ஒரு ஜாதகத்தின் தரத்தினை தீர்மானிக்கும் முக்கிய அம்சங்கள்: லக்னம், லக்னாதிபதி, ராசி மற்றும் அடுத்தடுத்து வரும் தசா புத்திகளின் முக்கியத்துவங்கள்
ஒரு ஜாதகத்தின் தரம் எதைப் பொருத்து நிர்ணயிக்கப்படுகிறது?
இயல்பாகவே ஒரு நல்ல ஜாதகம் என்பதற்கான அடிப்படையான விஷயங்கள் என்னென்ன?
முதன்மை அமைப்பாக லக்னம் மற்றும் லக்னாதிபதி நல்ல நிலையில் இருக்க வேண்டும்.லக்னாதிபதி என்பது ஜாதகரை குறிக்கும். லக்னாதிபதி நல்ல நிலையில் இருப்பதும், லக்னாதிபதியின் வீடான லக்னம் நல்ல நிலையில் இருப்பதும் மிக மிக அவசியம். லக்னம் நல்ல நிலையில் இருப்பது என்றால் இயற்கை சுப கிரகங்கள் லக்னத்தில் இருப்பதும் லக்னத்தை பார்ப்பதும் சிறப்பானதாகும். லக்னாதிபதி நல்ல நிலையில் இருக்கிறார் என்றால் ஸ்தான பல அடிப்படையில் ஸ்தான பலத்தை இழக்காமல் இருப்பது அவசியம். ஸ்தான பலத்தை இழந்திருக்கும் பொழுது வேறு ஏதேனும் ஒரு வகையில் பலம் பெற்று இருப்பது நல்லது. அதாவது லக்னாதிபதிக்கு வீடு கொடுத்தவர் வலுப்பெறுவது, வலுப் பெற்ற சுப கிரகத்தின் பார்வையில் அல்லது இணைவில் லக்னாதிபதி இருப்பதும் சிறப்பு. #Iniyavan
லக்னாதிபதி இயற்கை பாபர்களாக இருக்கும் போது மறைவு ஸ்தானங்களில் வலுப்பெறுவது சிறப்பு.
லக்னம் மற்றும் லக்னாதிபதி நல்ல நிலையில் இருப்பது என்பதே முதல் தரமான ஜாதகத்திற்கான முதன்மையான அடிப்படை விதி ஆகும்.
லக்னம் மற்றும் லக்னாதிபதி நல்ல நிலையில் இல்லாத பொழுது மட்டுமே ஒரு ஜாதகர் திசை மாறிப் போகின்றார்.இவருடைய எண்ணங்கள் பலிப்பதில்லை. முயற்சிகள் போதுமான அளவிற்கு பலன் தருவதில்லை.
அடுத்ததாக லக்னம் மற்றும் லக்னாதிபதிக்கு துணை செய்கின்ற பாவகங்களான ஐந்து மற்றும் ஒன்பதாம் பாவகங்கள் நல்ல நிலையில் இருக்க வேண்டும். லக்னம் மற்றும் லக்னாதிபதி சரியில்லாத நிலைகளிலும் திரிகோண பாவகங்களான ஐந்து, ஒன்பதாம் பாவங்கள் நல்ல நிலையில் இருக்கும் போது ஜாதகருடைய முயற்சிகள் பலிதமாகும். தசா புத்திகளின் அடிப்படையில் ஓரளவிற்கு நல்ல வாழ்க்கை சூழலில்தான் ஜாதகர் இருப்பார்.
எந்த ஒரு பாவகமும், கிரகமும், பாப கிரகங்களின் தொடர்பினால் கடுமையான அளவில் பாதிக்கப்பட்டு இருக்க கூடாது. பாவகமோ, கிரகமோ பாப கிரகங்களின் தொடர்பில் பாதிக்கப்பட்டிருந்தாலும் அந்த பாவகத்தின் அதிபதி வலுப்பெற்று இருக்க வேண்டும். அல்லது பாதிப்படைத்த பாவகம் மற்றும் கிரகம் வலுப்பெற்ற சுபர் பார்வையில் இருக்க வேண்டும்.
இதற்கு அடுத்ததாக மிக முக்கியமான விஷயம் எதுவென்றால் ஜாதருடைய வாழ்நாள் முழுமைக்கும் நடைபெறக்கூடிய தசா புத்திகள். ஜோதிடத்தில் தசா புத்திகளின் பங்கு மிக மிக முக்கியமானது ஜாதகருடைய வாழ்க்கை எப்படிப்பட்ட பாதையில் செல்லும் என்பதை நிர்ணயம் செய்வதில் தசா புத்திகள் மிக முக்கியத்துவம் வாய்ந்த பங்கினை வகிக்கின்றன.#Iniyavan
ஒரு ஜாதகம் இயல்பிலேயே எவ்வளவு யோகம் மிக்கதாக இருந்தாலும் யோகத்தை தரக்கூடிய கிரகங்களின் தசா புத்திகள் நடப்பில் இல்லாத பொழுது அந்த கிரகங்களின் பலனை ஜாதகரால் உணரவே முடியாது. அதுபோல ஜாதக ரீதியாக ஜாதகருடைய வாழ்க்கையில் ஒரு முக்கியமான பாதிப்பு நடக்க வேண்டும் என்ற அமைப்பு இருக்கிறது என்றாலும் பாதிப்பை தரக்கூடிய கிரகங்களின் தசா புத்திகள் நடப்பில் வரவேண்டும். அப்பொழுதுதான் அந்த பாதிப்பு ஜாதகருக்கு நடக்கும். நடப்பில் வராத பொழுது பெரிய அளவில் பாதிப்புகள் இருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை இதிலிருந்தே தசா புத்திகளின் முக்கியத்துவம் எந்த அளவிற்கு முக்கியம் என்பது உணர முடியும்.
ஒரு சிலருக்கு வாழ்க்கையில் ஒரு சில முயற்சிகளிலேயே எல்லா விஷயங்களும் கை கொடுகின்றன. ஒரு சிலருக்கு எவ்வளவு முயற்சிகள் எடுத்தாலும் வெற்றியினை தருவதில்லை. இவை எல்லாவற்றிற்கும் காரணம் தசா புத்திகள் தான். தசா புத்திகள்தான் ஜாதகருக்கு வாழ்க்கையில் நடக்கக்கூடிய சம்பவங்களை நிர்ணயம் செய்கின்றன.
லக்னம் மற்றும் லக்னாதிபதி வலுக் குறைந்த நிலையில் இருந்தாலும், மேற்கண்ட லக்னத்திற்கு ஏற்ற யோக தசாக்கள் நடப்பவர்கள் அதிர்ஷ்டத்தின் வாயிலாக எப்படியும் ஒரு நல்ல வாழ்க்கை சூழலில் பிழைத்துக் கொள்கின்றார்கள்.
தாய் தந்தையினர், உறவினர்கள், வாழ்க்கை துணை, நண்பர்கள் என யாரேனும் ஒருவருடைய உதவியால் ஜாதகருடைய வாழ்க்கை போதுமானவரை நல்லபடியாகவே செல்லும். யாருடைய உதவியின் வாயிலாக ஜாதகருடைய வாழ்க்கை நல்லபடியாக சென்று கொண்டிருக்கிறது என்பதையும் சுய ஜாதகத்தில் எந்த பாவகம் அல்லது எந்த கிரகம் வலுப்பெற்று இருக்கிறது என்பதை வைத்து சொல்லிவிட இயலும். யோக தசாக்கள் தொடர்ச்சியாக நடக்கும் பட்சத்தில் லக்னம் மற்றும் லக்னாதிபதி சரியில்லாத நிலைகளில் இருந்தால் கூட ஜாதகர் பெரிய அளவிற்கான துயரங்களை சந்திக்க போவதில்லை
யோக தசாக்கள் என்றால் என்ன?
நவகிரகங்களை பொதுவாக இரு அணியாக வகைப்படுத்தலாம்.
1.குரு அணியில் வரக்கூடியவர்கள்
2.சுக்கிர அணியில் வரக்கூடியவர்கள்
குரு அணியில் வரக்கூடிய கிரகங்கள் சூரியன், சந்திரன், செவ்வாய்,
குரு..
சுக்கிர அணியில் வரக்கூடிய கிரகங்கள் சனி, புதன் மற்றும் சுக்கிரன்..
நிழல் கிரகங்களான ராகு கேதுக்கள் சுய ஜாதக ரீதியாக எந்த கிரகத்தின் வீட்டில் இருக்கின்றார்களோ அதற்கு ஏற்ப செயல்படுவார்கள்.
உதாரணத்திற்கு நீங்கள் செவ்வாயின் லக்னமான விருச்சகத்தில் பிறந்தவர் என்றால் நீங்கள் குரு அணி லக்னத்தில் வரக்கூடியவர் ஆவார். அதே போல புதனுடைய லக்னமான மிதுனத்தில் பிறந்திருக்கிறீர்கள் என்றால் நீங்கள் சுக்கிர அணி லக்னத்தில் பிறந்தவர் என்று அர்த்தம்.
குரு அணியில் பிறந்தவர்களுக்கு தொடர்ச்சியாக சூரிய, சந்திர, செவ்வாய் குருவின் தசா காலங்கள் வருவது சிறப்பு..
அதேபோல் சுக்கிர அணியில் பிறந்தவர்களுக்கு சனி, புதன், சுக்கிரனுடைய தசா காலங்கள் வருவது சிறப்பு.
நிழல் கிரகங்களான ராகு, கேதுக்களைப் பொருத்தவரை நின்ற வீட்டு அதிபதியினை போல் செயல்படுவார்கள் என்பதால் ராகு,கேதுக்கள் குரு அணியில் பிறந்தவர்களுக்கு சூரிய, சந்திர, செவ்வாய் மற்றும் குருவின் வீடுகளில் அமைவது சிறப்பு. அதேபோல சுக்கிர அணியில் பிறந்தவர்களுக்கு ராகு, கேதுக்கள் சனி, புதன், சுக்கிரனுடைய வீடுகளில் அமைவது சிறப்பு..
மேற்கண்ட அமைப்பின் அடிப்படையில் தசா காலங்கள் தொடர்ச்சியாக வருவதைத் தான் யோக தசாக்கள் என்று கூறுகின்றோம்.
அவயோக தசாக்கள் என்றால் என்ன?
குரு அணி லக்னங்களில் பிறந்தவர்களுக்கு தொடர்ச்சியாக சனி, புதன், சுக்கிர தசாக்கள் வருவது சரியற்ற நிலை. அதேபோல் சுக்கிரன் அணி இலக்னங்களில் பிறந்தவர்களுக்கு தொடர்ச்சியாக சூரிய, சந்திர, செவ்வாய் குரு தசாக்கள் வருவதும் நல்லதல்ல.
இதுபோன்று தசா காலம் முற்றிலுமாக மாறி தொடர்ந்து வரக்கூடிய பட்சத்தில் மட்டுமே , சுய ஜாதக ரீதியாக பாதிப்படைந்த பாவகம் அல்லது கிரகத்தின் வாயிலாக ஜாதகருக்கு கஷ்டங்கள் இருக்கும். எந்த அளவிற்கு கஷ்டப்படுகிறார்கள் என்பது மேற்கண்ட கிரகத்திற்கு கிடைத்திருக்க சுப, பாப தொடர்புகள் மற்றும் லக்னம்,லக்னாதிபதியின் நிலையைப் பொருத்தது ஆகும்.
அவயோக கிரகங்களின் தசா காலமே தொடர்ச்சியாக வந்தாலும் லக்னம் மற்றும் லக்னாதிபதி நல்ல நிலையில் இருக்கும் பொழுது மேற்கண்ட தசாவால் ஜாதகருக்கு பெரிய அளவிற்கான பாதிப்புகள் இருக்காது.
லக்னம் மற்றும் லக்னாதிபதி நல்ல நிலையில் இருந்து யோக தசாக்களும் எவ்வித பங்கமின்றி நடைபெறக்கூடிய பட்சத்தில் ஜாதகர் பிறந்ததிலிருந்து தன்னுடைய வாழ்வின் இறப்பு வரை எல்லா விஷயங்களிலும் போதுமானவரை நல்ல சூழலில் மட்டுமே இருப்பார்.
அவயோக கிரகங்களின் தசா காலங்கள் தொடர்ச்சியாக நடப்பில் இருந்தாலும் மேற்கண்ட கிரகங்கள் துர்ஸ்தான வீடுகளுடன் தொடர்பு கொள்ளாமல் மூன்று, ஆறு, பத்து, 11 போன்ற நட்பு வீடுகளில் நின்று தசா நடத்துவது பெரிய பாதிப்புகளை தராத சூழ்நிலையில் இருக்கும்.
லக்னம் மற்றும் லக்னாதிபதி, ராசி சரியற்ற நிலையில் இருந்து அவயோக கிரகங்களின் தசா காலங்கள் தொடர்ச்சியாக வரக்கூடிய பட்சத்தில் ஜாதகர் திசை மாறிப் போவார். எதை படிக்க வேண்டுமோ அதை படிக்காமல் வேறு ஒன்றை படிப்பார். வாழ்க்கைக்கு தேவையற்ற விஷயங்களில் கவனத்தைச் செலுத்திக்கொண்டு வாழ்க்கையை சரி இல்லாத சூழலுக்கு கொண்டு சென்று இருப்பார்.
லக்னம், லக்னாதிபதி, ராசி போன்றவை சரியற்ற நிலைகளில் இருப்பது என்பது எதைக் குறிக்கிறது என்றால் லக்னம் பாபர்களின் தொடர்பிலிருந்து லக்னாதிபதியும் பாபர்களின் தொடர்பினை பெற்று அல்லது இயல்பாவே ஸ்தான பலத்தை இழந்து பலவீனமான நிலையில் இருந்து, ராசியும் பாபர்களின் தொடர்பினை பெற்று பலவீனமாக இருப்பதையே சரியற்ற நிலை என்கிறோம்
லக்னம் பாபக்கிரகங்களின் தொடர்பில் பலவீனமாக இருந்து, லக்னாதிபதியும், ராசியும், சரியற்ற நிலையில் இருந்து, தசா புத்திகளின் வரிசையும் சரியில்லாமல் அவயோக கிரகங்களின் தசாக்கள் தொடர்ச்சியாக நடப்பில் இருக்கும் பொழுது மட்டுமே ஒருவர் சராசரிக்கும் கீழான நிலையில் அதாவது உயிர் வாழ்வதற்கு போதுமான விஷயங்களை விஷயங்களை மட்டுமே செய்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஜாதகர் இருப்பார்.
லக்னம், லக்னாதிபதி மற்றும் ராசி போன்றவை சரியில்லாத நிலைகளில் இருந்தால் கூட தசா புத்திகள் தொடர்ச்சியாக நன்றாக இருந்துவிட்டால் வாழ்க்கை ஓரளவிற்கு நன்றாக செல்லும். லக்னம், லக்னாதிபதி, ராசி சரியில்லாத நிலைகளில் கேந்திர, (4,7,10) திரிகோணங்களை(1,5,9) இயக்கக்கூடிய தசாக்கள் தொடர்ச்சியாக வருமாயின் வயதிற்கு ஏற்ற வகையில் ஓரளவேனும் ஜாதகர் நல்ல பலன்களை அனுபவிப்பார்.#Iniyavan
கேந்திர,திரிகோண பாவகங்களை இயக்கக்கூடிய தசாக்களுக்கு பதிலாக ஆறு, எட்டு போன்ற துர்ஸ்தான பாவகங்களை இயக்கக்கூடிய தசா புத்திகள் தொடர்ச்சியாக வருமாயின் ஜாதகர் தேவையற்ற வம்பு வழக்குகளில் சிக்கி பிரச்சனைகளுக்கு உள்ளாகுதல், தீராத நோய் பாதிப்பு, விபத்தினை சந்தித்து செயல்பட முடியாத நிலைக்குச் செல்லுதல், போதை பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகுதல், தேவையற்ற தொழில் சார்ந்த விஷயங்களில் பெரிய அளவில் பணத்தை முதலீடுகளை செய்து கடன் பட்டு போதல், உறவுகளுடன் பகையாகுதல், உறவுகளை பகைத்துக் கொள்ளுதல், தொடர்ச்சியாக முன்னேற்றம் இல்லாத சூழ்நிலையில் இருத்தல், குடும்பத்தை பிரிந்து வாழுதல் போன்ற சூழலில் ஜாதகர் இருப்பார். இது போன்ற சூழ்நிலைகளில் ஜாதகர் இருக்கும் பொழுது அவற்றிலிருந்து விடுபட்டு வருவதற்கு மற்றொருவர் நல்ல அறிவுரைகளை கூறினாலும் அதை ஏற்றுக்கொள்ள முடியாத பிடிவாதமான மனநிலையில் எனக்கு எல்லாம் தெரியும் என்ற முரண்பாடான குணத்தினைக் கொண்டவராக ஜாதகர் இருப்பார்.
ஏதேனும் ஒரு வகையில் லக்னம், லக்னாதிபதி, ராசி போன்றவைகளுக்கு வலுப்பெற்ற சுபகிரகங்களின் தொடர்பு இருக்கும்பொழுது மட்டுமே பிறருடைய நல்ல அறிவுரைகளை ஏற்றுக்கொண்டு செயல்படக்கூடிய மனோபாவம் ஜாதகரிடத்தில் இயல்பாக இருக்கும்.
லக்னம் மற்றும் லக்னாதிபதி நல்ல நிலையில் இருந்து, யோக தசாக்களும் நடப்பில் உள்ள ஒருவருக்கு வாழ்க்கை நல்ல பாதையில் செய்யும். நடக்க வேண்டிய விஷயங்கள் அனைத்தும் தகுந்த காலத்தில் சரியானபடி நடக்கும். முயற்சிக்கு ஏற்ற பலன், அங்கீகாரம், புகழ் என அனைத்தும் கிடைத்தே தீரும்.#Iniyavan நன்றிகள்
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA Astrology📞 Cell: 9659653138
📲 ஜோதிடம் மற்றும் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட தகவல்களை பெற:
🔗 WhatsApp Channel: https://whatsapp.com/channel/0029Va5vrDNJZg3zsfvet23T
🔗 Telegram Channel: https://t.me/Astrologytamiltricks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக