திங்கள், 7 ஜூலை, 2025

ஏழாம் அதிபதி உச்சம் பெற்று இருந்தும் ஏன் 41 வயதாகியும் திருமணம் நடைபெறவில்லை?

கடந்த புதன்கிழமை அன்று "பலன் தரும் ஜோதிட தகவல்கள்" என்ற பகுதியில் எட்டாவது விதியாக  "இலக்னம் மற்றும் இராசிக்கு ஏழாம் அதிபதி உச்சம் பெற்று இருந்தும்" திருமணம் தாமதமாவது ஏன்? என்ற கேள்விக்கு ஏழாம் அதிபதி நல்ல நிலையில் இருந்தாலும், புத்திர பாவகமான ஐந்தாம் பாவகம் கடுமையான பாதிப்பிற்கு உள்ளான நிலையில் இருக்கும்பொழுது, புத்திர பாக்கியம் தாமதமாக கிடைக்க வேண்டும் என்ற விதி அடிப்படையில் திருமணம் தாமதமாகும் என்று குறிப்பிட்டு இருந்தேன். 

ஒரு சில ஜோதிட ஆர்வலர்கள் இந்த விதியை ஒரு உதாரண ஜாதகத்தின் வாயிலாக விளக்க முடியுமா? என கேட்டிருந்தார்கள். அதன் அடிப்படையில் இன்று ஒரு உதாரண ஜாதகத்தை பார்ப்போம். #Iniyavan 

"ஜாதகத்தில் ஏழாம் பாவகம் மற்றும் அதன் அதிபதி ஜாதகரின் திருமணத்தை குறிக்கின்றன. குறிப்பாக ஏழாம் பாவக அதிபதி ஆட்சி அல்லது உச்சத்தில் இருப்பது திருமணம் சார்ந்த விஷயங்களுக்கு நல்லது எனப் படித்திருப்போம் — இது திருமணம் தாமதமின்றி நடைபெறும் என்பதைக் குறிக்கிறது. ஆனால், எல்லா சூழ்நிலைகளிலும் இது பொருந்துமா? என்றால் கேள்வி எழுகின்றது. ஏனெனில், சில சமயங்களில் ஏழாம் அதிபதி வலுவான நிலையிலும், திருமணம் மிக அதிக தாமதமாகவே நடைபெறுகிறது. இதற்கான ஒரு முக்கியமான காரணம், ஜாதகத்தில் ஐந்தாம் பாவத்தின் நிலைமை  பாதிப்படைந்த ஒன்றாக இருக்கும்.

தனுசு இலக்னம், மீன இராசியில் பிறந்த இந்த ஜாதகருக்கு தற்பொழுது 41 வயது முடிவடைந்து பத்து மாதங்கள் ஆகிறது. ஆனால் இதுவரை இன்னும் திருமணம் ஆகவில்லை. இராசிக்கு பத்தாம் அதிபதியாக குரு இருப்பதாலும், இலக்னத்திற்கு ஆறாம் வீட்டை குரு பார்ப்பதாலும், அதுமட்டுமின்றி இராசிக்கு இரண்டாம் வீட்டு அதிபதி செவ்வாயினை குரு பார்ப்பதாலும் இவர் ஆசிரியர் தொழில் இருக்கிறார். 

ஒரு ஜாதகத்தில் இலக்னம் மற்றும் இராசிக்கு இரண்டு, ஆறு, பத்தாம் பாவங்களுடன் குரு தொடர்பில் இருக்கும் பொழுது அவர் சொல்லிக் கொடுக்கக்கூடிய துறையில் அதாவது மற்றவர்களுக்கு போதிக்கக்கூடிய தொழில் அல்லது  வங்கித்துறை, பணம் சார்ந்த கொடுக்கல், வாங்கல் தொடர்புடைய  துறைகளில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதோடு பேச்சிற்கு காரக கிரகமாகிய புதன் வலுப்பெற்று இருந்து, வாக்கு ஸ்தானம் வலுப்பெற்று இருந்தாலும் வாக்கு ஸ்தான அதிபதி குருவுடைய தொடர்பில் இருந்தாலும் ஜாதகர் ஆசிரியர் தொழிலில் இருப்பார் என்பது விதியாகும்.

 இந்த ஜாதகத்தில் புதன் உச்சம் பெற்ற நிலையில் இருக்கிறார், அடுத்ததாக வாக்குஸ்தான அதிபதியான இரண்டாம் வீட்டு அதிபதி சனி உச்சம் பெற்ற நிலையில் இருப்பதால்  வாக்கு ஸ்தானம் வலுவடைந்துள்ளது. அதேபோல் இராசிக்கு இரண்டாம் வீட்டு அதிபதியான செவ்வாயும் குருவுடைய பார்வையில் இருக்கிறார். அதன் காரணமாக இவர் ஆசிரியர் தொழிலில் இருக்கிறார்.#Iniyavan

தற்போது 41 வயது முடிந்தும் இன்னும் திருமணம் ஆகாமல் இருப்பதற்கான காரணங்களை பார்ப்போம்.

இலக்னத்திற்கு ஏழாம் அதிபதியான புதன் உச்சம் பெற்ற நிலையில் இருக்கிறார். இராசிக்கு ஏழாம் அதிபதியும் புதனே ஆவார்.  இலக்னம் மற்றும் இராசிக்கு ஒருவரே ஏழாம் அதிபதியாகி, அவர் வலுப்பெற்று இருந்தும், அதாவது ஸ்தான பலத்தின்  அடிப்படையில் உச்சம் பெற்று இருந்தும் 41 வயதை கடந்தும் இவருக்கு இன்னும் ஏன் திருமணம் ஆகவில்லை என்பதே பிரதான கேள்வி? 

இலக்னம் மற்றும் இராசிக்கு ஏழாம் பாவகத்தோடு எவ்வித பாப கிரகங்களின் தொடர்பும் கிடையாது. சில நிலைகளில் இலக்னம் மற்றும் இராசிக்கு ஏழாம் பாவகத்தோடு பாவ கிரகங்களின் தொடர்பு இருந்தாலும் திருமணம் தாமதமாகும். இங்கே பாப கிரகங்களின் தொடர்பு இலக்னம் மற்றும் இராசிக்கு ஏழாம் இடத்திற்கு  கிடையாது. 

நீங்கள் களத்திரக்காரகனான சுக்கிரன் சூரியனுடன் ஒரே டிகிரியில் அஸ்தங்கமாக இருப்பதால் திருமணம் சார்ந்த விஷயங்கள் தாமதமாகிறது என்று சொல்லலாம். இங்கே சுக்கிரன் சூரியனுடன் மிக நெருங்கிய நிலையில் அஸ்தங்கம் அடைந்திருந்தாலும், சுக்கிரன் சந்திர அயோகத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுய ஜாதகத்தில் சந்திரன் முழு ஒளித்திறனுடன் பௌர்ணமி சந்திரனாக இருக்கும் பொழுது அல்லது பௌர்ணமிக்கு முன் நான்கு நாட்கள், பின் நான்கு நாட்களான சந்திரனாக இருக்கும் பொழுது சந்திரனுக்கு ஆறு, ஏழு, எட்டில் இருக்கக்கூடிய சுப கிரகங்கள் வலுப்பெறும் என்பது பொதுவான விதியாகும்.

அதே போல சந்திரனுக்கு  ஆறு, ஏழு எட்டில் இருக்கக்கூடிய கிரகங்கள் பாதிப்பை தரக்கூடிய நிலையில் இருந்தாலும் மேற்கண்ட கிரகம் சந்திர அதியோகத்தில் இருக்கும் பொழுது பாதிப்புகள் பெரிய அளவிற்கு இருக்காது என்பதும் மற்றொரு விதியாகும். பௌர்ணமிக்கு அடுத்த மூன்று நாட்களுக்கு பிறந்த இந்த ஜாதகருடைய ஜாதகத்தில் சந்திரன் ஓரளவு வலுப்பெற்ற நிலையில் குருவின் வீட்டில், குருவின் பார்வையிலும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதோடு இலக்னத்திற்கு நான்காம் இடத்தில் இருப்பதால் அவர் கூடுதலாக திக்பல அடிப்படையில் வலிமையாகவும் இருக்கிறார். மேற்கண்ட சந்திரனுக்கு ஆறாம் இடத்தில்தான் அஸ்தங்கம் அடைந்த சுக்கிரன் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அஸ்தங்கம் பெற்ற கிரகங்கள் சந்திர அதியோகத்தில் இருக்கும் பொழுது அஸ்தங்க பாதிப்பு விலகும் என்பதும் ஒரு பொதுவான விதியாகும். அதன் அடிப்படையில் இங்கே சுக்கிரனுக்கு அஸ்தங்க பாதிப்பு பெரிய அளவிற்கு கிடையாது.#Iniyavan

ஏழாம் வீட்டு அதிபதியும் வலுப்பெற்று, சுக்கிரன் அஸ்தங்கம் அடைந்திருந்தாலும் சந்திர அதி யோகத்தில் இருந்தும், ஏழாம் இடத்திற்கு எவ்வித பாவ கிரகங்களின் தொடர்பு இல்லாமல் இருந்தும் திருமணம் சார்ந்த விஷயங்கள் ஏன் இந்த அளவிற்கு தாமதம் ஆகிறது என்று பார்த்தோமேயானால் இந்த இடத்தில் தான் புத்திர பாவகம் என்று அழைக்கப்படக்கூடிய ஐந்தாம் பாவகத்தின் நிலையையும், ஐந்தாம் பாவக அதிபதியின் நிலையையும் நாம் பார்த்தாக வேண்டும்.
இந்த ஜாதகத்தில் இலக்னத்திற்கு ஐந்தாம் வீட்டை உச்ச சனி பார்த்து, இலக்னத்திற்கு ஐந்தாம் வீட்டு அதிபதியான செவ்வாயையும் உச்ச சனி பார்க்கிறார். இங்கே புத்திர பாக்கியத்தை சுட்டிக்காட்டக்கூடிய ஐந்தாம் வீட்டு அதிபதியான செவ்வாய், இலக்னத்திற்கு எட்டாம் இடத்தில் மறைந்து, நீசம் பெற்ற நிலையில் மேற்கொண்டு, உச்சம் பெற்ற சனியின் பார்வையில் சற்று அதிக பாதிப்படைந்த நிலையில் இருக்கிறார். என்பது குறிப்பிடத்தக்கது.

உச்ச சனியின் பார்வையில் இருக்கக்கூடிய கிரகங்களின் காரக, ஆதிபத்திய விசயங்களில் ஜாதகருக்கு அதீத தாமதங்கள், காரக ரீதியான குறைபாடுகள் ஏற்படும் என்பதும் ஒரு ஜோதிட விதியாகும்.

அடுத்ததாக இராசிக்கு ஐந்தாம் இடத்தை எடுத்துக் கொண்டாலும், இராசிக்கு ஐந்தாம் வீட்டிலும் செவ்வாயே நின்று, நீசம் பெற்ற நிலையில், சனியின் பார்வையில் இருக்கிறார். அந்த வகையில் இலக்னத்திற்கு ஐந்தாம் பாவகம், இராசிக்கு ஐந்தாம் பாவகம் பாதிப்படைந்த நிலையில் இருக்கிறது என்பது தெளிவாகிறது.
இலக்னத்திற்கு ஐந்தாம் பாவகம் மற்றும் அதன் அதிபதி வலுப்பெற்ற சனியின் பார்வையில் பாதிக்கப்பட்டிருப்பதும், இராசிக்கு ஐந்தாம் பாவகமும், சனி மற்றும் செவ்வாய் போன்ற பாப கிரகங்களின் தொடர்பினால் பாதிக்கப்பட்டிருப்பதாலும் புத்திர பாக்கியம் சார்ந்த விஷயங்கள் அதீத தாமதமாகும் என்பது தெளிவாகிறது. 

இது மட்டுமின்றி  புத்திர பாக்கியத்திற்கு காரக கிரகமான குரு இலக்னத்திற்கு 12-ல் மறைந்து கேதுவுடன் இருக்கிறார். வீடு கொடுத்த செவ்வாயும் நீசம் பெற்ற நிலையில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐந்தாம் பாவகம், அதன் அதிபதி பலம் இழந்த நிலையில் இருக்கும் பொழுது புத்திர பாக்கியத்திற்கு காரக கிரகமான குரு வலுத்திருக்கும் பட்சத்தில் ஜாதகருக்கு புத்திர பாக்கியம் சார்ந்த விஷயங்களில் பெரிய அளவிற்கான தாமதம் இருக்காது. இந்த ஜாதகத்தை பொருத்தவரை காரக கிரகமான குரு, இலக்னத்திற்கு 12 மறைந்து கேதுவுடன் இணைந்து நீசனின் வீட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு ஜாதகத்தில் ஐந்தாம் பாவகம், ஐந்தாம் வீட்டு அதிபதி, கடுமையான பாதிப்படைந்த நிலையில் இருக்கும் பொழுதும் அவருக்கு புத்திர பாக்கியம் சார்ந்த விஷயங்கள் தாமதமாக வேண்டும் என்பதன் அடிப்படையிலும் திருமணம் தள்ளிப் போகும். மேற்கண்ட விதியின் அடிப்படையில்தான் இந்த ஜாதகருக்கு இலக்னம் மற்றும் இராசிக்கு ஏழாம் இடம்,  ஏழாம் வீட்டு அதிபதி நல்ல நிலையில் இருந்தாலும், புத்திர பாவகமான ஐந்தாம் பாவகம் இலக்னம் மற்றும் இராசிக்கு பாதிக்கப்பட்டு இருப்பதால் திருமணம் இந்த அளவிற்கு தாமதம் ஆகியது.

மேற்கண்ட ஜாதகருக்கு திருமணம் நடக்குமா?

வாழ்க்கைத் துணை சார்ந்த விஷயங்களை சுட்டிக் காட்டக்கூடிய ஏழாம் வீட்டு அதிபதி இலக்னம் மற்றும் இராசிக்கு ஒரே கிரகமே அதிபதியாக வந்து இங்கே உச்சம் பெற்ற நிலையில் வலுத்திருப்பதாலும், மண வாழ்க்கைக்கு  காரக கிரகமான சுக்கிரன், சந்திரனின் அதியோகத்தில் இலக்னத்திற்கு திரிகோண பாவகமான ஒன்பதாம் பாவகத்தில் இருப்பதாலும் நிச்சயம் திருமணம் நடக்கும். தற்போது அவருக்கு சுக்கிர திசையில் ராகு புத்தி நடந்து கொண்டிருக்கிறது. சுய ஜாதகத்தில் ராகு சுக்கிரனுடைய வீட்டில், குருவின் பார்வையில் இருக்கிறார்.
அதுமட்டுமின்றி இலக்னாதிபதி குருவிற்கு ஏழாம் பாவகத்தில் இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவ்வகையில் ராகு புத்தி முடிவடைவதற்குள் திருமணம் நடப்பதற்கான வாய்ப்பு உண்டு.

சுக்கிரனுடைய வீட்டில் நின்ற ராகு கேதுக்கள் திருமண பாக்கியத்தை தங்களுடைய தசா புத்திகளில் தருவார்கள் என்பதன் அடிப்படையில் இங்கே ராகு புத்தி முடிவடைதற்குள்  ஜாதகர் சற்று கடினமாக முயற்சி செய்தால் திருமணம் நடப்பதற்காக வாய்ப்புகள் உண்டு. 

 இலக்னம் மற்றும் இராசிக்கு ஐந்தாம் பாவகம் பாதிக்கப்பட்டிருந்து, காரக கிரகமான குருவும் பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கும் பொழுது, ஐந்தாம் பாவகத்தை வலுப்படுத்தக்கூடிய வழிபாடுகளிலும், காரக கிரகமாகிய குருவை வலுப்படுத்தக்கூடிய வழிபாடுகளிலும் ஜாதகர் சற்று அதிக கவனம் செலுத்தும் போது பாதிப்புகள் சரியாகி திருமணம் நடக்கும்.#Iniyavan

 அவ்வகையில் குருவிற்குரிய வழிபாட்டினையும்  மற்றும் ஐந்தாம் அதிபதியான செவ்வாயினை வலுப்படுத்தக்கூடிய வழிபாடுகளில் ஒன்றான முருக வழிபாட்டையும் ஆத்மார்த்தமான நம்பிக்கையுடன் கடைபிடிப்பது நலம் தரும்.

இந்த உதாரண ஜாதகம் நமக்கு உணர்த்தும் மெய்ப்பொருள் என்னவென்றால், ஜாதகரின் திருமணம் எப்போது நடக்கும் என்பதை தீர்மானிப்பது ஏழாம் பாவகத்தின் தன்மையை மட்டும் வைத்து அல்ல. சில சமயங்களில், புத்திர பாக்கியத்துடன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தொடர்புடைய ஐந்தாம் பாவகத்தின் பாதிப்பும் திருமண தாமதத்திற்கு முக்கியக் காரணமாக அமைகிறது. எனவே திருமணம் எப்போது நடக்கும்? ஏன் அதிக தாமதங்கள் ஏற்படுகிறது என்ற கேள்வி எழும் பொழுது ஏழாம் பாவகத்தின் நிலையை மட்டும் பார்க்காமல், ஐந்தாம் பாவகத்தின் நிலையினையும் சற்று கூர்மையாக கவனிக்க வேண்டும் என்பதே இந்த பதிவின் நோக்கம்...
 நன்றிகள்
 Astrologer 
 ப.இனியவன் கார்த்திகேயன் 
 MA Astrology
 Cell: 9659653138

📲 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக