என்னிடம் ஜாதகம் பார்க்க வந்த நபர் தன்னுடைய மகனின் ஜாதகம் பார்க்க வந்திருந்தார்.
மகனின் திருமணம், எதிர்கால வாழ்க்கை தொடர்புடைய பலன்களை கேட்டார்.
எப்படிப்பட்ட வரன் அமையும் எந்த திசையிலிருந்து வரன் அமையும்? உறவில் அமையுமா? அந்நியத்தில் அமையுமா? எப்போது திருமணம் செய்யலாம் என்று கேட்டார். அதோடு தற்போது தீவிரமாக பெண் பார்த்து வருவதாகவும் சொன்னார்.
ஜாதகருடைய மகன் 24 வயதை கடந்து இருந்து 25 நடைமுறையிலிருந்தது.
மகனுடைய ஜாதகத்தில் லக்ன ,இராசிக்கு 2 ,7 மற்றும் 8-ஆம் இடங்களுடன் வலுப்பெற்ற பாபக் கிரகங்களான சனி மற்றும் செவ்வாயின் தொடர்பில் இருந்தது.
பொதுவாக லக்ன ராசிக்கு குடும்ப ஸ்தானமான சொல்லப்படக்கூடிய இரண்டாம் இடம், திருமணம் திருமண வாழ்க்கை சுட்டிக் காட்டக்கூடிய ஏழாமிடம், மாங்கல்ய பலத்தினை சுட்டிக் காட்டக்கூடிய எட்டாமிடம் போன்ற இடங்கள், சுபர் தொடர்பு இல்லாத பாப கிரகங்களின் தொடர்பில் இருக்கும் பொழுது
குறைந்தபட்சம் 30 வயதைக் கடந்த பின்பு, திருமண முயற்சிகளை எடுப்பது நல்லதாகும். இல்லையெனில் மண வாழ்க்கையில் பிரச்சினை கள் உண்டாகி வருத்தத்தை தொடர்ந்து தரும்.
போதாத குறைக்கு அவருடைய மகனின் ஜாதகத்தில் ஏழாம் அதிபதி வலு குறைந்த நிலையில், 11 ஆம் அதிபதி வலுப்பெற்ற நிலையில் இருந்தார். பொதுவாக 7ம் அதிபதி வலுக் குறைந்து 11 ஆம் அதிபதி பலம் பெற்றிருக்கக்கூடிய பட்சத்தில் ஜாதகரின் முதல் திருமணம் பிரச்சினைக்கு உள்ளாகி ஜாதகர் இரண்டாம் திருமணத்தை நோக்கி செல்வார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையெல்லாம் அறிந்த பிறகு, அவரிடம் உள்ளதைச் சொல்லி தற்போது உங்களின் மகனுக்கு திருமண முயற்சிகள் செய்ய வேண்டாம். 30 வயதைக் கடந்த பின்பு திருமணத்திற்கான முயற்சிகளை எடுங்கள் என்றேன்.
உடனே அவர் அவ்வளவு காலங்கள் பொறுமையாக இருக்க இயலாது .ஏதாவது பரிகாரம் சொல்லுங்கள் பரிகாரம் செய்து திருமணத்தை நடத்தி கொள்கிறேன் என்றார்.
பொதுவாக பரிகாரம் என்பது மோசமான தசா புக்தி நடக்கக் கூடிய கால கட்டங்களில் இறைவனினிடத்தில் நீயே கதி சரணாகதி அடைவதே. அப்போது நம்முடைய பிரச்சனையின் தீவிரம் இறைவனால் ஓரளவு நமக்கு குறையுமே தவிர,
ஒரு விஷயம் பாதிப்பு நிகழும் என்று தெரிந்த பின்னரும் அதில் ஈடுபட்டு பரிகாரத்தால் மாற்றிக்கொள்ளலாம் என நினைப்பது தவறாகும் அப்படிப்பட்ட பரிகாரங்கள் பலன் அளிக்காது என்றேன்.
ஜோதிடம் என்பதே வழிகாட்டும் சாஸ்திரம் தான். நீங்கள் செல்லும் பாதையில் உள்ள இடர்பாடுகள்,தடைகள் இன்னல்களை உங்களுக்கு எடுத்துச் சொல்லும்.
நீங்கள் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்பதையும் உங்களுக்கு உணர்த்தும். அதற்கேற்ப புத்திசாலித்தனமாக செயல்பட்டு, பொறுமையாக இருந்து பிரச்சினையின் பாதிப்பினில் இருந்து விடுபட்டுக் கொள்வதுதான் சிறந்ததே தவிர பரிகாரத்தினால் அதை முற்றிலும் மாற்றிவிடலாம் என்று நினைப்பது அபத்தம்.
நீங்கள் செல்லும் பாதையில் கற்கள், முட்கள் உள்ளன என உங்களுக்கு ஜோதிடம் தெரிவிக்கும். ஆகையால் நீங்கள் வேறு பாதையில் செல்லலாம் அல்லது பாதுகைகள் அணிந்து செல்லலாம்.
அதை விட்டுவிட்டு நான் பரிகாரம் செய்து விட்டேன் ஆகையால் அதே பாதையில்தான் நடப்பேன் என்று சொல்லி, எந்த விழிப்புணர்வும் இன்றி செயல்பட்டால் கற்களும், முட்களும் உங்களுடைய கால்களை பதம் பார்க்கத் தான் செய்யும்.
நீங்கள் மழையில் நனைந்தாக வேண்டும் என்பது விதியானால் குடை பிடித்து அதை மாற்றிக் கொள்ளலாமே தவிர, நான் மந்திரம் சொல்லி விட்டேன், பரிகாரங்கள் செய்து விட்டேன் அதனால் மழை என்மீது விழாது என நினைப்பது தவறு..
நிறைய பேர் பரிகாரங்களை இன்ஸ்டன்ட் ஆக பயனளிக்கக்கூடிய ஒன்று எனவும், பரிகாரங்களை செய்துவிட்டு எல்லாவற்றையும் மாற்றி கொள்ளலாம் எனவும் நினைக்கின்றார்கள்.
அப்படி நினைத்து செயல்படும் போது கண்டிப்பாக பாதிப்பையும் சந்தித்தாக வேண்டும் என்பதையும் மறுக்க இயலாது.
பரிகாரம் என்பது எவ்வித கால நிபந்தனையுமின்றி இறைவனிடத்தில் முற்றிலுமாக சரண் அடைவதே தவிர வேறு ஒன்றும் இல்லை...
நன்றி...
ப.இனியவன் கார்த்திகேயன் MA B.ED
CELL 9659653138
ஜோதிடம்,ஆன்மிகம் குறித்த தகவல்களைப் பெற இணைந்திருங்கள்...
https://t.me/Astrologytamiltricks
https://chat.whatsapp.com/G5TYdiqIlflFmfuSiTrr7N
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக