புதன், 27 செப்டம்பர், 2023

தசா புத்தி கொண்டு பலனறியும் விதம்.. உதாரண ஜாதகங்கள் மற்றும் விளக்கங்கள்

ஜோதிட ரீதியாக மனித வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் அப்போதைய தசா புக்தியுடன் தொடர்புடையதே ஆகும். ஜாதகரின் வயது,நடந்து முடிந்த தசா புத்திகள்,
நடப்பு தசா புத்திகள், பாவகங்களின் ஆதிபத்தியம் மற்றும் கிரகங்களின் காரகத்துவம் இவற்றின் அடிப்படையில் ஜாதகர் தற்போது என்ன பிரச்சினையில் இருப்பார் என்பதை யோசிக்க இயலும்.இனி வரக்கூடிய காலங்கள் எவ்வாறு இருக்கும் என்பதையும் வரப்போகின்ற தசா புக்தியின் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.அதை ஒரு உதாரண ஜாதகத்தின் மூலமாக அறிந்து கொள்வோம்.
ரிஷப லக்னம், ரிஷப ராசியில் பிறந்த இந்த ஜாதகருக்கு தற்போதைய வயது 53. இவருக்கு குரு தசாவில் ராகு புத்தி முடிந்து நடந்து முடிந்திருக்கிறது.

ரிஷப லக்கினத்திற்கு ஆகாத அட்டமாதிபதி குரு, கடன், நோய், வம்பு, வழக்கு போன்ற பிரச்சனைகளை கொடுக்கக்கூடிய ஆறாம் வீட்டில் அமர்ந்து தசா நடத்திருக்கிறார்.
புத்திநாதன் ராகுவும் பத்தில் நின்று (பத்தாம் அதிபதி சனி நீசம் பெற்ற நிலையில்) புத்தி நடத்தியிருக்கிறார்.

அந்த வகையில் ஆறில் நின்ற அட்டமாதிபதி குருவால் உடல்நலக்குறைவு மற்றும் நோய் சார்ந்த பிரச்சினைகளும், பத்தில் நின்ற,  நீசம் பெற்ற பத்தாம் அதிபதி சனியின் வீட்டில் நின்ற ராகுவின் புத்தியால் தொழில் சார்ந்த பிரச்சினைகள் இருக்கும் என்பதை முதலில் யூகித்துக் கொண்டேன்.

எட்டாம் அதிபதி சுபராகி ஆறாம் வீட்டில் (துலாம் வீடு) இருக்கும்பொழுது கண்டிப்பாக நோய் சார்ந்த பிரச்சினைகள் இருக்கவே செய்யும்.

என்ன நோய் பாதிப்பு இருந்திருக்கும்?

இவருடைய ஆறாம் பாவகமான துலாம் கால புருச லக்னத்திற்கு ஏழாவது பாவகம். மனித உடல் உறுப்புகளில் உடலின் அடிவயிறு, தொப்புள், கிட்னி, பாலின சுரப்பிகள்,கர்ப்பப்பை இவற்றை சுட்டிக்காட்டும் இடம். ஆறாம் அதிபதியும் லக்னாதிபதியுமான சுக்கிரன் இங்கு சனியின் மூன்றாவது பார்வையில் மற்றும் செவ்வாயின் இணைவில் பலவீனமாக இருக்கிறார்.

கால புருஷ லக்னத்திற்கு ஏழாவது பாவகம் அதன் அதிபதி சுக்கிரனும் பாதிக்கப்பட்டு இருந்தால் கண்டிப்பாக ஜாதகருக்கு கிட்னி சார்ந்த பிரச்சினைகள் சம்பந்தப்பட்ட தசா புத்தியில் ஏற்படும் .
கடந்த மூன்று மாதங்களாக இவருக்கு நடந்து கொண்டிருக்கக் கூடிய புத்தியை பொருத்தவரையில் சனி தசாவில் சனி புத்தி ஆகும். தற்போதைய தசாநாதனும் புத்திநாதமான சனி, இவருடைய ஆறாம் வீட்டு அதிபதி சுக்கிரனையும் 6 ஆம் வீட்டையும் பார்க்கின்றார்.முழு சுபரான அட்டமாதிபதி குருவும் ஆறில் அமர்ந்து நோயை உறுதிப்படுத்துகிறார்.
பொதுவாக சுப கிரகங்கள் ஆறாம் வீட்டில் இருப்பது சம்பந்தப்பட்ட தசா புத்திகளில் அந்த பாவகம் சார்ந்த விஷயங்களில் உடல் நலம் சார்ந்த பிரச்சனைகளை ஏற்படுத்தும்.ஆகவே இவருக்கு ஆறாம் வீட்டையும், ஆறாம் வீட்டு அதிபதியையும் பார்த்த சனி புத்தி, ஆரம்பித்த பிறகு கிட்னி மற்றும் அடி வயிறு சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டீர்களா என்று கேட்டேன்.ஜாதகர்  கிட்னியில் கல் இருப்பதன் காரணமாக தற்போது ஒரு அறுவை சிகிச்சை செய்தோம் என்றார்.அறுவை சிகிச்சையை குறிக்கும் சனி மற்றும் செவ்வாய் சுக்கிரனுடன் தொடர்பு பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
சீறுநீரகம் சார்ந்த பிரச்சனைகள் சரியாவதற்கு நிறைய தண்ணீர் குடிப்பதையும், நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் உணவு முறைகளை பின்பற்றுவது நல்லது. அதோடு
திருச்சி மாவட்டம் ஊட்டத்தூரில் அமைந்துள்ள அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீசுத்தரத்தினேஸ்வரர் திருக்கோயில் சென்று வர சொன்னேன். அங்குள்ள நடராஜர் தலம் சிறுநீரக குறைபாடு உள்ளவர்களுக்கு சிறந்த பரிகார ஸ்தலமாக கோவில் உள்ளது என்பதால் அங்கு சென்று வர அறிவுறுத்தினேன்.

அடுத்ததாக தொழிலிலும் வருமானம் இல்லை. தற்போதைய  தொழிலை மாற்றலாமா என்றார்.

இவரது பத்தாம் பாவகாதிபதி சனி லக்னத்திற்கு 12ல் அமைந்து நீச நிலையில் தசாபுத்தி நடத்துகிறார். குரு பார்வை சனிக்கு இருப்பது போல் தோன்றினாலும் டிகிரி அடிப்படையில் பார்வையில் வித்தியாசம் உண்டு. தசாநாதன் சனி, புதனுடன் இணைந்து இருந்தாலும் சனி தரக்கூடிய பாதிப்புகளை பெரிய அளவில் புதனால் தடை செய்ய இயலாது. புதன் இவருக்கு இரண்டாம் வீட்டுக்குரிய தனாதிபதி என்பதாலும் தசாநாதன் சனி இரண்டாம் வீட்டை பார்ப்பதாலும் வருமானம் மற்றும் பண விஷயத்தில் சனி புத்தி முடியும் வரை பிரச்சனைகள் இருக்கவே செய்யும்.

தொழில் மாற்றம் செய்யலாமா?

முதலில் இவர் எந்த தொழிலில் இருந்திருப்பார் என்பதை பார்ப்போம்.

இவருடைய ஜாதகத்தில் பத்தாம் அதிபதியான சனி, தனாதிபதியான (இரண்டாம் அதிபதி) புதனுடன் சேர்க்கை பெற்றுள்ளார். அந்த வகையில் சனிக்குறிக்கக்கூடிய காரகத்துவம் சார்ந்த தொழில்களே இவருக்கு வருமானத்தை தந்திருக்கும்.

சனி நின்ற மேஷம் நில ராசி, கடின உழைப்பை சுட்டிக்காட்டக்கூடிய செவ்வாயின் வீடு.அந்த வகையில் சனி குறிக்கக்கூடிய உடல் உழைப்பு சார்ந்த இரும்பு, பட்டறை, கட்டிட வேலை, விவசாயம் சார்ந்த பணிகளே அமைந்திருக்க வாய்ப்பு உண்டு என்றேன்.எங்களுடைய பரம்பரைத் தொழில் தச்சு வேலை என்றும் எனது அப்பாவிற்கு பிறகு நானும் அந்த தொழிலையே தற்போது வரை செய்து வருகிறேன் என்று கூறினார்.(ரிஷப லக்கினத்திற்கு சனி தந்தையை சுட்டிக்காட்ட கூடிய ஒன்பதாம் அதிபதி என்பது குறிப்பிடத்தக்கது)
தற்போது சனி தசா நடப்பதால் உடல் உழைப்பு சார்ந்த தச்சு வேலையையே தொடர்ந்து செய்வீர்கள். அந்த தொழில் செய்வதும் நன்மைதான் என்று சொல்லினேன்.

ஆனால் முன்பு போல் வேலை கிடைப்பதில்லை என நொந்து கொண்டார். தற்போதைய புக்திநாதனான  சனி, தனஸ்தானமான இரண்டாம் வீட்டை பார்த்து, இரண்டாம் அதிபதி  புதனுடனும் சேர்ந்து புத்தி நடத்துவதால் கோச்சார ரீதியாக ராகுவும் ரிஷப ராசிக்கு விரய ஸ்தானத்தில் இருப்பதால் பணரீதியான பிரச்சினைகள் இருக்கவே செய்யும். அக்டோபருக்கு பின்பு கோச்சார ராகு ரிஷப ராசிக்கு இலாப ஸ்தானத்திற்கு இடம் பெயர்வதால் பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களிலுள்ள பிரச்சனைகள் படிப்படியாக அகலும் என்றேன்.

சனி அந்தரத்திற்கு பின்பு வரக்கூடிய தனாதிபதி புதன் அந்தரமும் (புதன் இரண்டாம் வீட்டுடன் பரிவர்த்தனையாவதால்) பண விஷயங்களில் உள்ள பிரச்சனைகள் சரியாகும் என்றேன்.

தசாநாதன் சனிக்குரிய சில வாழ்வியல் பரிகாரங்களை பின்பற்ற சொன்னேன். அதோடு சனிக்கிழமைகளில் வரக்கூடிய பிரதோஷ வழிபாடுகளில் கலந்து கொள்வது தொழில் இருக்க கூடிய தடைகளை விலக்கும் என்று கூறி அனுப்பி வைத்தேன்.

இதிலிருந்து நடப்பு தசா புத்திகள் ஜாதகருடைய வாழ்வில் எது மாதிரியான தாக்கங்கள் ஏற்படுத்தும் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

இலக்னம் முதல் 12 பாவகங்கள் குறிக்கக்கூடிய விஷயங்கள் கிரகங்களின் காரகத்துவ விஷயங்கள், தசாபுக்தி பலன் தரும் விதம் இவற்றை தெளிவாக அறியும் பொழுது ஜாதகருடைய நடந்து முடிந்த, நடப்பு தசா புக்திகளின் நிலை ஜாதகருக்கு தற்போது என்ன பிரச்சனைகள் இருக்கும் என்பதையும்,
வரப்போகின்ற தசா புத்திகள் ஜாதகருக்கு எப்படி இருக்கும் என்பதையும் கணிக்க முடியும்.
நன்றிகள்..
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA B.Ed, MA Astrology.
Cell 9659653138

ஜோதிடம் மற்றும் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட தகவல்களை பெறுவதற்கு இணைந்திருங்கள்..

https://t.me/Astrologytamiltricks

https://chat.whatsapp.com/C2NvgMxacNlFBpcyQq3Gmg

https://www.facebook.com/groups/3741


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக