சனி, 22 ஜனவரி, 2022

குழந்தை ஆணா ? பெண்ணா?

பிறக்கவிருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? உதாரண ஜாதகத்துடன் விளக்கம்...

ஜோதிட சாஸ்திரத்தைப் பொறுத்தவரை மனித வாழ்க்கையில் நடக்கக்கூடிய சம்பவங்கள் நடக்கும் தசா புத்திகள் உடன் தொடர்புடையவை...
 
ஏற்கனவே பிறக்கவிருக்கும் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்பதை கண்டறிவதற்கு ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ள வழிமுறைகள் என்னென்ன? 
எவ்வாறு கண்டறிய வேண்டும் என்பதை ஏற்கனவே ஒரு பதிவாக விளக்கி இருந்தேன்.
https://iniyavanastrology.blogspot.com/2021/02/blog-post_6.html?m=1

தற்போது உதாரண ஜாதக விளக்கங்களுடன் பார்ப்போம்.. 

தம்பதியினருக்கு இலக்ன இராசிக்கு 5ஆம் பாவகம், ஐந்தாம் அதிபதி மற்றும் நடப்பிலுள்ள தசா புத்திகள் ஆண் ராசிகள், ஆண் கிரகங்களுடன் அதிகபட்ச தொடர்பு இருக்கும் பொழுது ஆண் குழந்தையை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

இதேபோல் நடப்பிலுள்ள தசா புத்திகள் பெண் ராசிகள், பெண் கிரகங்களுடன் அதிகபட்ச தொடர்பில் வரும்போது 
பெண் குழந்தையைப் பெற்றெடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
பிறக்கவிருக்கும் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்பதை கண்டறிவதற்கு தம்பதியினரின் இருவருடைய ஜாதகத்தையும் நடப்பு தசா புத்திகளும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்றாலும் ஆணுடைய ஜாதக அடிப்படையில் உள்ள  தசா புத்திகளுக்கே முக்கியத்துவம் சற்று கூடுதலாக கொடுக்க
வேண்டும். 
ஏன் ஆணுடைய ஜாதகத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை இடையே விளக்குகின்றேன்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள ஜாதகம் ஒரு ஆணுடைய ஜாதகம்..

அவருடைய மனைவி தங்களுக்கு என்ன குழந்தை பிறக்கும் என்ற கேள்வியை கேட்டு இருவருடைய ஜாதகங்களையும் என்னிடம் கொடுத்தார்

5-2-1996 ஆம் ஆண்டு பிறந்த இவர் விருச்சிக லக்னம் கடக ராசியில் பிறந்துள்ளார்..


விருச்சிக லக்கினத்திற்கு ஐந்தாம் வீட்டு அதிபதியான குரு, தன்னுடைய ஆண் ராசியான  தனுசுவில் மூலத்திரிகோண வீட்டில் ஆட்சி பெற்று இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராசி அடிப்படையில் ஆராயும்பொழுது ராசிக்கு ஐந்தாம் வீட்டு அதிபதியான ஆண் கிரகமான செவ்வாய், உச்சம் பெற்ற நிலையில் மற்றொரு ஆண்கிரகமான சூரியனுடன் இணைந்து இருக்கின்றார்.

இலக்னம் மற்றும் ராசி இரண்டின் அடிப்படையில் ஆராயும்பொழுது பெரும்பாலும் இவருக்கு முதல் குழந்தை ஆண் குழந்தையாக இருப்பதற்கே அதிகம் என்று தோன்றுகிறது.

முதல் குழந்தை ஆணாக இருந்தாலும் நடக்கக்கூடிய தசா புத்திகள் அதற்கு ஒத்துழைக்க வேண்டும்.
தசா புத்திகள் அதற்கு ஒத்துழைக்கின்றனவா? என்று பார்ப்போம்.
இவருக்கு நடந்து கொண்டிருக்கின்ற தசா புத்திகளை பொருத்தவரை தற்போது இவருக்கு சுக்கிர திசையில் குரு புத்தி  நடந்து வருகிறது. (28-09-2023)

பெண் கிரகமான தசா நாதன் சுக்கிரன், பெண்ராசியில் கேதுவுடன் இணைந்த நிலையில் தசா நடத்திக் கொண்டிருக்கின்றார்.

தசா நாதனான சுக்கிரன் குருவின் நட்சத்திரமான பூரட்டாதி 4-ஆம் பாதத்தில் இருக்கின்றார்.

சாரநாதனான குரு தன்னுடைய ஆண் ராசியில் மூலத்திரிகோண நிலையில் இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 தசா காலம் என்பது நீண்ட கால அளவை கொண்டு இருப்பதால் ஒரு குறிப்பிட்ட சம்பவம் எப்போது நடக்கும், எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்வதற்கு நாம் புத்தியை ஆராய வேண்டும்.
இன்னும் தெளிவு வேண்டுமெனில் அந்தரம் பார்க்கப்படல் வேண்டும்.

அந்த வகையில் நடக்கக்கூடிய புத்தி ஐந்தாம் வீட்டு அதிபதியான ஆண் கிரகமான குருவின் புத்தி ஆகும்.
அந்த ஆண் கிரகமான குரு தன்னுடைய ஆண் ராசியில் தனுசுவில் ஆட்சி பெற்ற நிலையில் மற்றும் மூலத்திரிகோண வீட்டில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் தசாநாதன் பெண் கிரகமாக இருந்து பெண் வீட்டில் இருந்தாலும், புத்திநாதன் ஆண் கிரகமாக ஆண் வீட்டில் இருப்பதால் ஆண் குழந்தை பிறப்பதற்கான வாய்ப்புகளே அதிகம் என்று தீர்மானித்தோம்.
நுட்பமாக கவனிக்கும்போது தசா நாதன் சுக்கிரன், ஆண் கிரகமான குருவின் சாரம் பெற்று இருக்கின்றார் என்பது கவனிக்கத்தக்கது.

அடுத்ததாக அவருடைய மனைவியின் ஜாதகத்தைப் பார்ப்போம்.
அவருடைய மனைவி, கணவரை விட வயதில் மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


16-7-1991 அன்று பிறந்த அவர் மகர லக்னம், கன்னி ராசியில் பிறந்துள்ளார்.

மகர லக்கினத்திற்கு ஐந்தாம் வீட்டு அதிபதி சுக்கிரன் எட்டில் மறைந்து, சிம்மத்தில் செவ்வாயுடன் இணைந்த நிலையில் இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவருடைய ஜாதகத்தை பொருத்தவரை ஐந்தாமிடம் பெண் ராசியாகி ஐந்தாம் வீட்டு அதிபதி பெண் கிரகமாக இருந்தாலும், அவர் ஆண் ராசியில் ஆண் கிரகத்துடன் இணைந்து நிலையில் இருக்கின்றார் என்பது கவனிக்கத்தக்கதாகும்.

அதுமட்டுமின்றி சுக்கிரனுக்கு சிம்மம் பகை வீடாகும். ஆனால் செவ்வாய்க்கு நட்பு வீடாகும்.

அந்த வகையில் ஆண் கிரகமான செவ்வாய்தான் ஐந்தாம் வீட்டு அதிபதியுடன் இணைந்த நிலையில் இங்கு அதிகம் வலுப்பெறுகின்றார்.

ராசிக்கு ஐந்தாம் வீட்டை அடிப்படையாகக் கொண்டு ஆராயும்போது ராசிக்கு 5-ஆம் இடம் பெண் ராசியாகி அங்கே சனி ஆட்சி பெற்று நிலையில் இருக்கின்றார்.

ராசிக்கு ஐந்தாம் வீட்டில் ஆட்சி பெற்ற நிலையில் இருக்கக்கூடிய ராசிக்கு 5-ஆம் அதிபதியான சனி, வலுப் பெற்ற உச்ச நிலையில் இருக்கக்கூடிய ஆண் கிரகமான குருவின் பார்வையைப் பெறுகிறார் என்பது கவனிக்கத்தக்கதாகும்.

பிறக்கவிருக்கும் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்பதைக் கண்டறியக் கூடிய விதியினைப் பொருத்தவரை இலக்ன, ராசிக்கு 5-ஆம் இடம், ஐந்தாம் வீட்டு அதிபதி  வலுப்பெற்ற ஆண் கிரகம், ஆண் ராசிகளுடன் அதிகபட்ச தொடர்பு ஏற்படும்போது ஆண் குழந்தையையும், வலுப்பெற்ற பெண் கிரகம், பெண் ராசிகளுடன் அதிகபட்ச தொடர்பை பெறும் போது பெண் குழந்தையை பெற்றெடுப்பார்கள்  என்பது பொதுவான விதியாகும்.
அந்த வகையில் இவருடைய ஜாதகத்தில் இலக்ன ராசிக்கு ஐந்தாம் வீட்டு அதிபதிகளுடன் வலுப்பெற்ற ஆண் கிரகங்களின் தொடர்பே அதிகம் இருக்கின்றது.

அதனடிப்படையில் ஆண் குழந்தைக்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என எடுத்துக்கொண்டாலும் நடக்கக்கூடிய தசா புத்திகள் அதற்கு ஒத்துழைக்கின்றனவா என்பதையும் பார்க்கவேண்டும்.
இவருக்கு நடந்து கொண்டிருக்கக் கூடிய தசா புத்தியை பொறுத்தவரை 
இவர் கேள்வி கேட்ட காலத்தில் இவருக்கு ராகு தசையில் புதன் புக்தி நடந்து கொண்டிருந்தது.

இவரது ஜாதகத்தில் தசா நாதனான ராகு ஆண் ராசியான தனுசுவில் இருக்கின்றார்.
அவருக்கு வீடு கொடுத்த குரு கடகத்தில் உச்சம் பெற்ற நிலையில் இருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புத்திநாதனான பெண் கிரகமான புதன் பெண்ராசியான கடகத்தில் இருக்கின்றார்.
புத்திநாதனான புதன் தன்னுடைய பெண் ராசியான கன்னியுடன் பரிவர்த்தனை அமைப்பில் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் புக்தி நாதனான பெண் கிரகமான புதனுக்கு, பெண் அமைப்புகளுடன் தொடர்பு அதிகமாக இருக்கின்றது என்பதும் கவனிக்க வேண்டும்.
அதுமட்டுமின்றி இங்கே பெண் கிரகமான புதன் தன்னுடைய சுய சாரமான ஆயில்யம் நட்சத்திரத்திலே இருக்கிறார் என்பதும் கவனிக்கத்தக்கதாகும்.

இருப்பினும் இவருடைய ஜாதகத்தில் புத்தி நாதன் புதன், வலுப்பெற்று உச்ச நிலையில் இருக்கக்கூடிய ஆண் கிரகமான குருவுடன் இணைந்து உள்ளார் என்பதையும், அந்த குரு பகவான் ராசிக்கு 5-ஆம் இடத்தைப் பார்க்கிறார் என்பதையும் நுட்பமாகக் கவனிக்க வேண்டும்.

குழந்தையை பெற்றெடுப்பதற்கான காலத்தை அடிப்படையாகக்  கொண்டு ஆராயும் போது அப்போது அவருக்கு ராகு தசையில் சூரிய புக்தி நடந்து கொண்டிருக்கும். சூரியன் பரிபூரண ஆண் கிரகம்.
சூரியனுக்கு வீடு கொடுத்த புதன் இங்கே பரிவர்த்தனை அமைப்பினில் உச்சம் பெறுவதால் வீடு
கொடுத்தவர் வலு பெறுகின்றார் என்ற அடிப்படையில் பரிபூரண ஆண் கிரகமான சூரியன் வலுப்பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அதுமட்டுமின்றி  ஆண் கிரகமான சூரியன் ஆண் ராசியில் இருக்கின்றார். அதோடு ஆண் கிரகமான குருவின் நட்சத்திரமான புனர்பூசம் 3-ஆம் பாதத்தில்  வர்க்கோத்தம அமைப்பில் இருக்கிறார் என்பதும் கவனித்தக்கதாகும்.

தம்பதியினர் இருவருடைய ஜாதகத்திலும் நடப்பிலுள்ள தசா புத்திகள் மற்றும் 5ஆம் இடம் இவற்றை ஆராயும் போது வலுப்பெற்ற ஆண் கிரகங்கள், ஆண் ராசிகளுடன் அதிகபட்ச தொடர்பு பெறுவதால் நீங்கள் ஆண் குழந்தையை பெற்றெடுப்பீர்கள் என்று உறுதியாக கூறினோம்.

அவர் கடந்த அக்டோபர் மாதம் 28ஆம் தேதி(2021) மிகவும் சரியாக கணித்துள்ளீர்கள் என்று சொல்லி
ஆண் குழந்தை பிறந்ததாக கூறி மகிழ்ச்சியினை தெரிவித்துக் கொண்டார்.

அந்த வகையில் பிறக்கவிருக்கும் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்பதை கண்டறிவதற்கு தம்பதியினர் இவருடைய ஜாதகத்தில் ஐந்தாமிடம் ஐந்தாம் வீட்டு அதிபதி மற்றும் நடப்பில் உள்ள தசா புத்திகள் இவை வலுப்பெற்ற ஆண் கிரகங்களுடன், ஆண் ராசிகளுடன் அதிகபட்ச தொடர்பு பெரும் பொழுது ஆண் குழந்தையை பெற்றெடுப்பதற்கும், வலுப்பெற்ற பெண்கிரகங்களுடன் பெண் ராசியுடன் தொடர்பு ஏற்படும்போது பெண் குழந்தை பிறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பது தெளிவாகிறது.
முதல் குழந்தை 5-ஆம் இடத்தையும் 2-ஆம் குழந்தைக்கு 7-ஆம் இடத்தையும் கவனித்தாக வேண்டும்.

(கணிக்க உதவிய எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றிகள்..)

அடுத்த பதிவில் மீண்டும்  உதாரண ஜாதகங்களுடன் என்ன குழந்தை பிறக்கும் என்பதை சரியாக கண்டறிவது எவ்வாறு என்பதை விளக்குகின்றேன்.

நன்றிகள்...
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA.B.Ed
Cell 9659653138

3 கருத்துகள்: