகிக்க இயலும்.
ஏற்கனவே 1 முதல் 10 வயதிற்கும் குறைவான குழந்தைகளின் ஜாதகத்தை கொண்டு வந்தவர்களின் கேள்விகள் என்னவாக இருக்கும் கூடும். அதற்கான தீர்வுகள் என்னென்ன என்பதை விளக்கி இருந்தேன்.
(முந்தைய பதிவை படிக்க ...https://iniyavanastrology.blogspot.com/2021/01/blog-post_31.html?m=1)
இந்தப் பதிவினில் 10 முதல் 20 வயது வரை உள்ளவர்கள் ஜாதகங்களாக இருப்பின் என்ன கேள்வியாக இருக்கலாம். அதற்கான தீர்வுகள் என்னென்ன என்பதை ஆராய்வோம்.
முதன்மையான கேள்வி குழந்தையின் கல்வி தொடர்புடையதாக இருக்கும். பையன் சரியாகப் படிப்பதில்லை. சரியாகி விடுவானா? இனிவரும் காலங்களில் எப்படி படிப்பான் என்ற கேள்விகள் வாடிக்கையானது.
அடுத்ததாக ஆரோக்கியம், உடல் நிலை குறித்த கேள்விகளாக அமையலாம். குழந்தைகளின் ஒழுங்கீனமான பழக்க வழக்கங்கள், குழந்தைகளின் பிடிவாதம்,
பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்குமான முரண்பாடுகள், சண்டை சச்சரவுகள்.
பெண் குழந்தைகள் எனும் பட்சத்தில் திருமணம் தொடர்பான கேள்விகள், 15 வயதினை தாண்டிய நபர்கள் எனும் பட்சத்தில் காதல் விவகாரங்கள் அது தொடர்புடைய பிரச்சினைகள் அவமானங்கள், பாதிப்பு தொடர்புடைய கேள்விகளாக இருக்கக்கூடும்.
பொதுவாக 2,4,9 ஆம் பாவங்கள் கல்விக்குரிய இடங்கள். அவை பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கும் போது சனி,செவ்வாய் ராகு கேதுக்கள், அட்டம, விரையாதிபதி தொடர்பினை பெறும்போது கல்வி தொடர்புடைய கேள்விகள், இடர்பாடுகள், பாடங்களில் தோல்வி குறித்த கேள்வியாக கேட்கலாம்.
பெரும்பாலும் பருவ வயதில் வரக்கூடிய ராகு, சுக்கிரன் புத்திகள், ஏழாம் அதிபதி புத்தி, சுக்கிரன் வீடுகளான ரிஷபம் துலாம் இவற்றில் நின்ற ராகு,கேது,சனி, செவ்வாய் புத்தியில் எதிர்பாலினம் தொடர்பான விஷயங்களில் தவறான ஈடுபாட்டை தந்து அதன் மூலம் பெயர் கெட வைக்கும்.
இவை மட்டுமின்றி 16, 17 வயது நிரம்பிய ஜாதகம் எனில் அடுத்து என்ன படிக்க வைக்கலாம்? எந்த துறை சரியாக இருக்கும் என்பன போன்ற கேள்வியாக இருக்க கூடும். இது போன்ற நிலைகளில் ஜாதகத்தில் எந்த கிரகம் வலுப் பெற்றுள்ளது? வரக்கூடிய தசா புத்தி காலங்கள் எந்த நிலையில் உள்ளது. கிரகங்கள் தரக்கூடிய கல்வி,
இவற்றினை ஆராய்ந்து என்ன படிக்க வைக்கலாம் என்பதை பதிலளிக்க வேண்டும்.
கொண்டுவரப்பட்ட ஜாதகத்தில் 4, 9 ஆம் அதிபதிகள் ஆறாம் அதிபதி தொடர்பை பெற்று தசாபுத்தி நடத்தும்பொழுது (அ)
4,9 இல் நின்ற ஆறாம் அதிபதி தசா புத்தி
குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்குமான முரண்பாடுகள், சண்டை சச்சரவுகள்,சொல் பேச்சு கேட்காமை போன்ற கேள்விகளாக இருக்கலாம். விரையாதிபதி தசாபுத்தி நடைபெறும் நிலையில் அவர் எந்த பாவத்துடன் தொடர்பு கொண்டுள்ளார் என்பதை பொருத்து பிரச்சனை இருக்க வாய்ப்புண்டு. உதாரணத்திற்கு விரையாதிபதி நான்காமிட தொடர்பினை பெரும் பொழுது கல்வியில் மேன்மையின்மை,
தாய்வழி சண்டை சச்சரவுகள்,எட்டாம் இட தொடர்பை பெறும் போது விபத்துகள் குறித்த பிரச்சினையாக இருக்கலாம்.
சில பெற்றோர்கள் பையனை விடுதியினில் சேர்ந்து படிக்க வைக்கலாமா? அல்லது வீட்டிலேயே வைத்து படிக்க வைக்கலாமா என்று கேட்பார்கள். உதாரணத்திற்கு ராகு தசா அல்லது நான்காம் ஒன்பதாம் பாவகங்களுடன் தொடர்பு கொண்ட ஆறாம் அதிபதி, அட்டமாதிபதி விரையாதிபதி தசா புக்திகள்,
அல்லது இவற்றுடன் தொடர்பு கொண்ட நான்காம் ஒன்பதாம் அதிபதி தசா புத்திகள், கோச்சார ரீதியாக அஷ்டமச்சனி, ஏழரைச்சனி நடக்கும் கால கட்டங்களில் குழந்தை வீட்டில் இருப்பதை விட பெற்றோரை பிரிந்து இருப்பதே சிறந்ததாகும்.
குழந்தையின் ஜாதகத்தில் அட்டமாதிபதி, ஏழாமிட தொடர்பு பெற்று தசா புக்தி நடக்கும்போது நண்பர்களின் பிரச்சனை குறித்த கேள்வியாக இருக்கலாம்.
இதுபோன்று எண்ணற்ற விஷயங்கள் இருக்கின்றன. வயதிற்கு ஏற்ற பொதுவான கேள்விகளை முன்கூட்டியே யூகித்து வைத்து,
நடந்து முடிந்த, நடக்க கூடிய தசா புத்திகளை தொடர்புபடுத்திப் பார்க்கும் பொழுது குறித்த பிரச்சினை என்ன என்பது தெரியவரும். அதற்கான தீர்வும் தெரியவரும்.
நிறைவாக இலக்னம் முதல் 12 பாவகங்கள், மற்றும் நவகிரகங்கள் பல்வேறு ஆதிபத்ய,காரகத்துவம் சார்ந்த விஷயங்களைக் குறிக்கும். அந்த வகையில் ஜோதிடர், தொடர்புடைய கேள்வி எந்த விஷயம் என்பதைச் சரியாக தேர்ந்தெடுக்க இறையருள் அவசியமாகும்.
அடுத்த பதிவில் 21 முதல் 35 வயது வரை உள்ளவர்கள் ஜாதகம் பார்க்க வரும் நிலையில் அவர்களின் பொதுவான கேள்விகள் எதுவாக இருக்கும் என்பதைப் பார்ப்போம்...
இணைந்திருங்கள்...
நன்றிகளுடன்..
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA B.ED
Cell 9659653138
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக