தசா புத்தி பலன் கணிப்பதில் நிபுணத்துவம் பெறுவது எப்போது?
ஜோதிட ரீதியாக ஒரு மனிதனுக்கு நடப்பிலுள்ள தசா புத்திகளே அவனது வாழ்வின் தற்போதைய சம்பவங்களை நிர்ணயிக்க கூடியதாக இருக்கின்றன. இத்துடன் முக்கியத்துவம் பெறும் மற்றொரு விஷயம் ஜாதகரின் வயது.
ஏனெனில் வயதைப் பொறுத்து தான் ஒரு அவயோகம் கிரகத்தின் தசா நடைபெறும்போது ஜாதகருக்கு என்ன பிரச்சனை தரும் என்பதை யூகிக்க இயலும்.
உதாரணத்திற்கு அவயோக கிரகமாக புதன் இருந்து ஒருவருக்கு தசா நடத்துவதாக எடுத்துக்கொள்வோம். மேஷ இலக்ன அன்பர்களுக்கு புதன் 3,6 என்ற இரு மறைவிவிட ஆதிபத்தியங்கள் பொறுப்பினை ஏற்ற அவயோகி ஆவார்.
17 வருடங்களாக நடைபெறும் புதன் தசா ஜாதகருடைய வாழ்க்கையின் பல விஷயங்களை தீர்மானிக்கக் கூடிய ஒன்றாக இருக்கும்.
இதே புதன் தசா, பாதிப்படைந்த நிலையில் படிக்கும் மாணவனுக்கும் வருகிறது என்றால் அவனுடைய கல்வியினில் பாதிப்பை தருவார்.
இதே புதன் தசா பாதிப்படைந்த நிலையில் ஒரு வியாபாரிக்கு வருகிறது என்றால் வியாபாரத்தில் தவறான முடிவுகளை எடுக்கச் செய்து, தவறான புத்தியை தந்து பாதிப்பினை தருவார்.
50 வயதினை கடந்த ஒரு பெரியவருக்கு (மேஷ லக்கினம்) ஆறாம் இடத்தோடு தொடர்பு பெற்று தசா நடத்தும் போது கடன் நோய்,வறுமை, எதிரிகளால் பிரச்சனை போன்றவற்றை தருவார்.
இதிலிருந்து தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் ஜாதகரின் வயதுக்கு ஏற்றவாறு ஒரு அவயோகம் கிரகத்தின் தசா காலங்கள் பாதிப்பைத் தரக் கூடியதாக இருக்கும்.
இதோடு ஜாதகரின் ராசிக்கு புதன் என்ன ஆதிபத்தியம் பெற்று இருக்கிறார் என்பதையும் பார்க்க வேண்டும்.
ஏனெனில் அந்த ஆதிபத்யம் தொடர்பான பிரச்சினைகளும் இருக்கலாம். உதாரணத்திற்கு விருச்சிக லக்னம், கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு புதன் இலக்னப்படி 8, 11 என்ற ஆதிபத்தியத்தினையும், இராசிப்படி(கும்பம்) 5, 8 என்ற ஆதிபத்ய பொறுப்பினையும் ஏற்பார்.
(ஒரு அவயோகம் கிரகத்தின் தசா நடைபெறும்பொழுது அந்த அவயோக கிரகத்தின் இரு ஆதிபத்தியங்களில் எந்த ஆதிபத்தியம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறதோ அந்த ஆதிபத்தியம் சார்ந்த பிரச்சனைகள் ஜாதகருக்கு இருக்கக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.)
மேற்கண்ட கும்பராசி அமைப்பில் முப்பது வயதினைக் கடந்து ஜாதகருக்கு ஐந்தாம் பாவகம் பாதிக்கபட்டு, பாதிப்பைத் தரக் கூடிய வகையில் புதன் தசை நடைபெறுவதாக கொண்டால்
என்ன பாதிப்பு என்பதை நீங்களே யூகிக்க இயலும்.
5-ஆம் இடம் என்பது குழந்தைகள், பூர்வபுண்ணிய சார்ந்த விஷயங்களை குறிக்கும்.
அந்த வகையில் குழந்தையின்மை குறித்த பிரச்சினையாக இருக்கலாம் (புத்திரக்காரகன் குருவின் நிலையையும் கவனத்தில் கொள்க)
அல்லது குழந்தைகளால் மன வேதனை போன்ற பிரச்சனையாக இருக்கக் கூடும் அந்த வகையில் ஜாதகரின் தற்போதைய நிலை என்ன என்பதை அறிய ஜோதிடத்தின் அடிப்படை விஷயங்கள் அனைத்தும் அத்துப்படியாக தெரிந்திருக்க வேண்டும்.
ஒரு அவயோக கிரகத்தின் தசா நடைபெறும்பொழுது ஜாதகர் பிரச்சனையை எந்த அளவுக்கு சமாளிப்பார் என்பதை தெரிந்து கொள்ள அவருடைய லக்னம் மற்றும் லக்னாதிபதியின் வலு தெரிந்திருக்க வேண்டும்.
உதாரணத்திற்கு அவருடைய தனவரவு பொருளாதார பலம் பற்றி அறிய 2,9,11ஆம் பாவகங்களின் பலம், பலவீனம் தெரிந்திருக்க வேண்டும்.
ஜாதகரின் தற்போதைய நிலை என்ன என்பதை தெரிந்து கொள்ள இலக்னம் முதல் 12 பாவங்களின் ஆதிபத்தியம் சார்ந்த விஷயங்கள் மனித வாழ்வின் எவற்றுடன் தொடர்புடையது என்பதையும் நவகிரங்களின் காரகத்துவ விவரங்களும் தெளிவாகத் தெரிந்திருக்க வேண்டும்
உதராணத்திற்கு சந்திரன் மனதுக்கு காரகம் வைக்கக் கூடிய கிரகம்.
ஆகையால்தான் அவர் மனோக்காரகன் என்று அழைக்கப்படுகிறார்.
அந்த வகையில் சந்திரன் பாதிக்கப்பட்ட நிலையில் ஒருவருக்கு தசா புக்தி நடக்கும் போது இவருடைய மனநிலை பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்பதை அறிய இயலும்.
இப்பொழுது, ஏன் கிரகங்களின் காரகத்துவம் முக்கியம் என்பது உங்களுக்கு புரிந்திருக்கும்.
ஒரு அவயோகம் கிரகத்தின் தசா நடைபெறும் போது லக்ன ராசிக்கு, எந்த ஆதிபத்யத்துடன் அதிக தொடர்பு கொண்டுள்ளது மற்றும் அவருடைய ஜாதகத்தில் எந்த ஆதிபத்தியம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது,
எந்த கிரகம் பலவீனமாக இருக்கிறது என்பதையெல்லாம் அறிய முற்பட்டால் பிரச்சனை என்னவென்பதை அறிந்திட இயலும்.
இத்தோடு பிரச்சனையின் தீவிரம் என்னவென்பதை கோச்சாரம் உணர்த்தும்.
அவயோக கிரகத்தின் தசா நடைபெறும்பொழுது கோட்சார ரீதியாகவும் அஷ்டம, ஏழரைச் சனி நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் ஜாதகரால் தாங்க முடியாத மன வருத்தத்தில் இருப்பதை அறிந்திட இயலும்.
இப்படிப்பட்ட நிலைகளில் ஜாதகரின் மனதிற்கு ஆறுதலாக,மனதிற்கு பலமளிக்கும் வகையில் தசாபுத்தி நிலையறிந்து நம்பிக்கை தரக்கூடிய வகையில் பதிலளிக்க வேண்டும்.
நிறைவாக ஒருவர் ஜோதிடத்தில் நிபுணத்துவம் பெற வேண்டுமென்றால் அடிப்படையான ஆதிபத்திய ,காரகத்துவ விஷயங்களில் தெளிவானது அவசியம்.
இத்தோடு சித்திரமும் கைப்பழக்கம் என்பதற்கு ஏற்ப ஜோதிடர் பலன் சொல்வதில் அனுபவங்கள் மற்றும் படிப்பினைகளைப் பெறப் பெற,
பரம்பொருளின் கருணையாலும், பலன் எடுப்பதிலும்,கணிப்பதிலும்,
துல்லியத் தன்மையை நோக்கி செல்வார் என்பதில் ஐயமில்லை...
இணைந்திருங்கள்
நன்றி...
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA.B.Ed
Cell 9659653138..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக