திங்கள், 15 ஏப்ரல், 2024

மேஷ லக்னத்திற்கு சந்திர தசா எப்படி இருக்கும்?


மேஷ லக்னத்திற்கு சந்திரன், நிலம், பூமி, வீடு, மனை, வாகனம், கல்வி, தாய், உறவினர்கள் வழியில் கிடைக்கும் ஆதரவு இவற்றை சுட்டிக்காட்டக்கூடிய நான்காம் அதிபதி ஆவார்.மேஷத்தின் அதிபதியான செவ்வாய்க்கு சந்திரன் நண்பர் என்பதால் சந்திர தசா பெரும்பாலும் மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு நல்ல பலன்களையே  தரும். சுபத் தொடர்பற்ற சனியுடன் இணைந்திருக்கும் பொழுதும் அல்லது சனியின் பார்வையில் இருக்கும் பொழுதும், ராகுவுடன் இணைந்து கிரகணமாக இருக்கும் போதும் சந்திர தசா தனது காரக ஆதிபத்திய ரீதியாக கெடுபலன்களை தரும்.சுபர் தொடர்பு இருக்கும் பொழுது பாதிப்புகள் குறைவாக இருக்கும்.

இலக்ன பாவகமான மேஷத்தில் சந்திரன் இருப்பதைப் பொருத்தவரை நல்ல ஒளித்திரனுள்ள சந்திரனாக இருக்கும் பொழுது தனது தசா காலங்களில் நான்காம் இட ஆதிபத்திய விசயங்களான நிலம், பூமி, வீடு, மனை, வாகனம், கல்வி சார்ந்த விஷயங்களில் மேலான பலன்களைத் தருவார். மேஷம் 
பூமிக்காரன் எனப்படும் செவ்வாயின் வீடு என்பதால் நிலம் சார்ந்த விஷயங்களில் நல்ல லாபத்தை ஜாதகருக்கு தன்னுடைய தசாக்காலங்களில் தருவார். தேய்பிறை சந்திரனாக இருக்கும் போது சுபர் தொடர்பில் இருப்பது நல்லது. #Iniyavan 

இரண்டாம் இடமான ரிஷபத்தில் இருப்பதை பொறுத்தவரை சந்திரன்  உச்ச பலம் பெறுவதால் சந்திர தசா மிக மேன்மையான பலன்களை தரக்கூடியதாக இருக்கும். மனோக்காரகன் சந்திரன் தனஸ்தானத்தில் உச்சம் பெறுவதால் தனது எண்ணங்களை செயல்களாக்கி அதன் மூலம் எளிதான வகையில் பணம் சம்பாதிப்பவராக ஜாதகர் இருப்பார். நிலம், பூமி, வீடு, மனை, வாகனம் சார்ந்த வாடகை வருமானங்களை பெறுபவராக ஜாதகர் இருப்பார். நல்ல பேச்சாற்றலை கொண்டவராக, பேச்சின் மூலம் லாபம் ஈட்டுபவராக  ஜாதகர் இருப்பார்.தாய் மீது அதிக பாசம் கொண்டவராக, தாய் மற்றும் தாய் வழி சொந்த பந்தங்களால் நல்ல ஆதரவை பெற்றவராக ஜாதகர் இருப்பார். சந்திர தசாவில் தனது சொந்த முயற்சியால் சொத்து சேர்ப்பார்.

மூன்றாம் இடமான மிதுனத்தில் சந்திரன் இருப்பதைப் பொருத்தவரை அது அவருக்கு பகைவீடு என்பதால் ஒளித்திறனுடைய சந்திரனாக இருப்பது நல்லது.ஒளித்திறனுடைய சந்திரனாக இருக்கும்பொழுது மூன்றாம் இடம் குறிக்கக்கூடிய தகவல் தொடர்பு, எழுத்து, இசை, தைரியம், வீரியம், இளைய சகோதரர் ஆதரவு போன்றவற்றில் நல்ல பலன்களைத் தருவார். நான்காம் அதிபதி சந்திரன் மறைவு ஸ்தானமான மூன்றாம் வீட்டில் இருந்து, தன்னுடைய  நான்காம் வீட்டிற்கும் 12ல் மறையும் போது சொந்த வீடு, வாகனம் போன்றவற்றை சுட்டிக்காட்டக்கூடிய சுக்கிரன் கெடாத நிலையில் இருப்பது நல்லது . சுக்கிரனும் கெட்டிருக்கக்கூடிய பட்சத்தில் சொந்த வீடு, வாகனம் அமைவதில் பிரச்சனைகள் இருக்கும். #Iniyavan
அன்னைக்கு காரகம் வகிக்கக்கூடிய சந்திரன் மறைவு ஸ்தானங்களில் இருக்கும் பொழுது அவருடைய ஆட்சி வீடான கடகம் பாபர்களின் தொடர்பின்றி இருப்பது நல்லது. இல்லையெனில் தாய் வழி ஆதரவு ஜாதகருக்கு குறைவாக இருக்கும்.வீடு கொடுத்த புதன் வலுப்பெறுவது நல்லது.

நான்காம் இடமான கடகத்தில் அவர் ஆட்சி பெற்ற நிலையில் இருப்பதுடன் திக் பலமும் பெறுவதால் சந்திர தசா தன்னுடைய நான்காம் இடம் குறிக்கக்கூடிய ஆதிபத்திய விஷயங்களான நிலம், பூமி, வீடு, மனை வாகனம், கல்வி, தாயார் சார்ந்த விஷயங்களிலும்
பத்தாம் வீட்டை பார்ப்பதால் தொழில் சார்ந்த விஷயங்களிலும் நல்ல பலன்களைச் செய்வார். சனி, ராகு தொடர்பின்றி இருப்பது அவசியம்.

மேஷ லக்னத்திற்கு பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாம் இடமான சிம்மத்தில் சந்திரன் ஒளித்திறனுடன் இருக்கும்போது தனது குழந்தைகள், சிறப்பான பூர்வீகம், தந்தை மற்றும் அரசு சார்ந்த வகையில் ஜாதகருக்கு மிக மேலான பலன்களை தன்னுடைய தசா காலங்களில் தருவார்.
ஆழ்மனதினைக் குறிக்கும் ஸ்தானமான ஐந்தாம் வீட்டில் மனோக்காரகன் சந்திரன் நல்ல நிலையில் இருக்கும்பொழுது ஜாதகர் நல்ல கற்பனை வளம் , படைப்பாற்றல் திறன் (ம) மனோபலம் கொண்டவராக இருப்பார். #Iniyavan

ஆறாம் இடமான கன்னியில் இருப்பதைப் பொருத்தவரை சந்திரனுக்கு அது பகைவீடு என்பதாலும் தனது வீட்டிற்கும் மூன்றில் மறைந்து, இலக்னத்திற்கும் ஆறில் மறைவதால் சந்திர தசா ஜாதகருக்கு வேலை சார்ந்த விஷயங்களில் எதிர்ப்புகளைத் தரும்.கடன், நோய் போன்ற விஷயங்களை சுட்டிக்காட்ட கூடிய ஆறாம் வீட்டில் சந்திரன் இருப்பதால் உடல்நல பிரச்சனைகள் மற்றும் கடன் சார்ந்த இன்னல்களையும் தனது தசாவில் தருவார்.இப்படிப்பட்ட நிலைகளில் லக்னாதிபதி வலுத்திருப்பது நல்லது.

ஒளித்திறன் உடைய சந்திரனாக இருக்கும் பொழுது வேலை சார்ந்த விஷயங்களில் நல்ல பலன்களை தருவார். ஆறில் இருக்கக்கூடிய சந்திரன் பன்னிரண்டாம் வீட்டைப் பார்ப்பதால் ஜாதகரை பூர்வீகத்தில் இருந்து வேறு இடங்களுக்கு செல்ல வைத்து வேலை செய்ய வைப்பார்.

ஏழாம் இடமான துலாத்தில் சந்திரன் இருப்பதை பொருத்தவரை தனது வீட்டிற்கு நான்காம் வீட்டில் இருப்பதால் நான்காம் இட பலன்களை நல்ல முறையில் செய்வார்.முழுமையான அமாவாசை சந்திரனாக இல்லாமல் சற்று வலுக் குறைந்து லக்னத்தை பார்ப்பது ஜாதகருக்கு நல்லது.ஏழாமிடம் குறிக்கக்கூடிய நண்பர்கள் வாழ்க்கை துணை, கூட்டுத் தொழில் சார்ந்த விஷயங்களிலும் நல்ல பலன்களைத் தருவார்.

எட்டாம் இடமான விருச்சகத்தில் சந்திரன் நீச நிலையில் வலுக்குறைந்த நிலையில் இருப்பார்.இங்கே இருப்பதைப் பொருத்தவரை ஒளித்திறனுடைய சந்திரனாக இருந்து விட்டால் நல்லது.
இல்லையெனில் நான்காம் இடம் குறிக்கக்கூடிய நிலம், வீடு, மனை, வாகனம், கல்வி,  தாய் வழி ஆதரவு போன்றவற்றில் கடுமையான இன்னல்களைத் தருவார்.சந்திர தசாவில் ஜாதகருக்கு மனம் சார்ந்த பிரச்சனைகள் எழலாம்.எட்டில் மறைந்திருக்கும் பொழுது சுபர்களுடன் இணைந்து இருப்பதும் சுபர் பார்வையில் இருப்பதும் நல்லது. #Iniyavan

ஒன்பதாம் இடமான தனுசுவில் சந்திரன் இருப்பதைப் பொருத்தவரை அது அவருக்கு நட்பு வீடு என்றாலும் தனது நான்காம் வீட்டிற்கு ஆறில் மறைவதால் நான்காம் வீட்டின் பலன்களை சற்று குறைத்தே செய்வார். ஜாதகரை ஆன்மீக விஷயங்களில் ஈடுபாடு உடையவராக மாற்றுவார்.

பத்தாம் இடமான மகரத்தில் இருப்பதை பொருத்தவரை தனது வீட்டை தானே பார்ப்பதால் நான்காம் இட பலன்களை சற்று கூடுதலாகவே தனது தசாக் காலங்களில் தருவார்.வளர்பிறை சந்திரனாக இருப்பது மிகவும் சிறப்பு. தொழில் சார்ந்த விஷயங்களிலும் ஜாதகரை நல்ல பலன்கள் அடையச் செய்வார்.
11ஆம் இடமான கும்பத்தில் இருப்பதை பொருத்தவரை தனது வீட்டிற்கு எட்டில் மறைவதால் நான்காம் இட பலன்கள் குறையும். பொதுவாக 11-ல் இருக்கும் கிரகங்கள் நல்ல பலன்களைச் செய்யும் என்பதன் அடிப்படையில் ஓரளவு நன்மை இருக்கும்.
12ஆம் இடமான மீனத்தில் இருப்பதை பொறுத்த வரை மீனம் அவருக்கு நட்பு வீடு என்றாலும் ஒளிக்கிரகங்கள் மறைவு ஸ்தானங்களில் இருப்பது நல்லதல்ல என்பதன் அடிப்படையில் தாயார், நிலம், பூமி,வீடு, மனை, வாகனம், கல்வி போன்றவற்றில் ஜாதகருக்கு மன நிறைவு இருக்காது.
வீடு கொடுத்த குரு வலுப்பெறுவது நல்லது.

சந்திரனால் கிடைக்கக்கூடிய நிலம், பூமி, வீடு, மனை, வாகனம் போன்ற வசதிகள் லக்னத்திற்கு கிடைத்துள்ள சுபர் (ம) பாபர் தொடர்பு, லக்னாதிபதியின் பலம் மற்றும் பலவீனத்திற்கு ஏற்ப  கூடுதல், குறையாக இருக்கும். #Iniyavan
சந்திரனுக்கு வீடு கொடுத்த கிரகத்தின் நிலை, சந்திரனுடன் இணைந்த, சந்திரனை பார்த்த கிரகங்களின் நிலை இவற்றைப் பொறுத்து பலன்களில் மாறுபாடு இருக்கலாம். சனி மற்றும் ராகு தொடர்பினை பெறும் பொழுது சந்திரன் தான் நின்ற வீட்டின் ஆதிபத்திய பலன்கள், தன்னுடைய ஆதிபத்திய மற்றும்  காரகத்துவ பலன்கள் போன்றவற்றை பாதிப்பார்.சுபர் தொடர்பிருப்பின் தொடர்பிற்கு ஏற்ப பிரச்சனையின் வீரியம் குறைவாக இருக்கும்.
சந்திரன் பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கும் போது திங்கட்கிழமையில் வரக்கூடிய பிரதோஷ வழிபாடுகளில் கலந்து கொள்வதும் பௌர்ணமி தோறும் பெண் தெய்வ வழிபாடுகளை கடைபிடித்து வருவது நல்லதாகும்.
இதோடு வாழ்வியல் பரிகாரமாக தாயை மதித்தல், அன்னையிடத்தில் அனுசரனையுடன் நடந்து கொள்ளுதல்,அன்னையின் நியாயமான தேவைகளை பூர்த்தி செய்தல், தாயை ஒத்த வயதுடையவர்கள் பொருளாதார ரீதியாக கஷ்டப்படும் பொழுது அவர்களுக்கு தேவையான தம்மால் முடிந்த உதவிகளை செய்து வருவதும் நல்லது..

நன்றிகள்..
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA B.Ed
Cell 9659653138

ஜோதிடம் மற்றும் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட தகவல்களை பெறுவதற்கு இணைந்திருங்கள்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக