படித்த படிப்பிற்கு ஏற்ற வேலைக்கு கிடைக்குமா?
#Iniyavan
இன்றைய உலகினில் பெரும்பாலும் பலரும் தான் படித்த படிப்பிற்கு தொடர்பில்லாத பணியை செய்து கொண்டிருக்கின்றனர். ஒருவர் என்ன படித்திருக்கிறாரோ அதற்கேற்ற வேலை,நல்ல சம்பளம் ஆகியவை தாமதமின்றி கிடைக்க பெற்றவர்கள் பாக்கியசாலிகள். அவ்வகையில் ஒருவர் தான் கற்ற கல்விக்கு ஏற்ற வேலை செய்வதில் பாக்கிய ஸ்தானத்திற்கும் தொடர்பு உண்டு.ஏனெனில் அடிப்படைக்கல்வி இரண்டாம் பாவகத்தையும் உயர்நிலைக்கல்வி நான்காம் பாவகத்தையும் பட்ட மேற்படிப்பு ஒன்பதாம் பாவகத்தை கொண்டும் நிர்ணயிக்கப்படுகிறது.
பொதுவாக இரண்டு, மற்றும் நான்காம் அதிபதிகள் மறைவிடங்கள் தவிர்த்து மற்ற இடங்களில் பலம் பெற்று அவர்களுக்கு பலம் வாய்ந்த பாக்கியாதிபதியின் தொடர்பு கிடைத்தால் படித்த படிப்பிற்கேற்ற பணி அமையும்.காலபுருஷ லக்கினப்படி ஒன்பதாம் அதிபதியான குரு பகவான், ஜெனன கால ஜாதகத்தில் ஒன்பதாம் அதிபதி மற்றும் லக்னாதிபதியுடன் இணைந்திருந்தாலும் கற்ற கல்விக்கேற்ற வேலை கிட்டும்.
பொதுவாக உத்தியோகக்காரகன் என்று அழைக்கப்படும் செவ்வாய் ஒரு ஜாதகத்தில் 3, 6, 10, 11 ஆகிய இடங்களில் இருந்து அவருக்கு ஒன்பதாம் அதிபதியின் தொடர்போ அல்லது காலபுருஷ இலக்கனப்படி பாக்கியாதிபதியான குருவின் தொடர்போ கிடைத்தாலும் படித்த படிப்பிற்கேற்ற பணி அமையும்.இங்கு பொதுவான உத்யோகக்காரகன் என செவ்வாய் அழைக்கப்பட காரணம் கால புருஷ இலக்கனப்படி பத்தாமிடமான மகரத்தில் செவ்வாய் உச்சம் பெறுவதால்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டு மற்றும் நான்காம் அதிபதிகள் ஆறு, எட்டு, பனிரெண்டில் மறைந்து இருந்தாலும் அல்லது வேறு ஏதேனும் வகையில் பலமற்று இருந்தாலும் வலுப்பெற்ற ஒன்பதாம் அதிபதி தொடர்பு கிடைத்தால் பலவித இன்னல்களுக்கு பின்னர் தான் படிப்பிற்கேற்ற வேலையை படிப்பினையாகப் பெறுவார் ஜாதகர்.
ஒன்பதாம் வீட்டிற்ககோ (அ) ஒன்பதாம் அதிபதிக்கோ 6, 8,12-ம் அதிபதியின் தொடர்பு கிடைத்திருந்தாலும் ஒன்பதாம் அதிபதி நீசம், அஸ்தமனம், வக்கிரம் போன்ற வகைகளில் பாதிக்கப்பட்டிருந்தாலும் படிப்பிற்கேற்ற பணி அமைவது கடினம். இது பொதுவான பாக்கியாதிபதியான குருவிற்கும் பொருந்தும்.
சில ஜாதக அமைப்புகளில் ஒன்பதாம் அதிபதி பலவீனப்பட்டு இருந்தாலும் அவர் தான் படித்த படிப்பிற்கேற்ற பணியை செய்து கொண்டிருப்பார். அதற்கு காரணம் அவரின் ஜாதகத்தில் பொதுவான பாக்கியாதிபதியான குருவும்,ராசியின் அடிப்படையில் பாக்கியாதிபதியானவரும் வலுப்பெற்று அமைந்திருப்பார்கள்.
நிறைவாக ஒரு ஜாதகத்தில் 2, 4, 9 மிடங்கள் மற்றும் பொதுவான பாக்கியாதிபதி என்று அழைக்கப்படுகின்ற குரு பகவான் வலுவாக இருக்கும் பட்சத்தில் படிப்பிற்கேற்ற பணியானது அமையும்.
அதே நேரத்தில் சிலர் படிப்பிற்கேற்ற பணி அமையாவிட்டாலும் மற்ற பணிகளில் பலவித வருமானங்களை பெற்று ஜொலிக்க காரணம் கீழ்க்கண்ட அமைப்பே.
ஒருவர் தான் கற்ற கல்விக்கேற்ற துறையில் ஈடுபடாது மாறாக வேறு விதமான தொழிலில் ஈடுபட்டு அதில் பல கோடி வருமானத்தை குவிக்க காரணம், அவருடைய ஜாதகத்தில் ஒன்பதாம் இடம் பாதிக்கப்பட்டு இருந்தாலும், தனஸ்தானமான இரண்டாமிடத்து அதிபதி,லக்னாதிபதி மற்றும் பத்தாம் அதிபதி இவர்களுக்கு வலுப்பெற்ற 11ஆம் அதிபதியின் தொடர்பு கிடைத்து, தொடர்புடைய திசா புத்திகளும் அவர்களுக்கு நடைமுறையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றிகளுடன்
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA.B.Ed
Cell 9659653138
ஜோதிடம் குறித்த தகவல்களை பெற இணைந்திருங்கள்..
https://chat.whatsapp.com/FNflPqQrX6nAICBFWgbVWx
https://t.me/Astrologytamiltricks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக