ஜோதிட சாஸ்திரத்தைப் பொறுத்தவரை தசா புக்திகளே சம்பவிக்கும் அனைத்து நிகழ்வுகளுக்கும் காரணமாகின்றன. அந்த வகையில் நடந்து முடிந்த புத்தியினையும், தற்போது நடந்து கொண்டிருக்கின்ற தசா புத்தியினை ஆராய்வதுடன், பார்க்க வந்தவரின் வயதினை ஒப்பிட்டுப் பார்ப்பதன் மூலம் ஜாதகம் பார்க்க வந்தவர் எந்த மாதிரியான பிரச்சனையில் இருப்பார் என்பதை ஓரளவு யூகிக்க இயலும்.
ஏற்கனவே 1 முதல் 10 வயது வரை உடையவர்களுக்கான பொதுவான கேள்விகள் என்னென்ன என்பதையும் அவற்றிற்கு பதிலளிக்கும் முறைகளையும், பத்து முதல் இருபது வயதுவரை உடையவர்களுக்கான பொதுவான கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய முறைகள் பற்றி விளக்கி உள்ளேன்.
அதற்கான Link முறையே...
ஒன்று முதல் பத்து வரை உடைய ஜாதகங்களுக்கான பொதுவான கேள்விகள்... விளக்கங்கள்..
https://iniyavanastrology.blogspot.com/2021/01/blog-post_31.html?m=1
பத்து முதல் இருபது வயதுவரை உடையஜாதகங்களில் உள்ள பொதுவான கேள்விகள் பதிலளிக்க வேண்டிய முறைகள்
https://iniyavanastrology.blogspot.com/2021/04/blog-post.html?m=1
மேற்கண்ட இரு பதிவுகளையும் படிக்காதவர்கள் அதைப் படித்துவிட்டு இந்த பதிவை படிக்கும் பொழுது தெளிவான விஷயங்கள் உங்களுக்கு தெரிய வரும்..
இன்றைய பதிவினில் 20 முதல் 35 வயது வரை உடையவர்களின் ஜாதகமாக இருப்பின் எது தொடர்புடைய கேள்விகளாக இருக்க கூடும் என்பதை ஆராய்வோம். முதன்மையான கேள்வி உயர்கல்வி பற்றியதாகவே இருக்கும். ஒன்பதாம் பாவகம் தொடர்புடைய தசா புக்தி நடை முறையில் இருந்தால் உயர்கல்வி தொடர்புடைய கேள்வியாகவே பெரும்பாலும் இருக்கிறது.
ஏனெனில் ஒன்பதாம் பாவகம் பட்ட மேற் கல்வியை குறிக்கின்றது. ஒன்பதாம் அதிபதி ஆட்சி உச்சம் பெற்று இருப்பது,
(இயற்கைப் பாபக் கிரகங்கள் ஒன்பதாம் வீட்டில் ஆட்சி உச்சம் பெறும்பொழுது சுபர் தொடர்பு இருப்பது அவசியம்)
சுப கிரகங்கள் ஒன்பதாம் வீட்டில் இருப்பது, கண்டிப்பாக உயர்கல்வியில் உயரிய இடத்தைப் பெற்றுத் தரும்.
மேற்கண்ட வழியில் ஜாதகர் உயரிய கெளரவத்தையும் புகழையும் நிலை நாட்டுவார்.
முனைவர் பட்டங்களைப் பெற்றவர்களின் ஜாதகத்தில் கண்டிப்பாக ஒன்பதாம் அதிபதி நல்ல நிலையில் இருப்பார்.
மேற்கண்ட ஒன்பதாம் அதிபதி, தன ஸ்தான அதிபதியான 2 ஆம் அதிபதியுடன் அல்லது இரண்டாம் இடத்துடன் தொடர்பு கொள்ளும் பட்சத்தில் கற்ற கல்வியால் மேன்மையானதாக தன வரவை பெறுவார். அந்த வகையில் உயர்கல்வி குறித்த கேள்விகளாக இருப்பின் 9ஆம் இடத்தை ஆராய்ந்து பதிலளிக்க வேண்டும்.
கிரகங்கள் தொடர்புடைய கல்வியும் அறிந்து வைத்திருப்பது அவசியம்.
அடுத்ததாக வேலை பற்றிய கேள்வியாக இருக்கலாம்.
எப்போது வேலை கிடைக்கும்? குறிப்பாக அரசு வேலைக்கு வாய்ப்பு உண்டா என்பது கேள்வியாக இருக்க கூடும்.
(ஒருவருக்கு அரசு வேலை எப்போது கிடைக்கும் விரிவான விளக்கங்கள்)
https://iniyavanastrology.blogspot.com/2020/12/blog-post_30.html?m=1
6-க்குடையவர், 10-க்குடையவர் தசா புத்தி நடப்பில் இருக்கும் பட்சத்தில் பெரும்பாலும் கேள்வி உத்தியோகம் குறித்த ஒன்றாகவே இருக்கும்.
ஏன் ஆறாம் அதிபதி நோயை தராதா? என நீங்கள் கேட்கலாம். இளம் வயதினருக்கு பெரும்பாலும் நோய் தொந்தரவு இருக்காது தானே. அதில் சந்தேகம் வரும் பட்சத்தில் நான்காம் அதிபதியான சுகாதிபதியின் நிலையையும் கவனித்துக் கொள்ளுங்கள்.
வேலை எப்போது கிடைக்கும் என்பதைப் பொறுத்தவரை பாக்கியாதிபதி நிலையை கவனித்து பதில் கூற வேண்டும்.
நான் அறிந்தவரை பெரும்பாலான ஜாதகங்களில் அரசு வேலை அமைந்த காலகட்டங்களில் நடைபெறும் திசா புத்தியில் பாதிக்கப்படாத பாக்கியாதிபதி தொடர்பு இருக்கவே செய்கின்றது.
அடுத்ததாக திருமணம் தொடர்புடைய கேள்வியாக இருக்கும் 2, 7 எட்டாம் பாவங்கள் பாதிக்கப்படாத வகையில் பெரும்பாலும் 21 to 27 வயதிற்குள் திருமணம் நடந்திருக்கும். 2,7,8 ஆம் பாவகங்கள் பாதிக்கப்பட்டு இருந்தால் திருமணக் கனவு முப்பதினை தாண்டிய பிறகே நனவாகக் கூடும். பாதிப்பின் தீவிரத்தைப் பொருத்து மேற்கொண்டும் திருமணம் தாமதமாகலாம். பொதுவாகவே 2,7,8 ஆம் பாவகங்களில் பாபக் கிரகங்களின் தொடர்பு இருக்கும் பொழுது முப்பதை கடந்த பின்னரே திருமணம் செய்தாக வேண்டும்.
அடுத்ததாக குழந்தை பாக்கியம் குறித்த கேள்வியாக இருக்கலாம். குழந்தை பாக்கியம் குறித்த கேள்விகளுக்கு முதன்மை கிரகமான புத்திரகாரகன் குருவின் நிலை, 5 ஆம் அதிபதியின் நிலை, பெண்கள் எனும் பட்சத்தில் ஒன்பதாம் அதிபதியின் நிலை. ஆண்களுக்கு ஆண்மையை சுட்டிக்காட்டும் வீரிய ஸ்தான அதிபதியான மூன்றாம் அதிபதியின் நிலை இவற்றை கவனத்தில் கொண்டே பலன் நிர்ணயிக்கப்பட வேண்டும்.
பெரும்பாலும் குருபகவான் வக்கிரம் பெற்று சுபர் தொடர்பு இல்லாத நிலையில் உள்ளவர்கள்,
மூன்றாம் அதிபதி வக்கிரம், நீசமடைந்து சுபர்தொடர்பின்றி பலவீனமடைந்து இருப்பவர்கள். ஐந்தாம் அதிபதி பலவீனமடைதல் இது போன்ற அமைப்புகளில் காலம் கடந்து தாமதாகமாகவே புத்திர பாக்கியம் கிடைக்கின்றது.
சுபர் தொடர்பு இருப்பின் பலன்களில் மாறுபாடு உண்டு.
அடுத்ததாக சுய தொழில் குறித்த கேள்வியாக இருக்கலாம். ஆறாம் அதிபதியை விட பத்தாம் அதிபதி வலுத்தால் சுய தொழிலில் மேன்மை உண்டு.ஆறாம் அதிபதி வலுத்து பத்தாம் அதிபதி பலம் குறைந்தால் அடிமை உத்யோகமே சிறந்ததாகும். பத்தாம் அதிபதி நல்ல நிலையில் இருந்தாலும் அட்டம, விரய ஸ்தான அதிபதிகளுடன் தொடர்பில் இருப்பின் அது தொடர்புடைய தசா புத்திகளில் ஜாதகர் பெரும் பொருளாதார இழப்பை சந்திக்கின்றார். பத்தாம் அதிபதி தசா நடைபெறும்பொழுது அதுகுறித்த கேள்விகளில் இதைக் கவனத்தில் கொண்டாக வேண்டும்.
அடுத்ததாக கணவன் மனைவியிடையே பிரச்சனை, கருத்து வேறுபாடுகள், ஒழுக்கக் குறைபாடு, தன்னுடைய துறையின் தவறான முறையற்ற செயல் பாடுகளால் மற்றொருவர் மனவேதனை அடைதல் தொடர்புடைய கேள்விகள்.
பொதுவாகவே வாக்கு ஸ்தானத்தில் பாப கிரகங்கள் நின்று தசா புக்தி நடத்தும் போது பேச்சால் குடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பெரும் பிரிவினை ஏற்பட வாய்ப்புண்டு.
அதேபோல் ஏழு மற்றும் எட்டாம் பாவகங்களில் பாப கிரகங்களின் தசா புக்தி நடக்கும்போது தன்னுடைய துணையால் ஜாதகர் மனவேதனை அடைவதற்கான வாய்ப்பு உண்டு.
இங்கே எட்டாம் வீட்டை குறிப்பிட காரணம்
ஏழாம் வீட்டை உங்களுடைய துணையின் இலக்னமாக பாவிக்கும் பொழுது எட்டாமிடம் துணையின் குடும்ப ஸ்தானமாக வரும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
சுக்கிரனின் வீடுகளில் பாப கிரகங்கள் நின்று தசாபுத்தி நடத்தி, கோட்சார ரீதியாக அட்டமச் சனி மற்றும் ஏழரைச் சனி நடைபெறும் காலகட்டங்கள். நீச சனியுடன் சுக்கிரன் தொடர்பு கொள்ளுதல். நீச சுக்கிரனுடன் சனி தொடர்பு, எட்டாம் வீட்டில் பாபத்துவ நிலையில் இருக்கும் சுபர் தொடர்பற்ற சுக்கிரனின் தசா புத்திகளில் ஒருவர் மனம் பிறழ்ந்து நெறி தவறி அவமானம், குடும்ப பிரிவினை சந்திக்க வாய்ப்புண்டு.
இதுபோன்ற நிலைகளில் தமக்குத்தாமே சுய கட்டுப்பாட்டை பின்பற்றியாக வேண்டும்.
மேலும் குடும்பாதிபதி நீசமாகி பாப கிரக தொடர்பு இருத்தால் அது தொடர்புடைய திசாபுத்திகளில் குடும்பமே அவமானத்தைச் சந்திக்க வாய்ப்பு உண்டு.
ஆனால் இவற்றினை முன்கூட்டியே தகுந்த ஜோதிடரின் துணைகொண்டு அறியும் பொழுது தன்னுடைய சுய புத்தி, விழிப்புணர்வின் துணை கொண்டும் தொடர்புடைய தெய்வ வழிபாட்டை மேற்கொள்வதன் வாயிலாகவும்,
ஜோதிடத்தின் வழிகாட்டுதல் வாயிலாகவும் கண்டிப்பாக பாதிப்பின் வீரியத்தை பெருமளவு குறைத்துக்கொள்ள இயலும்.
ஜோதிடம் என்பதே வழிகாட்டும் சாஸ்திரம் தானே...
அடுத்த பதிவில் 35 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்களின் ஜாதகங்களுக்கான பொதுவான கேள்விகள் என்னென்ன என்பதைப் பார்ப்போம்.
இணைந்திருங்கள்..
நன்றி
ப.இனியவன் கார்த்திகேயன் MA B.ED
Cell 9659653138
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக