ஞாயிறு, 19 மார்ச், 2023

மீன இலக்னத்திற்கு சனி தசா எப்படியிருக்கும்?


இலக்ன ரீதியாக ஒன்பது கிரகங்களின் தசா புத்தி காலங்கள் எந்ததெந்த  இடங்களில் இருக்கும் பொழுது எது மாதிரியான பலன்களை தரும் என்பதை பார்த்து வருகின்றோம்.
ஏற்கனவே மீன லக்னத்திற்கு  சூரியன்,  சந்திரன், செவ்வாய், குருவின் தசாக்காலங்கள் எந்தெந்த இடங்களில் இருக்கும் பொழுது எது மாதிரியான பலன்களைக் கொடுக்கும் என்பதை பார்த்து இருக்கின்றோம். அந்த வகையில் இன்று மீன லக்னத்திற்கு லக்னத்திற்கு சனி தசா எப்படிப்பட்ட பலன்களை கொடுக்கும் என்பதை பார்ப்போம்.

மீன லக்னத்திற்கு சனி 11 மற்றும் 12  என்ற லாபம் மற்றும் விரைய ஸ்தானத்திற்கு அதிபதியாக வருகிறார்.அவர் லக்னத்தில் இருப்பதை பொருத்தவரை
விரையஸ்தானதிபதியான சனி லக்னத்தில் இருக்கும் பொழுது ஜாதகரை மிகுந்த சோம்பேறியாக்கி, மந்த சுபாவத்தை தருவார்.எந்த ஒரு விஷயத்தையும் உடனடியாக செய்து முடிக்காமல் நாளைக்கு பார்த்துக் கொள்ளலாம் என்ற அலட்சிய சுபாவத்தை ஜாதகருக்கு தந்து ஜாதருடைய முன்னேற்றத்தை தடை செய்வார்.
மீனம் இயற்கைச் சுபரான குருவின் வீடாக இருப்பதால் இங்கே அமரக்கூடிய சனி ஜாதகருக்கு தன்னுடைய தசா காலங்களில் ஆன்மீக எண்ணங்கள், கோவில் வழிபாடு போன்ற விஷயங்களில் கவனத்தைச் செலுத்த செய்வார்.
மீன லக்கினத்திற்கு லக்னத்தில் சனி அமரும் போது அவர் மூன்று, ஏழு, பத்தாம் இடங்களைப் பார்ப்பதால் சகோதரர் வகையில் கருத்து வேறுபாடுகள், வாழ்க்கைத் துணை வகையில் மன வருத்தங்கள், தொழில் ரீதியான முன்னேற்றத் தடைகளையும் உண்டாக்குவார்.
குருவின் பார்வையில் இருக்கும் பொழுது அல்லது  மீன லக்னத்திற்கு  லக்னத்தில் நின்ற சனி தசா நன்மைகளைச் செய்யும்.

மீன லக்னத்திற்கு இரண்டாம் வீடான மேஷத்தில் சனி இருப்பதைப் பொருத்தவரை அங்கே அவர் நீசம் பெற்ற நிலையில் இருப்பார். லாபாதிபதி தனஸ்தானத்தில் நீசம் பெறுவதால் பணம் சார்ந்த விஷயங்களில் ஜாதகருக்கு பிரச்சனைகளை உண்டாக்குவார்.
இங்கே நீசம்பங்கம் பெறுவதும் நல்லதல்ல, ராகு, செவ்வாய் அமாவாசை சந்திரன், சூரியன் தொடர்பை பெற்று தசாபுத்தி நடத்தும் போது குடும்பத்தை பெரிய அளவில் தன்னுடைய தசாக்காலங்களில் பாதிக்க செய்வதுடன் பார்வை படக்கூடிய இடங்களான நான்காம் பாவகம் வீடு, மனை, தாய், உடல் நலம், ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களிலும், எட்டாம் பாவக விஷயங்களான  வெளிநாட்டு வாழ்க்கை, ஆயுள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் தடைகளை ஏற்படுத்துவதுடன் 11 ஆம் பாவகத்தை பார்ப்பதால் லாபம் வருவதில், மூத்த சகோதர வகைகளில் பிரச்சனைகளை உண்டாக்குவார். இங்கு இருக்கக்கூடிய சனி குருவின் தொடர்பை பெறும் பொழுது சட்டத்துறையில் ஜாதகருக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுப்பார். செவ்வாய் உடைய தொடர்பை பெறும் போது இரும்பு, இயந்திரம் சார்ந்த துறைகளிலும் சூரியனுடைய தொடர்பை பெறும் பொழுது எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்கல், மின்சாரம் சார்ந்த துறைகளிலும் வேலை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுப்பார்.

மூன்றாம் பாவகமான ரிஷபத்தில் சனி இருப்பதை பொருத்தவரை அங்கிருந்து தன்னுடைய ஏழாம் பார்வையால் ஒன்பதாம் வீட்டை பார்ப்பதால் தந்தை வழியில் கிடைக்கக்கூடிய ஆதரவு, தந்தையின் உடல்நலம் போன்ற போன்ற விஷயங்களில் எதிர்மாறான சாதகம் அற்ற பலன்களை செய்து பின்பு நல்ல பலன்களைச் செய்வார்.
தன்னுடைய மூன்றாம் பார்வையால் ஐந்தாம் வீட்டை பார்ப்பதால் குழந்தைகளின் உடல்நலம், ஆரோக்கியம் உறவு முறை போன்றவற்றில் சாதகமற்ற மற்றும் பலன்களையும் தரக்கூடும்.
தன்னுடைய பத்தாம் பார்வையால் 12ஆம் வீட்டை பார்ப்பதால் அந்நிய இடங்களுக்குச் சென்று தொழில் புரிய இயலாத நிலையை ஜாதகருக்கு தருவார்.
எனினும் ரிஷபம் இயற்கை சுபரின் வீடு என்பதாலும், சனிக்கு பிடித்த வீடு என்பதாலும் ஒரு உபஜெய ஸ்தான அதிபதி மற்றொரு உபஜெய ஸ்தானத்தில் இருக்கிறார் என்ற அடிப்படையில் பொருளாதார வகையில் ஒரளவு நல்ல பலன்களையும் தருவார். பெரிய அளவில் இங்கு இருக்கக்கூடிய சனி தன்னுடைய தசா காலங்களில் கெடு பலன்களை தர மாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக மீன லக்னத்திற்கு நான்காம் இடமான மிதுனத்தில் சனி இருப்பதை பொருத்தவரை புதன் வலு குறைந்த நிலையில் இருக்கும் போது தாயார் விசயங்களில் உடல்நலக் கேடுகளையும் ஆரோக்கியக் குறைவினையும் தருவார்.
படிக்கக் கூடிய பருவத்தில் நான்கில் நின்ற சனி தசா காலங்கள் வரும்பொழுது நான்காம் பாவகம் கல்விக்குரிய பாவகம் என்பதால் கல்வி மற்றும் மேற்படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் தடைகளை ஏற்படுத்துவார்.சுகஸ்தானத்தில் சனி இருக்கும் போது சிறிய அளவில் உடல் நல பாதிப்புகளையும் ஏற்படுத்தவே செய்வார்.எனினும் மிதுனம் சனிக்கு நட்பு வீடு என்பதால் இங்கே அமரக்கூடிய சனி பெரிய பாதிப்புகளைச் செய்ய மாட்டார். நான்காம் வீட்டில் சனி இருக்கும் போது பழைய வீடு, வண்டி, வாகனம் இவற்றை அமைத்துக் கொள்வதில் ஜாதகர் விருப்பம் உடையவராக இருப்பார். பணம் இருந்தாலும் ஜாதகருக்கு பழைய வீடு, வண்டி, வாகனம் இவற்றில் தான் விருப்பம் இருக்கக்கூடும்.

இங்கு இருக்கக்கூடிய சனி பத்தாம் வீட்டை பார்ப்பதால் லாபாதிபதி நட்பு வீட்டில் இருந்து  பார்க்கின்றார் என்ற அடிப்படையில் தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஜாதகரை கடுமையான உழைப்பாளியாக மாற்றி நல்ல பலன்களை தருவார்.இங்குள்ள சனி புதனுடன் பரிவர்த்தனை (4,11)பெறுவது நல்லது. சனி மற்றும் புதன்  இரண்டுமே நல்ல பலன்களை தரும்.குருவின் தொடர்பினையும் பெறும் பொழுது சனி தசா பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றத்தை தரும்.

ஐந்தாம் இடமான கடகத்தில் சனி இருப்பதை பொறுத்த வரை இது அவருக்கு பகைவீடு என்பதால் தன்னுடைய தசா காலங்களில் நல்ல பலன்களை தர மாட்டார்.கடகம் சந்திரனின் ஆட்சி வீடு என்பதால் அங்கு அமரக்கூடிய சனி தாயார் வகையில், உடல் நல குறைபாடுகளையும் அல்லது அவரிடையே  கருத்து வேறுபாடுகளையும் உண்டாக்குவார். சந்திரனின் வீட்டில் அமர்ந்த சனி ஜாதகருக்கு மனம் சார்ந்த பிரச்சினைகளையும் தரக்கூடும்.
பகை வீட்டில் அமர்ந்து சனி பார்க்கக்கூடிய பாவகங்களும் பிரச்சனை தரும் என்பதால் தன்னுடைய மூன்றாம் பார்வையால் ஏழாம் வீட்டை பார்ப்பதால் நண்பர்கள், வாழ்க்கை துணை, கூட்டுத் தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களிலும் பதினொன்றாம் இடமான லாப ஸ்தானத்தை பார்ப்பதால் மூத்த சகோதரர் வகையிலும், பணம் வருவதிலும், தனஸ்தானமும் குடும்பஸ்தானமும் ஆன இரண்டாம் வீட்டைப் பார்ப்பதால் பணம் வருவதிலும் குடும்ப விஷயங்களிலும் எதிர்மறையான பலன்களைத் தருவார்.

ஆறாம் பாவகமான சிம்மமும் அவருக்கு பகைவீடு என்பதால் இங்கே அமரக்கூடிய சனி சுபர் தொடர்பை பெறாத வகையில் நல்ல பலன்களை தர மாட்டார்.
தன்னம்பிக்கை, தைரியம், ஆளுமைத் திறன், தந்தை வழி ஆதரவு போன்றவற்றை சுட்டிக்காட்டக்கூடிய சூரியனின் ஆட்சி வீடான சிம்மத்தில் சனி இருக்கும் போது ஜாதகருக்கு தன்னம்பிக்கை குறைபாட்டையும், தந்தை வகையில் உறவு சார்ந்த சிக்கல்களையும் ஏற்படுத்துவார்.இங்கே இருக்கக்கூடிய சனி வேலை பார்க்கக் கூடிய இடத்தில் மேலதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் தொல்லை மற்றும் சண்டை சச்சரவுகளையும் ஏற்படுத்துவார்.
11க்கு உடையவர் ஆறில் மறைகின்றார் என்ற அடிப்படையில் மூத்த சகோதர வழியில் ஆதரவற்ற நிலையையும் உண்டாக்குவார்.
பகை வீட்டில் இன்று சனி பார்க்கக்கூடிய பாவகங்கள் பாதிப்படையும் என்பதன் அடிப்படையில் அவர் பார்க்கக்கூடிய எட்டாம் பாவகத்தின் வாயிலாக ஆயுள், வெளிநாடு சார்ந்த விஷயங்களிலும் , 12 ஆம் பாவகத்தின் வாயிலாக தூக்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களிலும் எதிர்மறையான பலன்களையே தருவார். மூன்றாம் பாவகத்தின் வாயிலாக இளைய சகோதர வகையில் கருத்து வேறுபாடுகளையும் தருவார்.சுபரின் தொடர்பில் இருக்கும் பொழுது சனி தரக்கூடிய பாதிப்புகள் குறைவாக இருக்கும். இங்ககு இருக்கக்கூடிய சனி ராகுடன் இணைவதோ அல்லது அமாவாசை சந்திரனுடைய தொடர்பை பெறுவதோ நல்லதல்ல.

கன்னியில் சனி இருப்பதை பொருத்தவரை அங்கே அவர் திக்பலம் அடைவதோடு, அது அவருக்கு நட்பு வீடு என்பதால் வாழ்க்கை துணை சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல பலன்களை தருவார்.தன்னை விட வயது, அறிவு, தோற்றம் போன்றவற்றில் மாறுபட்டபட்ட வகையில் வாழ்க்கை துணை அமையக்கூடும்.இங்கே சனி அமரும் போது தாமதமான திருமண வாழ்க்கையை தந்தாலும் திருமண வாழ்க்கையில் பெரிய அளவில் பாதிப்புகளை தருவதில்லை.
சனி இங்கே திக்பலம் அடைவதால் லக்னாதிபதி பலவீனமாக இருக்கக்கூடிய பட்சத்தில் வாழ்க்கைத் துணையின் ஆதிக்கம் ஜாதகரிடத்தில் மேலோங்கி இருக்கும்.

எட்டாமிடமான துலாத்தில் சனி இருக்கும் பொழுது அங்கே அவர் உச்சம் பெற்ற நிலையில் இருப்பார். உச்சம் பெற்ற நிலையில் இருக்கக்கூடிய சனி இரண்டாம் பாவகத்தை பார்ப்பதால் குடும்ப விஷயங்களிலும் பண விஷயங்களிலும் திருப்தியற்ற பலன்களையே  ஜாதகருக்கு தருவார்.
ஜாதகருடைய முறையற்ற பேச்சால் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு குடும்பத்தை விட்டு பிரியக்கூடிய நிலையையும் உண்டாக்குவார்.
சுபகிரங்களின் தொடர்பில் இருக்கும் பொழுது சனி தரக்கூடிய பாதிப்புகள் குறைவாக இருக்கும்.சனி எட்டாம் பாவகத்திலிருந்து உச்சம் பெறக்கூடிய காரணத்தினால் ஜாதகருக்கு நீடித்த ஆயுள் இருக்கும். செவ்வாய், ராகு, அமாவாசை சந்திரன் தொடர்பை பெறுவது நல்லதல்ல.

ஒன்பதாம் பாவகமான விருச்சகத்தில் சனி இருப்பதை பொருத்தவரை சனிக்கு அது பகைவீடு என்பதால் இங்கு இருக்கக்கூடிய சனி நல்ல பலன்களை தர மாட்டார்.பாப கிரகங்கள் திரிகோணத்தில் இருக்கும் பொழுது அந்த பாவகத்தை கெடுக்கும் என்பதன் அடிப்படையில் ஒன்பதாம் இடத்தில் இருக்கும் போது தந்தை வழியில் ஏற்படக்கூடிய ஆதரவுகளை கெடுத்து தந்தை வழி உறவு சிக்கல்களையும் ஏற்படுத்துவார்.
அவர் பார்வை படக்கூடிய பாவகங்கள் வாயிலாகவும் ஜாதகருக்கு பிரச்சனைகளை தரவே செய்வார். இங்கே அமரக்கூடிய சனி தன்னுடைய மூன்றாம் பார்வையால் பதினொன்றாம் வீட்டையும், ஏழாம் பார்வையால் மூன்றாம் வீட்டையும் பார்ப்பதால் இளைய மற்றும் மூத்த சகோதர வகையில் ஆதரவற்ற நிலையையே உண்டாக்குவார்.பத்தாம் பார்வையால் சிம்மத்தை பார்ப்பதால் அரசு வேலை கிடைப்பதிலும் தடைகளை ஏற்படுத்துவார். இங்குள்ள சனி குருவின் நட்சத்திரமான விசாகத்தில் இருக்கும் பொழுது ஓரளவு நல்ல பலன்களைச் செய்வார்.பொதுவாக பகைவீடுகளில் சனி இருக்கும் பொழுது வலுப்பெற்ற சுபகிரகங்களின் தொடர்பில் இருப்பது நல்லது. அவ்வாறு இருக்க கூடிய பட்சத்தில் பாதிப்புகள் குறைவாகவே இருக்கும்.

பத்தாம் இடமான தனுசுவில் சனி இருப்பதை பொருத்தவரை அது இயற்கை சுபரின் வீடு என்பதாலும், பாப கிரகம் கேந்திரத்தில் இருக்கும் போது நன்மையைச் செய்யும் என்பதன் அடிப்படையிலும் லாபாதிபதி ஜீவனஸ்தானத்தில் இருக்கிறார் என்பதன் அடிப்படையிலும் நல்ல பலன்களைச் செய்வார்.கூடுதலாக சுபகிரங்களின் தொடர்பில் இருப்பது மேற்கொண்டு நல்ல பலன்களை தரும்.

11ஆம் வீட்டில் சனி இருக்கும் பொழுது லாப ஸ்தான அதிபதி லாபஸ்தானத்தில் ஆட்சி பெற்ற நிலையில் இருக்கின்றார் என்பதன் அடிப்படையில் மேற்கொண்டு சுபகிரகங்களின் தொடர்பை பெரும் பட்சத்தில் மிக நல்ல பலன்களை தருவார்.சுபத் தொடர்பில்லாத நிலையில் அவர் பார்க்கக்கூடிய பாவகங்கள் வாயிலாக ஜாதகருக்கு பிரச்சனைகள் இருக்கவே செய்யும்.
செவ்வாய், ராகு இணைவையோ, அமாவாசை சந்திரன் தொடர்பையோ பெறாமல் இருப்பது நல்லது.

பன்னிரண்டாம் இடமான கும்பத்தில் சனி இருப்பதை பொருத்தவரை சுபர் தொடர்பை பெறாத வரை நன்மைகளைச் செய்ய மாட்டார்.12 ல் இருக்கக்கூடிய சனி வெளிநாடு சென்று தொழில் மற்றும் வேலை செய்வதில் ஜாதகருக்கு தடைகளை உண்டாக்குவார்.
தன்னுடைய மூன்றாம் பார்வையால் வாக்கு ஸ்தானமான இரண்டாம் வீட்டைப் பார்ப்பதால் ஜாதகரை பொய் பேசுவோராக மாற்றுவார். தன்னுடைய ஏழாம் பார்வையால் சிம்மத்தை பார்வையால் ஜாதகருடைய தன்னம்பிக்கை, தைரியம், தகப்பன் வழியில் ஏற்படக்கூடிய ஆதரவுகளை கெடுக்கவே செய்வார்.சுபர் தொடர்பின்றி     ஏழாம் பார்வையால் சிம்மத்தையும், பத்தாம் பார்வையால் ஒன்பதாம் வீட்டையும் பார்க்கும் பொழுது தந்தை வழி ஆதரவு, சொத்து பத்துக்களை கேள்விக்குறியாக்குவார்.

சனி தசா அதிக பாதிப்புகளை தரக்கூடிய பட்சத்தில் இருக்கும் பொழுது சனிக்கிழமை தோறும் காலபைரவர் வழிபாட்டையும், அனுதினமும் அனுமன் வழிபாட்டையும் வழக்கப்படுத்திக் கொள்வது பாதிப்புகளை வெகுவாக குறைக்கும். வாழ்வியல் பரிகாரங்களைப் பொறுத்தவரை கடுமையாக உடல் உழைப்பை மட்டுமே நம்பி பிழைக்கக் கூடியவர்களுக்கு நம்மால் முடிந்த பொருளாதார ரீதியான உதவிகளைச் செய்து வருவதும் நல்லதாகும்.
அடுத்த பதிவில் மீன லக்னத்திற்கு புதன் தசா எது மாதிரியான பலன்களை தரும் என்பதை பற்றி பார்ப்போம்.
நன்றி..
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA B.Ed, 
MA Astrology.
Cell 9659653138

ஜோதிடம் மற்றும் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட தகவல்களை பெறுவதற்கு இணைந்திருங்கள்..

https://t.me/Astrologytamiltricks

https://chat.whatsapp.com/C2NvgMxacNlFBpcyQq3Gmg

https://www.facebook.com/groups/3741

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக