புதன், 20 ஜூலை, 2022

மீன லக்னத்திற்கு புதன் தசா எப்படியிருக்கும்?

இலக்ன ரீதியாக ஒன்பது கிரகங்களின் தசா புத்தி காலங்கள் எந்ததெந்த  இடங்களில் இருக்கும் பொழுது எது மாதிரியான பலன்களை தரும் என்பதை பார்த்து வருகின்றோம். ஏற்கனவே மீன லக்னத்திற்கு சுக்கிரன், சூரியன் மற்றும் சந்திரன், செவ்வாய் குருவினுடைய தசா காலங்கள்  எந்தெந்த இடங்களில் இருக்கும் பொழுது எது மாதிரியான பலன்களை கொடுக்கும் என்பதை பார்த்து இருக்கின்றோம். அந்த வகையில் இன்று மீன லக்னத்திற்கு புதன் தசா எப்படிப்பட்ட பலன்களை கொடுக்கும் என்பதை பார்ப்போம்.

மீன லக்னத்திற்கு புதன்,  தாயார், நிலம், பூமி, வீடு,மனை, வாகனம், கல்வி போன்ற விஷயங்களை சுட்டிக்காட்டக் கூடிய நான்காம் வீட்டு அதிபதியாகவும் வாழ்க்கைத்துணை, நண்பர்கள், கூட்டு தொழில் போன்ற விஷயங்களை சுட்டிக்காட்டக் கூடிய ஏழாம் வீட்டு அதிபதியாகவும் வருவார்.
மீன லக்னத்திற்கு லக்னத்தில் புதன் இருப்பதை பொருத்தவரையில் நீசம் பெற்ற நிலையில் இருப்பார். நீசம் பெற்றிருந்தாலும் லக்னத்தில் அவர் திக்பலம் அடைவது சிறப்பான அமைப்பு. மேற்கொண்டு சனி ராகு போன்ற பாபர்களின்  தொடர்பினை பெறாத வரை மீன லக்னத்திற்கு லக்னத்தில் நின்றுள்ள புதன் தொடர்புடைய தசாபுத்திகள் நல்ல பலனைத் தரும்.
லக்னத்தில் புதன் இருக்கும்போது ஜாதகர் இயல்பாகவே நல்ல புத்திசாலித்தனம் மிக்கவராக இருப்பார். வரக்கூடிய வாழ்க்கைத் துணையும் ஜாதகர் மீது பிரியம் உடையவராக இருப்பார். சுபர் வீட்டில் புதன் திக்பலம் பெற்ற நிலையில் இருப்பதால் ஜாதகர் என்றுமே இளமையான தோற்றத்தில் இருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.
வரக்கூடிய வாழ்க்கைத் துணையும் ஜாதகரை விட புத்திசாலித்தனம் மிக்கவராக இருப்பார்.

வீடு கொடுத்த குரு வலுவாக இருத்தல், சந்திரனுக்கு கேந்திரத்தில்  புதன் இருப்பது போன்ற நிலைகள் மேற்கொண்டு புதனுக்கு வலுவை அளிக்கும் என்பதால் நல்ல பலன்களை ஜாதகர் பெறுவார்.
சனி ராகு போன்ற பாவிகளின்  தொடர்பு பெரும்பொழுது புதனுடைய காரகத்துவ ஆதிபத்ய விஷயங்களில் சற்று குறைபாடுகள் இருக்கும்.

இரண்டாம் இடமான மேஷத்தில் புதன் இருப்பதை பொருத்தவரை அது அவருக்கு பகை வீடு.வரக்கூடிய வாழ்க்கைத் துணை சற்று பிடிவாதம் நிறைந்தவராக இருப்பார். சுபர்களுடைய தொடர்பை இரண்டில் இருக்கக்கூடிய புதன் பெரும் பொழுதும், வீடு கொடுத்த செவ்வாய் வலுப்பெற்று நிலையில் இருக்கும் போதும் நல்ல பலன்களே நடக்கும். புதன் ஏழாம் அதிபதியாகி இரண்டில் இருக்கும் காரணத்தினால் திருமணத்திற்கு பின்பு ஜாதகர் பொருளாதாரரீதியாக முன்னேற்றத்தை பெறுவார்.

மூன்றாம் இடமான ரிஷபத்தில் புதன் இருப்பது மிக அருமையான பலன்களை தரும். ஏனெனில் புதனுக்கு இவ்விடம் நட்பு வீடாகும். ஜாதகர் எழுத்து, இசை, ஓவியம், தகவல் தொடர்பு, கணிதம் போன்ற விஷயங்களில் திறமை உள்ளவராக இருப்பார்.வீடு கொடுத்த சுக்கிரன் உச்சம் பெற்ற நிலையில் இருக்கும் பொழுது சிறப்பான பலன்களை ஜாதகர் மனைவி வழியில் பெறக் கூடியவராக இருப்பார்.

நான்காம் இடமான மிதுனத்தில் அவர் ஆட்சி பெற்று நிலையில் இருப்பார். தனித்த நிலையில் ஆட்சி பெற்று இருந்தாலும் சுபர் தொடர்பு பெரும் பொழுது மட்டுமே தன்னுடைய தசா புத்திகளில் கேந்திராதிபத்திய தோஷத்தை செய்வார். மேலும் இது அரிதிலும் அரிதான ஒன்றாகவே இருக்கும். சந்திரனுடைய நிலைமையை பொறுத்து பலன்கள் மாறுபடலாம்.  இங்கே சுக்கிரனுடன் பரிவர்த்தனை பெறுவது சிறப்பான அமைப்பைத் தரும். வீடு, வாகனம், நிலம், சம்பந்தப்பட்ட விஷயங்களில் மேன்மையான பலனைத் தருவார்.நான்கில் இருக்கக்கூடிய புதன், சனி மற்றும் செவ்வாய் பார்வை அல்லது இணைவினை பெறும் பொழுது கேந்திராதிபத்திய தோஷத்தை செய்யமாட்டார்.
நான்காம் வீட்டில் புதன் இருக்கும் போது தன்னுடைய ஏழாம் பார்வையால் பத்தாம் வீட்டைப் பார்ப்பதால் புதனுடைய காரகத்துவம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ( தகவல் தொடர்பு, பத்திரம், கணிதம், வியாபாரம்) ஜாதகருக்கு தொழில் அமைவதற்கான வாய்ப்புகள் உண்டு.ஜாதகர் தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகுந்த புத்திசாலியாக இருப்பார்.

ஐந்தாம் இடமான கடகத்தில் புதன் இருப்பதை பொறுத்தவரை அங்கு அவர் பகை பெற்ற நிலையில் இருப்பார்.பரிவர்த்தனை பெறுவது, மேற்கொண்டு குரு சுக்கிரன் போன்ற சுபகிரகங்கள் பார்வை பெறுவது சிறப்பான பலனைத் தரும்.
வீடு கொடுத்த சந்திரன் வலுப்பெற்ற நிலையில் இருக்கும் பட்சத்தில் மனைவி வகையிலும், தாயார் வகையிலும் மேன்மையான பலன்களை தருவார்.

ஆறாம் இடமான சிம்மத்தில் புதன் இருக்கும்பொழுது ஏழாம் அதிபதி ஆறாம் வீட்டில் மறைகின்றார் என்ற அடிப்படையில் திருமணம் தாமதம் ஆவதற்கான வாய்ப்பு உண்டு. இருப்பினும் தன்னுடைய பாதக, கேந்திர, மாராக வீட்டிற்கு மறைவு ஸ்தானத்தில் இருப்பதாலும் சிம்மம் புதனுக்கு நட்பு வீடு என்பதாலும் மனைவி வகையில் நல்ல பலன்களையே தருவார்.
ஆறில் இருக்கக்கூடிய புதன் மேற்கொண்டு சுபர்களின் தொடர்பு பெறுவது சிறப்பான அமைப்பாகும். கடன், எதிரகள் தொல்லை இருக்க வாய்ப்புண்டு.

ஏழாம் இடமான கன்னியில் இருப்பதை பொருத்தவரை அங்கே அவர் உச்சம் பெற்ற நிலையில் இருப்பார்.மேற்கொண்டு சுபர்களின் தொடர்பினை  பெற்று, புதன் தசாவும் நடைமுறையில் வரக்கூடிய பட்சத்தில் அரிதினும் அரிதான நிலைகளில் மட்டுமே கேந்திராதிபத்திய தோஷத்தை செய்வார்.
வாழ்க்கை துணை சம்பந்தப்பட்ட விஷயங்களில் புதன் தசா புத்திகளில் பாதிப்பினை தருவார்.
பாப கிரகங்களின்  பார்வையை பெற்று இருக்கும் பொழுதும் அல்லது  பாபர்களுடன்  இங்கே இணைந்து இருக்கக்கூடிய பட்சத்திலும், வக்கிரம் பெற்ற நிலையில் புதன் இருக்கும் போதும் கேந்திராதிபத்திய தோஷத்தை செய்யமாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சார அடிப்படையில் சந்திரன் மற்றும் செவ்வாய் சாரம் பெற்றிருப்பது சிறப்பு. நீச சுக்ரனுடைய இணைவினை  பெற்றிருப்பதும் பெரிய பாதிப்பினை தராது.
பாபர்களின்  தொடர்பின்றி லக்னாதிபதி குருவினுடைய பார்வை அல்லது இணைவினை பெறும்போது புதன் தசா புக்திகளில் வாழ்க்கைத் துணை சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லதாகும்.
புதன் ஏழில் உச்சம் பெற்ற நிலையில் இருந்து லக்னத்தைப் பார்ப்பதால் ஜாதகரும் சரி, ஜாதகருக்கு வரக்கூடிய வாழ்க்கைத் துணையும் சரி, மிகுந்த புத்திசாலித்தனம் உள்ளவர்களாகவே இருப்பார்கள்.

எட்டாம் இடமான துலாத்தில் இருப்பதை பொருத்தவரை ஏழாம் அதிபதி எட்டாம் வீட்டில் மறைகின்றார் என்ற அடிப்படையில் திருமணம் தாமதமாவதற்கு வாய்ப்புகள் உண்டு. இருப்பினும் இங்கே அவர் நட்பு பெற்ற நிலையில் இருப்பதால், பாபர்களின் தொடர்பை பெறாத நிலையில் நல்ல வாழ்க்கைத்துணையை  ஜாதகருக்கு தருவார். இங்கே பரிவர்த்தனை(7 மற்றும் 8 ) பெற்ற நிலையில் இருப்பதும் சிறப்பான அமைப்பு.

ஒன்பதாம் இடமான விருச்சிகத்தில் இருப்பதை பொருத்தவரையில் புதன் இங்கே பகை வீட்டில் இருப்பார். 
தனித்த நிலையில் ஒன்பதாமிடத்தில் இருக்கும்பொழுது பெரிய பாதிப்பை தரமாட்டார். ஆனால் இங்கே ஆறாம் அதிபதியான  சூரியனுடன் சேரும்போது பாப கிரகமான ஆறாம் வீட்டு அதிபதி உடன் இணைகின்றார் என்ற அடிப்படையில் வாழ்க்கைத்துணை சம்பந்தப்பட்ட விஷயங்களில் சிறுசிறு பாதிப்புகளைத் தருவார்.ஒன்பதில் இருக்கக்கூடிய புதன் சுபர்களின் தொடர்பை பெறுவது நல்லது.

பத்தாமிடமான தனுசில் புதன் இருப்பது சிறப்பான அமைப்பு. தன்னுடைய இரு வீட்டிற்கும் கேந்திர ஸ்தானத்தில் இருப்பதும், சுபரின் வீட்டில் இருப்பதாலும் ஜாதகருக்கு தொழில் ரீதியாக நல்ல பலன்களைத் தருவார்.
புதனுடைய காரகத்துவம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஜாதகருக்கு தொழில் அமைய வாய்ப்புண்டு. ஜாதகர் தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகுந்த புத்திசாலித்தனம் உடையவராக செயல்படுவார்.
பதினொன்றாம் இடமான மகரத்தில் புதன் இருப்பது சிறப்பான அமைப்பு. தன்னுடைய நான்காம் வீட்டிற்கு எட்டில் மறைந்தாலும், ஏழாம் வீட்டிற்கு திரிகோணத்தில் இருப்பது நல்ல அமைப்பே.
மேலும் புதனுக்கு மகரம் நட்பு வீடாக, சர ராசியாக இருப்பது சிறப்பு. அவயோக கிரகங்கள் பொதுவாக 3, 6, 10, 11 ஆம் இடங்களில் நட்பு நிலையில் இருப்பது சிறப்பான பலன்களைத் தரும். அந்த வகையில் வாழ்க்கைத்துணை அமைந்த பிறகு ஜாதகர் பொருளாதார ரீதியாக உயர்வைத் தருவார். சுபகிரகங்களான குரு,சுக்கிரன் போன்றவர்களின்  தொடர்பை இங்கே பெற்றிருப்பதும் மிகுந்த மேன்மையான பலன்களை தரும்.
புதன் இங்கே நான்காம் வீட்டிற்கு எட்டில் மறைந்தாலும் சந்திரனுடைய நிலையை கவனத்தில் கொண்டே  ஜாதகருடைய  தாயாருடைய நிலையை கவனிக்க வேண்டும்.

12ஆம் இடமான கும்பத்தில் புதன் இருப்பதை பொருத்தவரை ஏழாம் அதிபதி 12ல் மறைவார். மேலும் தன்னுடைய ஏழாம் வீட்டிற்கு ஆறில் மறைவார் என்ற அடிப்படையில் திருமணம் தாமதமாக நடப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. எனினும் கும்பம் புதனுக்கு நட்பு வீடாக  இருப்பதால் பெரிய அளவில் பாதிப்புகள் இருக்காது.

அடுத்த பதிவில் மீன லக்னத்திற்கு சுக்கிர தசா எப்படிப்பட்ட நிலையில் இருக்கும் பொழுது எது மாதிரியான தரும் என்பதை பார்ப்போம்.
நன்றி
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA B.Ed.
Cell 9659653138

ஜோதிடம் மற்றும் ஆன்மிகம் குறித்த தகவல்களைப் பெற இணைந்திருங்கள்...

https://t.me/Astrologytamiltricks

https://chat.whatsapp.com/I9sRO6ovX733Dp1DFNxT74

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக